வரதா வரம்தா... (41)
மே 22,2020,18:33  IST

நல்ல இரவு நேரம்!

எம்பெருமானின் திருமேனியோடு பஞ்சு மூடைகள் கொண்ட வண்டியை கள்ளர்கள் காட்டுவழியில் ஓரிடத்தில் மறித்தனர்.
வண்டியை ஒட்டியும், வண்டிக்கு முன்னும் பின்னுமாக பலர் இருந்தனர். அவர்களில் பிள்ளைலோகாச்சார்யாரும், சுதர்சன சூரியும் பிரதானமாக வண்டியை தொட்டு நடந்தபடி இருந்தனர். அவ்வளவு பேரையும் கள்ளர்கள் சுற்றி வளைத்தனர். முகத்தை மூக்குவரை துணியால் மறைத்து கட்டியிருந்தனர். கள்ளர்களில் சிலர் மூடையை வாளால் குத்தினர். பஞ்சு இருப்பது தெரியவும் பெரும் ஏமாற்றம்.
''இந்த பஞ்சு மூடைகளோடு எதற்காக நள்ளிரவில் பயணிக்கிறீர்கள்?'' என்றான் கள்ளர் தலைவன்.
''மிலேச்சர்கள் பார்த்தால் ஆபத்து. அவர்கள் இப்பஞ்சுக்கு தீயிடக்கூடும். அதனால்தான்...'' என்றார் சுதர்சனசூரி!
''மிலேச்சர்கள்...! அந்த அயல்நாட்டு கொடியவர்களால் இந்த நாடே சூறையாடப் பட்டு விட்டது. நாங்கள் கூட பசிக்கு கொள்ளையடிப்பவர்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ அதிகாரத் திமிரோடு தாங்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற நோக்கோடு கொள்ளையிடுகின்றனர். இவர்களை அழிக்க எங்கள் குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பன் தான் துணை நிற்க வேண்டும்'' என்று ஒருவன் கூறவும், பிள்ளைலோகாச்சார்யார் அவனிடம் கடவுள் நம்பிக்கை இருப்பது போலத் தெரிகிறதே'' என்றார்.
''என்ன அப்படி சொல்லி விட்டீர்கள். நாங்கள் அழகர்மலைக் கருப்பனை குலதெய்வமாகக் கொண்டவர்கள்''
''அப்படியானால் அந்த அழகர்மலையான்....''
''அவன் எங்கள் தெய்வத்துக்கே தெய்வம்''
''நாங்கள் அந்த அழகர்மலையானின் முதல் கோயிலான அரங்கன் ஆலய சேவகர்களப்பா...''
''அப்படியானால் திருவரங்கத்தில் இருந்து வருகிறீர்களா?''
''ஆம்''
''பார்த்தால் விவசாயிகள் போல் தெரிகிறீர்களே?''
''இது வேடம்...எம்பெருமானை காப்பாற்றப் போட்டிருக்கும் வேடம்''
''அப்படியென்றால் எம்பெருமான்?''
''பத்திரமாக மூடைகளின் நடுவில் உள்ளாரப்பா!''
''என்ன... அரங்கப் பெருமான் இப்போது இங்கே உள்ளாரா?''
''ஆம்... பெருமான் இப்போது மிலேச்சர் வசப்படாதிருக்க, எங்கள் வசப்பட்டுள்ளாரப்பா.... பெருமான் மட்டுமல்ல... உபய நாச்சிமார்களும்''
''என்ன விந்தை? உலகைக் காக்கும் எம்பெருமானுக்கே சோதனையா?''
''அது தானப்பா கலியின் விந்தை''
''விசித்திரம்!''
''ஆம்...விசித்திரம் தான். மிலேச்சனுக்கு ஆயுதபலம் என்றால் நமக்கு ஆன்மபலம்! இப்போது இரண்டுக்கும் ஒரு யுத்தம் நடக்கிறது. ஆயுதபலம் எப்போதும் தற்காலிக வெற்றி பெற்றிடும். அதோடு பெரும் பாவங்களைச் சேர்த்து அதற்கேற்ப பிறவிகளை எடுக்கச் செய்யும். எடுக்கும் பிறப்பும் இன்பம் தராது.
