வரதா வரம்தா - 42
மே 29,2020,21:44  IST

துணிவே துணை

தாசி வெள்ளையம்மாள் சொன்ன பதில் அந்த மிலேச்ச தளபதிக்கு பிரமிப்பை அளித்தது. அவனது பூனை விழிகள் அதை எதிரொலித்தன.
''என்ன ஹூசூர்... நான் சொல்வதை நம்பவில்லையா... இப்படி பார்க்கிறீர்கள்?''
''எல்லோரும் ஒளியும் போது நீ துணிச்சலுடன் வந்து எவ்வித மறுப்பும் இன்றி இடத்தை காட்டுகிறேன் என்பது எனக்கு ஆச்சர்யம் தருகிறது. சந்தேகத்தை உருவாக்குகிறது''
''அப்படியானால் விட்டு விடுங்கள். உங்கள் வழியில் நீங்கள் போங்கள். என் வழியில் நான் போகிறேன். ஒன்று மட்டும் உறுதி. உங்களால் இந்த கோயிலின் கல்துாண் சிலைகளை வேண்டுமானால் உடைக்க முடியும். கஜானாவையோ வழிபாட்டு விக்ரஹங்களையோ நெருங்கவும் முடியாது! உங்கள் வருகையறிந்து அதை மறைத்து விட்டனர்''
வெள்ளையம்மாள் அந்த தளபதி தன் வழிக்கு வர வேண்டும் என்பது போல் நடந்தாள். தன் துண்டுத் தாடியை தடவிய மிலேச்ச தளபதி சற்று யோசித்தபடி, ''சரி... இடத்தை காட்டு'' என்றான்.
''காட்டுகிறேன்... பதிலுக்கு என்ன கிடைக்கும்?'' வெள்ளையம்மாள் அப்படிக் கேட்கவும் தளபதிக்கு மேலும் ஆச்சர்யம்.
''என்ன வேண்டும் நீயே சொல்'' என்றான்
''உங்கள் வீரர்களை கோயிலுக்கு வெளியே முதலில் போகக் சொல்லுங்கள்''
''ஏன் செல்ல வேண்டும்?''
''அவர்கள் வெளியேறாவிட்டாலும் பரவாயில்லை. உள்ளே நுழையக் கூடாது. அவர்களின் பாதங்கள் சன்னதியில் படுவதை நான் விரும்பவில்லை''
''உன் பேச்சும், செயலும் விசித்ரமாக உள்ளது. காட்டிக் கொடுக்க முன் வந்த நீ கட்டிக் காப்பவள் போல் பேசுவது பெரிய முரண்''
''ஹூசூர்.... நான் ஆபரணங்களைத் தான் காட்டப் போகிறேன். உங்களுக்கு தேவையும் அதுதான். வழிபாட்டுச் சிலைகள் இப்போது இந்த ஊருக்குள்ளேயே இல்லை. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்''
''சிலை இல்லாத கோயிலுக்குள் யார் போனால் உனக்கென்ன?''
''சிலை என்பது எங்கள் வரையில் ஒரு மையப்புள்ளி. மற்றபடி கடவுள் என்பவர் துாணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். அவ்வளவு ஏன் உன்னிலும் அவர் இருக்கிறார்''
''எனக்குள்ளுமா... நான் அழிக்க வந்திருப்பவன்...?''
''அது அவன் தொழில்களில் ஒன்று''
''நீ என்ன... நான் என்ன சொன்னாலும் அதற்கேற்ப பதில் சொல்கிறாய்''
''கேட்கும் போது பதில் சொல்லத் தானே வேண்டும்?''
''தைரியசாலி மட்டுமல்ல. மிக புத்திசாலி. உன்னிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்''
''இதை நான் தான் கூற வேண்டும். நீங்கள் ஆயிரம் பேர்! நான் ஒருத்தி. நான்தானே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?''
''இதற்கும் ஒரு பதிலா... சரி கஜானா இருக்கும் இடத்தைக் காட்டும்''
''என் கோரிக்கையை மறந்தால் எப்படி?''
''சரி... இப்போதே உத்தரவிடுகிறேன். யாரும் இந்த கோட்டைத் தாண்ட மாட்டார்கள். போதுமா?''
''இன்னொன்றும் உள்ளது?''
''என்ன அது?''
''நீங்கள் மட்டுமே என்னுடன் வர வேண்டும்''
''புரிகிறது தனியாக அழைத்துச் சென்று கொல்லத் திட்டமிடுகிறாய் என்று சொல்''
''அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்''
''என்ன நெஞ்சழுத்தம். இப்போதே உன் தலையை துண்டாக்குகிறேன் பார்''
அந்த தளபதி வாளை உருவி வெட்டத் தயாரானான். வெள்ளையம்மாளோ கலங்காமல் சிரித்தாள்.
''எதற்கு சிரிக்கிறாய்?''
''நீங்கள் இப்படி கோழையாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை. நான் தனியே அழைத்தது கஜானாவைக் காட்ட மட்டுமல்ல. என்னையே உங்களுக்கு வழங்கத்தான்! அது புரியாமல் வாளை உருவினால் எப்படி?''
பேச்சின் முடிவில் சிணுங்கினாள். அதனால் கோபம் போய் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. குடை நிழலில் நின்று பேசியவன் அதன்பின் அவளோடு தனியே செல்லத் தயாரானான்.
