நிலவென வாராயோ!
மே 22,2020,18:35  IST

ஆதிபராசக்தி அன்பென்னும் அரியாசனத்தில் வீற்றிருந்தாள். அவள்முன் ஒரு ஜீவனைக் கொண்டுவந்து நிறுத்தியது ஒரு தர்ம தேவதை.
“எல்லாப் பிறவிகளிலும் நல்லவனாகவே வாழ்ந்த நீ என்னுடன் ஒன்று சேரும் காலம் வந்துவிட்டது.”
“அதற்கு முன் ஒரு வரம் வேண்டும், தாயே!”
“என்ன வரம்?”
“பல பிறவிகளில் துறவியாக வாழ்ந்த எனக்கு ஒரு தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாமல் போனது. இன்னும் ஒரு பிறவி கொடுங்கள். அதில் தாய்க்குப் பணிபுரியும் பாக்கியம் கொடுங்கள்.”
“தந்தேன். மீண்டும் ஒருமுறை மண்ணுலகில் பிறந்து, அன்புதான் அனைத்தும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து, அதனால் காதலில் தோற்று, வலியும் வேதனையும் அனுபவித்து உன் மீது தாயைவிட அதிகம் அன்பு செலுத்தும் ஒரு ஜீவனுக்குச் சேவை செய்து உரிய காலத்தில் என்னிடம் வந்து சேர்”
அந்த ஜீவன் தென் தமிழகத்தில் மதுரையில் வசிக்கும் ஒருத்தியின் கருவில் புகுந்து கொண்டு வளரத் தொடங்கியது.
அந்த ஜீவன் சென்றவுடன் அன்னை தேவ கணங்களிடம் முழங்கினாள்:
“அந்த ஜீவன் செய்யும் பணிவிடைகளைப் பெற்றுக்கொள்ளும் தாயாக நானே அவதரிக்கப்போகிறேன்.”
சக்தி லோகத்தில் பஞ்சாயத்துப் படலம் தொடங்கியது
“அந்த ஜீவன் ஏற்கனவே ஒரு கருவறையில் போய்க் குடிகொண்டுவிட்டதே!”
“நான் பெற்ற தாயாகச்ெல்லப்போவதில்லை. ஒருகட்டத்தில் அந்த ஜீவன் என்னைத் தாயாக ஏற்றுக்கொள்ளும். தன் தாயிடம் காட்டும் அன்பைவிட என்னிடம் அதிகம் அன்பு காட்டும். அதன் அன்பில் நான் திளைக்கப் போகிறேன்.”
“குற்றம் குறைகள் இல்லாத தேவதைகளைப் புறக்கணித்துவிட்டுக் குறையுள்ள
மனிதர்களிடம் ஏன் இவ்வளவு அன்பு காட்ட வேண்டும் தாயே?”
“நான் கடவுள் மட்டும் இல்லையடி. ஒரு தாயும் கூட. ஒரு தாய்க்கு இரண்டு மகன்கள் இருந்து அதில் ஒருவனிடம் மட்டும் குறையிருந்தால் அந்த மகனிடம்தான் அதிக அன்பு செலுத்துவாள். குறையுள்ளவர்களுக்குத்தான் அதிகமான அன்பு தேவைப்படும்.”
“பூமியில் மட்டுமே எத்தனையோ கோடி மனிதப்பிறவிகள் இருக்கின்றன. அதுபோக ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்கள். அதில் கோடானு கோடி ஜீவராசிகள். அதில் ஒரு ஜீவராசி வரம் கேட்டது என்பதற்காக நீங்களே மனிதப் பிறவி எடுத்து அல்லல் படவேண்டுமா?”
“அன்பில் திளைப்பது எனக்கு அல்லல் இல்லை. ஆனந்தம். சில நல்ல ஆன்மாக்கள் புரிதல் இல்லாமல் பெரும் தவறுகள் செய்ய இருக்கிறார்கள். அவர்களைத் திருத்தப் போகிறேன். அறியாமை, அன்பின்மையால் இருண்டு கொண்டிருக்கும் அவர்கள் வானில் நிலவாகத் தோன்றப் போகிறேன்.”
“தாயே நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒரு சுவாரசியமான கதை உருவாகப்போகிறது எனத் தெரிகிறது. அதை மேலிருந்து பார்த்து ரசிக்க உங்கள் அனுமதி வேண்டும்.”
“தந்தேன் - ஒரு நிபந்தனையுடன். இந்த முறை நான் தெய்வாம்சத்தை மண்ணுலகில் காட்டப்போவதில்லை. ஒரு சாதாரண மனுஷியாக வாழப்போகிறேன். என் கணவர் சில காலம் என்னுடன் இருந்துவிட்டுப் பிரிந்துவிடுவார். பின் தனி மனுஷியாக காயப்பட்டு, வேதனைப்பட்டு உடல் ஊனத்துடன் வாழப்போகிறேன். நீங்கள் என் போக்கில் குறுக்கிடக்கூடாது.”
“ஒத்துக்கொள்கிறோம், தாயே - ஒரு நிபந்தனையுடன்! நீங்கள் மனுஷியாக வேதனைப்படும் காட்சியை எங்கள் கண்களிலிருந்து மறைத்துவிடுங்கள். அதைத் தாங்கும் சக்தி சத்தியமாக எங்களுக்கு இல்லை.”
“நடப்பதெல்லாம் நாடகம். நான் துன்பப்படும் காட்சிகளில்தான் மற்றவர்களுடைய அன்பின் வீரியத்தை நீ பார்க்கமுடியும்.”
அன்னை இந்த இருபத்தியோராம் நுாற்றாண்டில் மதுரையில் அவதாரம் எடுத்து அன்பு என்னும் அற்புதம் நிகழ்த்தினாள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X