ஆன்மபலம் அப்படியல்ல!
அது பொறுமையோடும், நுண்ணறிவோடும் நடந்து கடவுளின் திருவடி நிழலை அடைந்து மீண்டும் பிறவாத நித்ய இன்பத்தை அடையச் செய்யும்''
''அருமையான விளக்கம். கொள்ளையிடவே வந்தோம். ஆனால் உங்கள் கருத்துக்களால் தெளிந்தோம். எம்பெருமானைக் காத்திடும் உங்களுக்கு துணை நிற்க விரும்புகிறோம்.''
''இது அந்த கள்ளழகன் கருணை! கள்ளனாகிய நீலனையே மங்கை மன்னனாக ஆக்கியவனாயிற்றே?''
நள்ளிரவில் கொள்ளையிட வந்தவர்கள் நண்பர்களாகி துணைவர்களாகவும் ஆகி விட்டனர்.
பிள்ளைலோகாச்சார்யார் வானம் பார்த்து நெகிழ்வுடன் வணங்கினார்.
''எம்பெருமானை இப்படி மூடி எடுத்துச் செல்ல வேண்டாம். பல்லக்கு கொண்டு வந்து அதில் அரசனைப் போல அமர்த்தி சுமந்து செல்வோம். எம்பெருமானின் திருப்பார்வை செல்லும் வழியெங்கும் பட்டபடி இருக்கட்டும்'' என்றான் கள்ளர்தலைவன்.
''நாங்கள் போய் பல்லக்குடன் வருகிறோம்'' என்று ஒரு கூட்டம் புறப்பட்டது.
நெடுந்துாரம் நடந்த களைப்பில் எல்லோரும் ஒரு உகந்த இடமாகப் பார்த்து அமர்ந்திட, கள்ளர்களும் அவர்கள் உண்ண கனிவகைகள் கொண்டு வரச் சென்றனர்.
இதற்கிடையே திருவரங்கத்தில்...
பொழுது விடியும் போதே பெரும் மிலேச்சப்படை தெற்கு கோபுர வாசல் வழியாக திபுதிபுவென்று உள்புகத் தொடங்கியது. ஆயிரம் குதிரைகளாவது இருக்கும்.
வந்தவர்கள் நாலாபுறமும் வாளைச் சுழற்றியபடி முன்னேறினர். அவர்கள் இலக்கு ஆலயத்துக்குள் புகுந்து கிடப்பதையெல்லாம் அள்ளிச் செல்வது என்பதாகத் தான் இருந்தது.
படை புகுந்ததைக் கண்ட பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டனர். அந்த காலை வேளை இப்படி ஒரு ரணகள பொழுதாக விடியும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
உள்ளே கோயிலுக்குள் ஒரு சாரார் வராகர் சன்னதியில், எம்பெருமான் திருவரங்கம் விட்டு வெளியேறியது தெரியாதவர்களாகவே இருந்தனர். அத்தனை சாதுர்யமாக சலசலப்பின்றி லோகாச்சார்யார் எம்பெருமானோடு சென்று விட, எம்பெருமானுக்கான பல்லக்கு மட்டும் திருச்சன்னதி முன் இருந்து, அங்குள்ளோர் நம்பும்படிச் செய்து விட்டது.
இப்படி ஒரு தருணத்தில் மிலேச்சப்படை உட்புகுந்தால் என்னாகும்?
ஊருக்குள் படை புகவுமே ஆயிரக்கணக்கான ஆண்கள் நாற்புர கோயில் வாசல் வழியாகவும் கோயிலுக்குள் புகுந்து சன்னதிக்குள் மிலேச்சன் நுழைந்து விடக் கூடாது என்பதில் கவனமாயிருந்தனர்.
