வரதா வரம்தா... (29)
பிப்ரவரி 20,2020,12:26  IST

அந்த வைணவ அன்பரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்திய நிலையில், வரதனின் சன்னதி நோக்கி நடந்த வேதாந்த தேசிகர் கம்பீரமாக காட்சியளித்த வரதனை உருக்கமாக வணங்கினார். சன்னதியின் கைங்கர்யபரர்கள் தீர்த்தம், துளசி அளித்து விட்டு, வரதனுக்கு சூட்டிய மாலை ஒன்றையும் அணிவித்தனர்.
எப்போதும் கழுத்தில் மாலை விழுந்தால் உடனே அகற்றிடக் கூடாது. கண்ணேறு விழாமல் தடுப்பதிலும் அவை நிகரில்லாததாகும். எனவே அணிவிக்கப்பட்ட மாலையோடு புறப்பட்டார் தேசிகர்.
என்ன தோன்றியதோ?
திரும்ப வந்து வரதனை சேவித்தார். அவரின் செயல் அங்கிருப்பவருக்கு வியப்பைத் தந்தது.
''சுவாமி... வரதனைப் பிரிவது போல பலமுறை தரிசிக்கிறீர்களே... அப்படி ஏதும் திட்டம் உள்ளதா'' என்றார் ஒரு கைங்கர்யபரர்.
ஆம்... சிலகாலம் வரதனை பிரியத்தான் போகிறேன். அதனாலேயே திரும்ப தரிசிக்கத் தோன்றுகிறது''
''அப்படியாயின் எங்கு செல்வதாக உத்தேசம்?''
''அரங்கன் என்னை அழைக்கின்றான். அங்கே மிக மிக சலனமான ஒரு கால நிலை...''
''நாங்களும் அதை அறிந்தோம்... அப்படி ஒரு நிலை தானே இங்கேயும்?''
''நாடு முழுக்க இப்போது சலனமான நிலைதான். நமது பண்பாடு, பாரம்பரியம், தொன்மை இவைகளுக்கு சோதனைக் காலம் என்பதில் சந்தேகமில்லை.''
''அப்படியானால் காஞ்சியில் பிறந்து வளர்ந்த தாங்கள் இங்கல்லவா இருக்க வேண்டும். இங்கிருந்து இப்போது செல்வது சரியா?''
''உங்கள் கேள்வி சரிதான். ஆனாலும் அழைப்பவன் அரங்கன் என்னும் போது மறுக்க நான் யார்?''
''இப்படி ஒரு பதிலா? ஒருபுறம் உங்களுக்கு அழைப்பு! மறுபுறம் ஸ்தானீகர் கனவில் வரதன் குளத்தில் மூழ்கி மறைகிறான். இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்வது... தெரியவில்லையே?''
''இவன் வேறு அவன் வேறு இல்லை...அவனுக்கு ஆயிரம் நாமங்கள். அதில் ஒன்று வரதன். மற்றொன்று அரங்கன். இங்கே நின்று வரம் தருகிறான். அங்கே பாம்பணை மீது துயின்று சேவை சாதிக்கிறான். நின்றபடி இருப்பதால் இங்கோர் விழிப்பு நிலை இருப்பதாக கொள்ளலாம். அங்கே சயன கோலத்தில் தாமச உறக்கத்தில் அல்லவா இருக்கிறான்? எனவே அங்கே எதிர்ப்பு சக்திகள் அதிகம் நடமாடக் கூடும். அவைகளை எதிர்கொள்ள அவன் என்னை பணிக்கப் போகிறானோ என்னவோ?''
''தங்கள் விளக்கம் கேட்கச் சரியாக உள்ளது. அதே சமயம் இங்கே உத்பாதம் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் எங்களுக்குள் எழுகிறதே?''
''அஞ்சாதீர்கள்!
