புதிய பார்வையில் ராமாயணம் - 42
மே 29,2020,21:32  IST

ஸ்ரீராம ஜெயம்
ராவணன் வதம் செய்யப்பட்ட மகிழ்ச்சியில் தேவர்கள் வானில் இருந்து மலர்கள் துாவி ராமனுக்குப் பாராட்டையும், தங்களின் நிம்மதியையும் தெரிவித்தனர்.
எத்தகைய கொடுங்கோலன் அவன்! பிறர் தனக்கு அடிமை செய்வதை எத்தனை எக்காளத்துடன் அனுபவித்தவன்! அடங்கிப் போகிறவர்களையும் துன்புறுத்தி அவர்களின் அழுகையை இனிய கானமாக ரசித்தவனாயிற்றே அவன்! நலிந்தவர் ஒடுங்கி கிடப்பதை உற்சாக கர்ஜனையுடன் அனுபவித்தவன் அல்லவா! சுய விருப்பத்திற்காக உற்றார், உறவினரையும் புறக்கணிக்கத் தயங்காதவனாக இருந்தானே!
தன் குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்ற ஆணவத்தில் எதிர்க்குரலே எழும்பாதபடி பார்த்துக் கொண்டவனாயிற்றே! எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரம் இருந்ததால், தனியொருவனாக உலகை ஆள முடியும் என இறுமாந்தவன் தானே!
தொலைந்தான்...கொடுமைகளின் ஒட்டு மொத்தக் குத்தகைக்காரன். இனி அரக்கர்களுக்கு ராவணனின் மரணம் ஒரு பாடம்.
பாரெங்கும் பாராட்டும் இச்சம்பவம் நடக்க வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பிய சீதை இதை அறிய வேண்டாமா? என அனுமன் பரபரத்தான்.
சோகச் சித்திரமாக சீதையைப் பார்த்தவன் அவன். ராமனின் கணையாழியைக் கண்டதும் அவள் கண்களில் பளிச்சிட்ட பிரகாசம் கண்டு பிரமித்தவன் அவன். அவளுக்கு இந்தச் செய்தி எட்ட வேண்டுமே! யாரோ ஒருவர் சொல்வதைவிட, ராமனுக்கு நெருக்கமானவர் சொல்வது பொருத்தமாக இருக்குமல்லவா?
தான் கொன்றதாக மாய பிம்பங்களான ராம, லட்சுமண உடல்களை சீதையின் முன்னே போட்டு அவளைக் கலங்க செய்தான்
ராவணன். நல்லவேளையாக திரிசடை அந்த ரகசியத்தை தெரிவித்து சீதையின் மனதைத் தேற்றியிருந்தாள். இது போல மாய உத்திகளை ராவணன் மேற்கொண்டபோதெல்லாம், அபலையாக தவித்த சீதை, பிறகு உண்மை தெரிந்து தெளிந்தாள் என்றாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலில் பயந்துதான் போனாள். இந்நிலையில் அவளிடம் ராமனின் வெற்றியைச் சொல்லக்கூடியவர் நன்கு தெரிந்தவராக இருந்தால்தானே, அவள் நம்புவாள்?
அந்தப் பொறுப்பை ஏற்க விரும்பிய அனுமன் அனுமதி கேட்டான். ராமனும் சம்மதித்தான்.
புறப்பட்ட அனுமன், இலங்கைக் கோட்டைக்குள் எதிர்ப்பவர் யாருமின்றி சாதாரணமாக நுழைந்தான். தான் தீக்கிரையாக்கிய பின், பிரம்மா நிர்மாணித்த நகரின் எழில் கண்டு பிரமித்தான். தனக்குத் தெரிந்த பாதை என்பதால், சுலபமாக அசோகவனத்தை அடைந்தான்.