இந்த நாளில் பல அரிய செயல்கள் நடந்ததை திருவரங்க ஆலய கோயிலொழுகு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக சுவர் எழுப்பி மூடப்பட்ட மூலவர் சன்னதிக்கும், உள்ளிருக்கும் பள்ளி கொண்ட அரங்கப் பெருமான் ரூபத்துக்கும் யாதொரு தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் திருவரங்கத்து கோயில் தாசியான வெள்ளையம்மாள் என்பவள் இந்த சமயத்தில் பெரும் திட்டமிட்டாள். வெள்ளையம்மாளுக்கு எம்பெருமான் மீது அடாத பக்தி. தினமும் காலை தரிசனம் முடித்த பிறகே பச்சைத் தண்ணீர் கூட அருந்துவாள். அதேபோல விழாநாட்களில் கருட மண்டபத்திலும், மங்கை மன்னன் மண்டபத்திலும் இவள் ஆடும் நாட்டியம் அவ்வளவு அற்புதமாயிருக்கும். இவள் தன் ஆத்மபலத்தால் ஒரு பெருஞ்செயல் செய்யத் தயாரானாள்.
சிவப்புக்கரையும், வெள்ளைப்பட்டுமாக புடவை உடுத்தி கூந்தலை அள்ளிக்கட்டி அதில் ஏராளமான மலர்களைச் சூடிய நிலையில் அடர்வான மைவிழிகளோடு, கிரக்கும் அழகுடன் கோயிலில் உள்ள ஆர்யபட்டாள் வாயிலில் இவள் அக்கால வேளையில் காத்திருந்தாள்.
மிலேச்சப்படையும் உள்ளே நுழைந்தது. முகப்பில் படைத்தளபதி மிடுக்காய் நடந்து வர, ஒருவன் அவனுக்கு குடைபிடித்தபடி உடன் வந்தான். பின்னால் கையில் வாளுடன் பெரும் கூட்டம். சிலர் குதிரை மீதும், சிலர் தரைப்பரப்பிலுமாக நின்றபடி இருக்க, தான் உள்நுழைய வேண்டிய இடத்தில் ஒரு பெண் தைரியமாக நிற்பது அந்த மிலேச்ச தளபதிக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் கூட இருந்தது.
தன் சேவகனிடம் அந்த தளபதி, ''யார் இவள்? எதற்காக இங்கு நிற்கிறாள்?'' எனக் கேட்டான். அதற்கு அந்த தாசியே பதிலளித்தாள்.
''ஹூசூர்..! நேராக என்னிடம் கேளுங்கள். சொல்லி விடுகிறேன். நான் ஒரு நடன மாது. ஆடிப்பாடி மகிழ்விப்பது என் செயல்'' என்றால் கம்பீரமான குரலில். தளபதியிடம் மேலும் ஆச்சர்யம்.
''உனக்கு மிகவே தைரியம். ஊருக்குள் நுழையவும் எல்லாப் பெண்களுமே ஒளிந்து கொண்டனர். நீயோ என் முன் தைரியமாக பேசுகிறாய். பலே!'' என்றான் அந்த துண்டுத் தாடியும், பூனைக் கண்களுமான தளபதி.
''தைரியம் என்னுடன் சேர்ந்து பிறந்த ஒன்று. நான் சாதாரணமானவர்களுக்கெல்லாம் கட்டுப்படவும் மாட்டேன். உங்களைப் போல மாவீர தளபதிகளுக்கென்றால் எதையும் செய்வேன்'' என்றாள்.
''அப்படியா?''
''என்ன அப்படியா... என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்கிறேன்''
'' நான் மிக பொல்லாதவன். என்னை ஏமாற்ற நினைத்தால் உன் உடலில் உன் தலை ஒட்டி இருக்காது''
''எதற்கு இந்த மிரட்டல் பேச்சு? உங்களுக்கு நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?''
''இந்த கோயிலின் கஜானா எங்கிருக்கிறது? எல்லாவற்றுக்கும் மேலாக விழுந்து விழுந்து நீங்கள் வணங்கும் அந்த மூலச்சிலை ரூபம் எங்கே உள்ளது?''
''தெரியும். நீங்கள் இதைத்தான் கேட்பீர்கள் என்று... அதை உங்களுக்கு காட்டத் தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்'' என்று இன்ப அதிர்ச்சியளித்தாள் தாசி வெள்ளையம்மாள்!

தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X