ஒரு வைணவன் எதற்குமே அஞ்சக் கூடாது? அவனது இரு தோளிலும் சங்கு, சக்கரம் இருந்து அவனுக்கு துணையாக திரும்பும் என பறை சாற்றுகின்றன. இந்த வேளை உங்களுக்கு நான் பிரகலாத பிரபுவை உதாரணம் காட்ட விரும்புகின்றேன். பெற்ற தந்தையாலேயே துன்பத்திற்கு ஆளான நிலையை எண்ணுங்கள். நெருப்பில் இட்ட போதும், நீரில் இட்ட போதும், யானையை ஏவி மிதிக்கப் பார்த்த போதும், மலையில் இருந்து உருட்டிய போதும், அவன் சிறிதும் அஞ்சவில்லை. 'ஓம் நமோ நாராயணா' என்ற நாமத்தை சொல்லியே துன்பம் நீங்கப் பெற்றதை எண்ணிப் பாருங்கள். அவனுக்கு மட்டுமா துன்பம் நேரிட்டது? மடுவில் முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திர யானையின் பிளிறல் கேட்டு, கருடன் மீது பறந்தே வந்து துயர் போக்கியதை எண்ணுங்கள். நாம் எண்ணும் முன் நம் முன்னால் விஸ்வரூபம் எடுத்து விடுபவன் அவன். அப்படி ஒரு பரமபுருஷன் நமக்கு துணையிருக்கும் போது எதற்கு வீண் பயம்?''
வேதாந்த தேசிகனின் பதிலால் சற்றே அமைதி கண்ட அவர்கள் ''ஸ்ரீரங்கம் சென்று விரைந்து வாருங்கள். தங்களுக்காக வரதன் காத்திருக்கிறான் என்பதை மறவாதீர்கள்'' என்றார் ஒரு வைணவர்.
''என் மீதுள்ள அன்பால் தாங்கள் இப்படி மிகைபட பேசிடக் கூடாது. எனக்காக வரதன் காத்திருப்பதா? இது உணர்ச்சிப்பிழை! அவன் எப்போதும் காத்து நிற்பவன். அவனுக்காக நாம் காத்திருக்கலாம். நமக்காக அவன் காத்திருத்தல் என்பது அகம்பாவம் என்றாகி விடும். எனவே வார்த்தைகளை கவனித்து பேசுங்கள்'' என உணர்ச்சி மிகுதியோடு பேசிய வைணவரை திருத்தி விட்டு புறப்பட்டார் வேதாந்த தேசிகன்.
ஆலய வெளியில் ஒருவர் தேசிகனை துாரத்தில் இருந்து கவனித்தபடி இருந்தார். அவரது பார்வையே சரியில்லை. மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றவர், வேகவதி ஆற்றின் கரையை அடைந்தார்.
அங்கே மரநிழலில் சிலர் அமர்ந்திருந்தனர். கோயிலில் இருந்து வந்த மனிதரைக் காணவும் அவர்கள் எழுந்து நின்று பார்த்தனர். ஒருவர் பேச்சை ஆரம்பித்தார்.
''என்னய்யா... போன விஷயம் என்னாச்சு?''
''அந்த தேசிகனை தனியே சந்திக்கும் சூழல் ஏற்படவில்லை''
''அப்படியானால் அவரைக் கொல்ல இம்முறையும் முடியவில்லை என்று சொல்''
''ஆம்... என்னால் மட்டுமல்ல... யாராலும் அவரை எதுவும் செய்ய முடியாது. அவரை அந்த வைணவர்கள் கொண்டாடுவதில் அர்த்தம் நிறைய இருக்கிறது''
''இது என்ன உளறல்? அவன் உன்னையும் ஏதாவது வசியம் செய்து விட்டானா?''
''அப்படி செய்திருந்தால் அவர் பின்னால் அல்லவா சென்றிருப்பேன்? இப்படியா இங்கே திரும்ப உங்களை நாடி வருவேன்?''
''அப்படி இல்லை என்றால் எதை வைத்து அவனை நீயும் பெருமைப்படுத்தி பேசுகிறாய்?''
''அவர் நாம் நினைப்பது போல அற்பமான வித்தை கற்ற மாயாவி அல்ல.. பொன் பொருளுக்கு மயங்கும் சராசரி மனிதரும் அல்ல! அவர் நிஜமாகவே இறையருள் மிகுந்தவர். அவரை திருமலை வேங்கடவன் அம்சமாக வைணவர்கள் கருதுவதில் தவறில்லை''
''அப்படியானால் அவர் பாடிய ஸ்ரீஸ்துதி என்னும் பாடலுக்கு மகிழ்ந்து அந்த மகாலட்சுமியே வந்து பொன்பொருளை குவித்தாளா?''