அங்கே சீதை கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். ராமனுக்கு ஆபத்து நேரக் கூடாது என ஜபித்தபடி இருந்தாள். ராமனின் ஆற்றல் அவள் அறியாதது அல்ல. ஆனாலும், ஒரு மனைவிக்கு உரிய கவலை அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது. புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு வந்தாலே, உடல் இங்கும், உயிர் கணவனுடன்தான் இருக்கும் என்பது பெண்மையின் பண்பு. சீதையின் மனதிலும் அந்த எண்ணம் ஊறியிருந்தது.
ராவணன் மாயா வித்தைகளில் வல்லவன். ஆனால் ராமனுக்கோ மாயம் செய்யத் தெரியாது. அவனது ஒரே நம்பிக்கை வில்லும், அம்பும் மட்டுமே! மனோதிடம், சொந்த பலம், பெரியோர் ஆசி, நற்பண்புகள், தர்ம சிந்தனை, நியாயம், தர்ம தேவதையின் அருள் என்று சாத்வீக குணம் கொண்டவன் அவன். ராவணனின் மாய உத்திகளால் ராமனை வென்றிடுவானோ என சீதை சராசரிப் பெண் போல பரிதவித்தாள். இந்நிலையில் தன் முன்னால் யாரோ தொம் என்று குதிப்பது அறிந்து திடுக்கிட்டாள்.
எதிரில் அனுமன்! கணையாழியைக் காட்டி உயிரைக் காத்தவன். ஆனால் இப்போது எதற்காக வந்திருக்கிறான்? அனுமன்தானா அல்லது ராவணனின் மாயாசக்தியா? எதை நம்புவது, எதை ஏற்பது என அறிய முடியாத பேதையாகி விட்டோமே என வருந்தினாள் சீதை.
ஆனால் ராம பக்தி என்னும் தெய்வீக மணம் கமழ நின்ற அனுமனை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
ஆனால்… அனுமனின் கண்கள் கசிகிறதே! உதடுகள் துடிக்கிறதே! ராமனுக்கு பாதிப்பா? உணர்ச்சி வசப்பட்ட பாவனையில் உடலே நடுங்க நிற்பதற்கு என்ன காரணம்? தவித்தாள் சீதை.
''அனுமா...ஏன் இப்படி உணர்ச்சிப் பிழம்பாக நிற்கிறாய்? என்னாயிற்று? என் ராமன் நலம்தானே? ராவணனுடன் போரில் அவர் இறங்கியதாகக் கேள்விப்பட்டேனே? அவருக்கு பாதிப்பு நேரக் கூடாது என எப்போதும் பிரார்த்திக்கிறேனே…..சொல் அனுமா, அவர் நலம் தானே?''
அனுமன் குனிந்தான். சீதையின் அருகில் 'ஸ்ரீராம ஜெயம்!' என மணலில் எழுதினான்.
ஆனந்தத்தில் மிதந்தாள் சீதை. என் ராமன் வென்று விட்டார். இங்கிருந்து என்னைக் கை பிடித்து அழைத்துச் செல்வார். இந்த வெற்றிச் செய்தியை சொல்லித் தெரிவிக்க முடியாமல்தான் உணர்ச்சிப் பிழம்பானானோ அனுமன்! அவனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர்தானோ? அந்த நெகிழ்ச்சி ராம வெற்றியின் பிரதிபலிப்புதானோ?
உணர்ச்சிப் பெருக்கில் சரியாகச் சொல்ல இயலாதோ என எண்ணியே 'ஸ்ரீராமஜெயம்' என எழுதினானோ அனுமன்! இவன் சொல்லின் செல்வன் மட்டுமல்ல, சொல்லாவிட்டாலும் செல்வன்தான்!
சீதையின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்ந்த அனுமன், 'அழைத்துச் செல்ல ராமர் வருவார்' என்று கூறி விடைபெற்றான்.
இதனடிப்படையில் செயலில் வெற்றி பெற 'ஸ்ரீராமஜெயம்' எழுதும் பழக்கம் உருவானது.

தொடரும்
பிரபு சங்கர்
72999 68695

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X