ஆதார் கார்டு
ஜூன் 30,2020,10:02  IST

மனைவி இறக்கும் போது அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மறுமணம் செய்ய வற்புறுத்தியும், அவர் ஏற்கவில்லை.
என் மனைவி, அவளின் நினைவாக ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே என் வேலை.
''மகனின் சந்தோஷத்தைக் கண்டு மகிழ்ந்து, அவன் வெற்றியில் திளைப்பதே எனக்கு போதும் அவனுக்காக வாழ போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவையில்லை'' என்று சொல்லிவிட்டார்.
காலம் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனுக்கு உரிமையானது என்று எழுதி கொடுத்து ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடன் தங்கினார்.
ஒரு வருடம் கடந்தது. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியும், வெண்ணெய்யும் தரும்படி கேட்டார். மருமகளோ வெண்ணெய் தீர்ந்து விட்டதாகத் தெரிவித்தாள்.
மகன் அதை கேட்டபடியே தானும் சாப்பிட அமர்ந்தான். தந்தையோ வெறும் ரொட்டித் துண்டை மட்டும் சாப்பிட்டு எழுந்தார்.
மகனுக்காக அவனது மனைவி வெண்ணெய்யைக் கொண்டு வந்து மேஜையில் வைத்தாள். ஆனால் மனைவியிடம் ஏதும் பேசாமல் மகன் சட்டென்று வியாபாரத்திற்குப் புறப்பட்டான். வெண்ணைய் பற்றிய சிந்தனை நாள் முழுதும் அவனது மனதில் ஓடியது. மறுநாள் காலையில் எழுந்ததும் தந்தையை அழைத்தான்.
''அப்பா! வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம்'' என்றான்.
''எதற்காக?'' என்று கேட்டார் தந்தை.
''நானும் என் மனைவியும் வாடகை வீட்டில் குடியேறப் போகிறோம். என் பெயரில் எழுதிய சொத்துக்களை உங்கள் பேருக்கே உடனடியாக மாற்றி கொள்ளுங்கள்'' என்றான்.
''வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன். சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருக்கப் போகிறேன்'' என்றான் மகன்.
''ஏன் இந்த திடீர் முடிவு?'' என அதிர்ந்தார் தந்தை.
''இல்லை...அப்பா உங்கள் மதிப்பு என்ன என்பதை என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
சாதாரண வெண்ணெய்க்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக் கூடாது. ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவளும் உணர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு பணம் எடுக்கும் ஏ.டி.எம்., கார்டாக இருக்கலாம்.. ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டையாகத் தான் இருக்க வேண்டும்'' என மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தான்.
தாய், தந்தையரை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X