''ஆம்... அது தான் உண்மை''
''இல்லை... அது குட்டிச்சாத்தான் செயல்''
''அது உன் கருத்து. நான் நம்பத் தயாரில்லை! அவர் பவித்ரமானவர். அந்த பெருமாளின் அம்சம் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் அவரை அரங்கனே அழைத்திருக்கிறான்''
''இது என்ன புதுக்கதை?''
''கதையல்ல... நிஜம்!''
''அரங்கப் பெருமான் இவனை அழைத்தாரா? நம்ப முடியவில்லையே?''
''நாம் எதைத் தான் நம்பினோம். இதை நம்புவதற்கு?''
''நீ இப்படி மாறுவாய் என நாங்கள் எண்ணவில்லை''
''இதை நான் நல்ல மாற்றமாய் கருதுகிறேன். அந்நியர்களை எண்ணி எல்லோரும் பயந்தபடி இருக்க, அவரிடம் மட்டும் துளியும் அச்சமில்லை. எம்பெருமான் நாம் எண்ணி முடிக்குமுன் நம் முன் நிற்பான் என தீர்க்கமாக நம்புகிறார். ஒரு மகத்தான முனிவருக்கே இது சாத்தியம்!''
வெயிலில் அவர் நடந்த போது கருடன் அவர் மீது நிழல் விழும்படி பறக்கிறது. இதுவே அவர் ஒரு முனிவர் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது. எனவே நம் வழிமுறைகளுக்கு அவரால் ஆபத்து நேரும் என நாம் அஞ்சத் தேவையில்லை.
நம்மிடம் இருப்பது பொறாமை மட்டுமே! ஆனால் அவரிடமோ ஞானமும், அறிவும் கொட்டிக் கிடக்கிறது. அது அவர் முகத்தில் தேஜசாய் ஒளிர்கிறது!''
கோயிலில் வேதாந்த தேசிகனை உற்று கவனித்த அந்த மனிதர் திரும்பி வந்து இத்தனை துாரம் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பேசிய மனிதரும் இறுதியாக, ''நான் இனி உங்களைப் போல் பொறாமை கொண்டு அவர் அழிந்திட விரும்பவில்லை. என் வழியும் இனி அவர் வழியே..! அதிலும் நம் நாட்டை அந்நியர்கள் கைப்பற்றத் துடிக்கும் இந்த நேரத்தில் நமக்குள்ளேயே பிரிந்து கிடப்பது சரியில்லை. இறுதியாக ஒன்றை சொல்கிறேன். அவரை அழிக்க நினைப்பது மடத்தனம். அவரை அழிக்கவும் இயலாது. அவராலேயே நம் நம்பிக்கைகளும், தத்துவங்களும் வாழ்ந்திடும். இதை மறவாதீர்கள்'' என கூறி விட்டு புறப்பட்டார்.
அப்போது அவர்களில் ஒருவன் உரத்த குரலில், ''அடேய் துக்கிரி! நான் சொல்லப் போவதை கேட்டு விட்டுச் செல். நீ பயந்து விட்டாய். கருடன், நிழல் என ஏதேதோ உளறுகிறாய். அந்த தேசிகன் ஸ்ரீரங்கத்திற்கு அரங்கன் அழைத்தெல்லாம் செல்லவில்லை. இங்கே நம்மை எல்லாம் மந்திர தந்திரங்களால் கட்டிப் போட்டது போல அங்கேயும் வித்தை காட்ட எண்ணுகிறான். நான் விட மாட்டேன். அவனை அழித்துக் காட்டுகிறேன். அந்நியர்களை விட இவன் ஆபத்தானவன். இவனை நான் அழிப்பேன்... இவன் அழிந்த செய்தி உனக்கும் வரும். அதன் பின் இந்த காஞ்சியில் நான் சொல்வதே வேதம்! நீயும் என் காலில் வந்து விழுவாய் பார்'' என அவன் கத்தியது வேகவதி ஆற்றின் கரை எங்கும் எதிரொலித்தது.
தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X