உனக்கும் கீழே உள்ளவர் கோடி
மே 29,2020,21:33  IST

முருகபக்தரான ரமேஷ் ஓய்வு பெற்ற அரசுப்பணியாளர். மனைவி உமா. மூத்த மகன் ஹரி பட்டப்படிப்பும், இளையவன் பாலு பொறியியல் பட்டமும் பெற்றனர். இருவருக்கும் வெளியூரில் வேலை கிடைத்தது. பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ரமேஷ். வேலை பார்க்கும் ஊரிலேயே அவர்கள் குடியேறினர். ஆனால் ஹரியை விட பாலு ஐ.டி. கம்பெனியில் அதிக சம்பளம் வாங்கினான். வருடங்கள் சில ஓடின. பாலு சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தான்.
இதையறிந்த ஹரியின் மனைவி பொறாமை கொண்டாள்.
''நாமும் எப்பத்தான் உங்க தம்பி மாதிரி வீடு கட்டப் போறோமே தெரியலே?'' என்றாள். இப்படி நாளுக்கு நாள் சண்டையிட ஆரம்பித்தாள்.
உளைச்சல் அடைந்த ஹரி பெற்றோரைப் பார்க்கப் புறப்பட்டான். மகனைப் பார்த்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நலம் விசாரிக்கத் தொடங்கும் முன்பே பிரச்னையை கொட்டித் தீர்த்தான் ஹரி.
''அப்பா! எனக்கு வேலை பார்க்க பிடிக்கலை! நான் எப்போ முன்னுக்கு வருவேனோ தெரியலை?'' என புலம்பினான். உமா சமாதானப்படுத்தியும் அவன் ஏற்கவில்லை.
''டேய் ஹரி இது சின்னப் பிரச்னைதான்டா! எல்லாம் சரியாயிடும். பேங்க் வரை அப்பா போயிட்டு வந்துடறேன்'' என்று சொல்லி ரமஷே் புறப்பட்டார். அவனும் அப்பாவுடன் கிளம்பினான்.
''என்ன வெயில் இப்படி கொளுத்துதே'' என ஆதங்கப்பட்டான் ஹரி.
களைப்பு தீர ஒரு கடையில் இளநீர் குடித்தனர்.
சிறிது துாரம் சென்றனர். அங்கு ஓரிடத்தில் கட்டுமானப்பணி நடப்பதைக் கண்டனர். வெயிலில் வேர்க்க விறுவிறுக்க பணியாளர்கள் செங்கற்களை சுமந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்க ஹரிக்கு பரிதாபமாக இருந்தது.
ரமஷே் பணியாளர்களில் ஒருவரை அழைத்து ''இங்கே... என்ன வேலை நடக்கிறது? எனக் கேட்டார்.
'' பார்த்தால் தெரியலையா! வேகாத வெயிலில் வேலை செய்கிறேன். எல்லாம் என் வயிற்றுப்பாட்டுக்குத் தான்!'' என்று சிடுசிடுத்தார்.
இதே கேள்வியை மற்றொரு இளைஞரிடம் கேட்டார்.
''என் வயதான பெற்றோரின் மருத்துவத் தேவைக்காக உழைக்கிறேன்'' என முணுமுணுத்தார்.
ரமேஷ் மற்றொருவரிடம் கேட்க, ''ஐயா! நான் முருகப்பெருமானுக்கு கோயில் கட்டும் புனிதப்பணியில் ஈடுபட்டுள்ளேன்'' என்றார். ''பார்த்தாயா ஹரி! மூவரும் ஒரே பணியைச் செய்தாலும் மனநிலையில் மாறுபடுகின்றனர். கூலி, குடும்ப பாசம், பக்தி என மூவரும் மூன்று பதிலைச் சொல்கிறார்கள். இதுபோலத்தான் வாழ்க்கையும். வெயிலில் கல்லைச் சுமந்தாலும், கடவுளுக்காக சுமப்பதாக சொல்பவரின் மகிழ்ச்சியான மனநிலையைப் பார்! முருகப்பெருமான் உனக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கையை எண்ணி சந்தோஷப்படு!
உன் கடமையை சரியாக செய்!
முருகன் உன்னைப் பார்த்துக் கொள்வான்! 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்பதை மறக்காதே! உனக்கும் நல்ல காலம் வரும், அப்போது பாலுவை போல் வீடு கட்டுவாய்! இது உனக்கு மட்டுமல்ல! என் மருமகளுக்கும் சேர்த்துதான் அவளிடமும் எடுத்துச்சொல்'' என்றார்.
இதைக் கேட்ட ஹரி நிம்மதி அடைந்தான்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X