வெள்ளையம்மாளோ மிலேச்ச தளபதியின் கையைப் பிடித்தபடி கிழக்கு கோபுரம் நோக்கி நடந்தாள்.
''இந்த பக்கமாக எங்கே செல்கிறாய்?''
''அதோ அந்த கோபுரத்திற்கு...''
''அங்கு எதற்கு?''
''நான் உச்சியில் இருந்து பார்த்தால்தான் கஜானா அறை நன்கு தெரியும். இப்போது பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உரிய பெட்டிகளோடு வந்து அனைத்தையும் அள்ளிச் செல்லுங்கள்''
கொஞ்சும் குரலோடு கோபுரத்தை நெருங்கி அதன் உள்கூட்டில் இருக்கும் படிகள் வழியாக ஏறத் தொடங்கினாள்.
அவன் வாளை உருவிக் கொண்டு பின் தொடர்ந்தான். அவளோ அசரவில்லை. ஒருவழியாக அதன் உச்சி கலச பாகம் வந்தது.
''எங்கே அந்த கஜானா அறை?'' எனக் கேட்டான்.
''அதோ பாருங்கள்...உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். எங்கள் அரங்கனின் பரவாசுதேவ ரூபத்தை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிலேச்சர்களில் உங்களுக்கு அந்த பாக்கியம் இருக்கிறது'' என இருபொருள் பட திருவரங்க மூலச் சன்னதியின் கோபுரத்தைக் காட்டினாள்.
''என்ன நீ....அறை என்று சொல்லி எதையோ காட்டுகிறாய்?'' என்று அவன் கோபுரத்தை பார்த்தபடி கேட்ட போது, கோபுர விளிம்பில் இருந்தான். அவள் சற்றும் தாமதிக்காமல் அவனைக் கீழே தள்ளினாள். அவ்வளவு தான்... அவன் கீழே விழுந்தபோது தெரித்துப் போனது தலை!
பாதுகாப்புக்காக வந்த சிலர் அவனைப் பின்தொடர்ந்து வந்து கீழே நின்றனர். அவர்களைப் பார்த்த வெள்ளையம்மாள் அரங்கனின் பரவாசு தேவ கோலத்தைக் கண்கலங்க வழிபட்டவளாய், ''எம்பெருமானே! என்னை ஏற்றுக் கொள். என்னால் ஆனதைச் செய்து விட்டேன். எனவே எனக்கு நானே தண்டனை அளித்துக் கொள்கிறேன்'' என்றபடி கீழே குதித்தாள்.
ஒளிந்திருந்து பார்த்த பலரும் ஓடி வரத் தொடங்கினர். தளபதி இறந்து விட்டான் எனவும் எல்லோரிடமும் ஒரு ஆவேசம். இதுதான் சாக்கு என்று ஒரு பெரும் யுத்தமே மூளத் தொடங்கியது.
இதனிடையே உயிருக்கு போராடிய வெள்ளையம்மாள் உடலை சிலர் காப்பாற்றுவதற்காக துாக்கிச் சென்றனர். அதே சமயம் கோயிலுக்குள் ஒளிந்திருந்தோர் வெளிப்பட்டனர். வெள்ளையம்மாளின் தீரம் அவர்களையும் போரிடத் துாண்டியது.
இச்சம்பவத்தை பன்னீராயிரவர் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது. எம்பெருமானுக்காக 12,000 பேர் தங்களின் இன்னுயிரை விட்டதாக தெரிகிறது. சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கை தவறானது, மிகையானது என்றும் கூறியுள்ளனர். எது எப்படியோ வெள்ளையம்மாளின் துணிவு மிலேச்சர்களுக்கு பாடம் கற்பித்து பயத்தையும் உண்டு பண்ணியது.
வெள்ளையம்மாள் சாகும் தறுவாயில் தனக்கு கோயிலின் மடைப்பள்ளி நெருப்பும், தீர்த்தப் பிரசாதமும், பெருமாள் மாலையும் சாற்றப்பட்டு தன்னை எரிக்க வேண்டும் என்று வேண்டியவள், இது தனக்கு மட்டுமல்ல தன்னைப் போல பெருமாளுக்கு தங்களையே ஒப்புக் கொடுத்து விட்ட தாசிகள் சகலருக்கும் அவர்களின் இறப்பின் போது இந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று தன் இறுதி விருப்பத்தைக் கூறியபடியே உயிரை விட்டாள். அவள் விருப்பம் தாசிகள் உள்ளவரை தொடர்ந்தது.
ஒருபுறம் இவ்வாறு போர் நிகழ்ந்தபடி இருக்க, மறுபுறத்தில் வேதாந்த தேசிகன், சுதர்சன சூரியின் புத்திரர்கள் இருவருடன் காஞ்சிக்கு புறப்படத் தயாரானார்.
பிள்ளைலோகாச்சார்யாரின் முனைப்பில் பல்லக்கு வந்து சேர, அதில் அழகிய மணவாளனும், உபய நாச்சிமார்களும் மதுரையை நெருங்கி விட்டிருந்தனர். களவாட வந்த கள்ளர்களே பெரும் துணையாக உடன் வந்திருந்தனர்!
மதுரை ஆனைமலையை ஒட்டியுள்ள திருமோகூர் கோயிலும், அழகிய மணவாளனின் வருகையை உத்தேசித்து மூடிய கோயிலுக்குள் பல வீர வைணவர்களுடன் எம்பெருமானை வரவேற்று ஆராதிக்க காத்திருந்தது.
தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X