பொன்னான வாய்ப்பு
ஜூன் 19,2020,19:41  IST

பார்வை இழந்த பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். பாடும் அவனுக்கு பலர் காசு, உணவு கொடுப்பது வழக்கம். அடுத்த தெருவில் அவனுக்கு பிச்சைக்கார நண்பன் இருந்தான்.
ஒரு நாள் அவனது பாட்டைக் கேட்ட அரசர், ''அருமையாக பாடுகிறாய். உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும்'' என்றார்.
''அரசராகிய தாங்கள் சாப்பிடும் உணவை சாப்பிட ஆசைப்படுகிறேன்'' என்றான்.
''இதென்ன பிரமாதம். நாளை நீ சாப்பிடலாம்'' என்று சொல்லி புறப்பட்டார் அரசர்.
அடுத்த நாள் அரசரின் வருகைக்காக காத்திருந்தான். வழக்கம் போல் பலர் உணவு கொடுக்க முன்வந்தும் சாப்பிட மறுத்தான். ஆனால் இரவு வரை அரசர் வராததால் பசியோடு இருந்தான். அந்நேரத்தில் அங்கு வந்த அரசர், ''தம்பி! அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா? எங்கே நான் அனுப்பிய பொற்காசு மூடை, குதிரை?'' என்று கேட்டார்.
''பசியோடு காத்திருக்கிறேன். இப்போதுதானே வருகிறீர்கள்''என்றான் சோகமாக.
''சாப்பாட்டுடன் கிளம்பிய போது திடீரென எனக்கு தலை சுற்றியது. வைத்தியர்கள் சோதித்துவிட்டு ஓய்வெடுக்கச் சொன்னதால்
என் பாதுகாவலன் மூலம் உணவு அனுப்பினேனே? என்று பாதுகாவலனை பார்த்தார்.
''அரசே! உணவை நான் கொடுத்தும் ஏற்க மறுத்தார். அதை அடுத்த தெருவிலுள்ள பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு திரும்பினேன். உங்களிடம் தெரிவிக்க வந்த போது ஓய்வில் இருந்தீர்கள்'' என்றான் பாதுகாவலன்.
தலையில் கைவைத்தபடி அமர்ந்தார் அரசர். அப்போது அங்கிருந்த சாது ஒருவர், ''தம்பி! நடந்ததை என்னால் யூகிக்க முடிகிறது. அரசர் தானே நேரில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னது அவரது பெருந்தன்மை. ஆனால், அரசர் நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என நீ தவறாக புரிந்து கொண்டாய். இதுவே குழப்பத்திற்கு காரணம்'' என்று அவர் தெரிவிக்க அந்த இடமே அமைதியானது.
சாது மீண்டும் பேசத் தொடங்கினார்.
''இரண்டாவது பாதுகாவலன் மூலம் ஆயிரம் பொற்காசுகளை அனுப்பினார் அரசர். 'அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் பொற்காசுகளை கொடு' என்று கட்டளையிட்டு இருந்ததால், அவனோ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த உன் நண்பனிடம் பொற்காசுகளைக் கொடுத்துச் சென்றான். அந்த பொற்காசும் உனக்காகவே கொடுக்கப்பட்டது. குழப்பம் இத்துடன் தீரவில்லை. அரசர் மூன்றாவது காவலனை அழைத்து, 'பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுத்து வரும்படி அனுப்பினார். பொற்காசு மூடையுடன் இருந்த உன் நண்பன் குதிரையையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டான். இப்போது அவன் செல்வந்தனாகி விட்டான். புரிதலில் ஏற்பட்ட தவறால் நீ பசியோடு இருக்கிறாய். இதை விதி என்பதா? அல்லது கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டாய் என்பதா? ஒன்று மட்டும் நிச்சயம். பெற்ற வரம் உனக்கு சாபமாகவும், உன் நண்பனுக்கு வரமாகவும் மாறி விட்டது'' என்றார்.
அமைதியாக இருந்த அரசர், ''கவலைப்படாதே! உணவு, பொற்காசு, குதிரையை உணக்கும் அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லி நகர்ந்தார். அடுத்த நாள், அரசரின் வருகைக்காக பிச்சைக்காரன் காத்திருந்தான். ஆனால் அவர் வரவேயில்லை. முந்திய நாள் இரவு திடீரென மாரடைப்பால் அரசர் இறந்த செய்தி இன்னமும் பிச்சைக்காரனுக்கு எட்டவில்லை.
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை. வாய்ப்பு கதவைத் தட்டும் போது காதை பொத்திக்கொண்டால் பலன்கள் எப்படி கிடைக்கும். அதைச் சரியாக பயன்படுத்தும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X