புதிய பார்வையில் ராமாயணம் - 47
ஜூலை 07,2020,11:44  IST

கைகேயி செய்த நன்மை

லட்சுமணன் காத்திருந்தான். அயோத்திக்குத் திரும்பிய பிறகு அவன் தீர்க்க வேண்டிய கணக்குகள் நிறைய இருந்தன. அந்தக் கணக்குகளின் மையப்புள்ளி ராமனாக இருந்ததால் அவனால் அவசரப்பட முடியவில்லை. ஆனாலும் தன் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்து சம்பந்தப்பட்டவர்களைத் தலை குனிய வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வு மட்டும் அவனிடம் குறையவேயில்லை.
அரண்மனைக்குள் நுழைந்த ராமனின் கண்கள் பரபரப்புடன் அலைந்தன. அப்படி ஒரு பரபரப்பை லட்சுமணன் அதுவரை கண்டதில்லை. காட்டில் இருந்து திரும்பிய தன்னை வரவேற்கவும், பேசவும் முனிவர்கள், சிற்றரசர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் காத்திருக்கும் போது ராமனின் கண்கள் மட்டும் யாரையோ தேடிக் கொண்டிருந்தன. வருவோரிடம் அவன் இன்முகம் காட்டி இயல்பாக பேசிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனது எண்ணத்தை லட்சுமணன் தெரிந்து கொண்டான்.
யாரைத் தேடுகிறார் அண்ணன்?
நிச்சயம் தன்னுடைய தாயைத்தான். என்ன தான் வயதானாலும், தனக்கென்று குடும்ப வாழ்க்கை அமைந்து விட்டாலும், எந்த நிலையிலும் தாயின் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர் மகன் அல்லவா அவர்! கோசலை போன்ற தாய் அமைய ராமன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தர்மத்தை உறுதியாகக் கடைபிடிக்கச் சொல்லிக் கொடுத்தவள். வாக்கு மாறாத சத்தியத்தை உணர்த்தியவள். கணவர் சொல்லை மீறாதவள். தன்னுடைய சக்களத்தியின் வரம் காரணமாகத் தன் மகனின் அரியணை உரிமை பறிக்கப்பட்டாலும், கணவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அற்புத மனைவி அவள். சக்களத்தியின் மகன் அரியாசனத்தில் அமரப் போகிறான் என்று கேட்டும், அதனால் சற்றும் பாதிக்கப்படாதவள் அவள். அதே சமயம் தன் மகன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கொடுமையையும் துக்கத்தை மறைத்தபடி ஏற்றுக் கொண்டவள் அவள். அத்தகைய தாய் கோசலையைத்தான் முதலில் பார்க்க ராமன் ஆவல் கொண்டிருக்கிறான் என லட்சுமணன் நினைத்தான்.
ராமன் சுற்றி நின்ற அனைவரையும் பார்த்தான். அடடா... அந்தக் கண்களில்தான் எத்தனை ஒளி! அந்த வெறும் பார்வையே எல்லா குறைகளையும், வேதனைகளையும் நிவர்த்தி செய்து விடுகிறதே! ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அந்தக் கண்களில் பாசம் மிகுந்த ஏக்கம்! வசிஷ்டரை நெருங்கி வந்தான் லட்சுமணன்.
''தாயார் கோசலையைப் பார்க்க அண்ணன் ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது. உடனே அண்ணனை அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லலாமா?” எனக் கேட்டான்.
அரண்மனைப் பணியாளர்களுக்கு சைகை மூலமாக உத்தரவு பிறப்பித்தார் வசிஷ்டர். தான் முன்னே செல்ல, ராமனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி அழைத்தார். சீதை, லட்சுமணனுடன் தாயார் இருப்பிடம் நோக்கி நடந்தான் ராமன்.
அந்தப்புரத்தில் ஓடோடி வந்தாள் தாய் கோசலை. “ராமா, மகனே...” என்ற அவளது கூக்குரல் அங்கிருந்தவர்களின் உள்ளத்தை உலுக்கியது. கண்ணீர் பெருகச் செய்தது.
அன்று மலர்ந்த தாமரை போலிருந்த ராமன், அன்னையின் அரவணைப்பில் பால்ய நினைவுகளால் நெகிழ்ந்தான். ஆனால், இதென்ன அவன் பார்வை எங்கோ செல்கிறதே, யாரையோ தேடுகிறதே...பளிச்சென கோசலையைச் சற்றே தள்ளி நிறுத்தினான் ராமன். அந்தப்புரத்தில் இருந்த சிறு மண்டபம் நோக்கி ஓடினான்,
மண்டபத் துாண் பின்னால் மறைந்தபடி நின்ற பெண்ணிடம் சென்று காலில் விழுந்தான் ராமன். பதறிப்போன அவள் ராமனை அப்படியே தொட்டுத் துாக்கினாள். வெளிச்சத்துக்கு வந்த அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டனர். லட்சுமணனோ ஆத்திரத்தின் மொத்த உருவமாக மாறினான். ஆமாம், அவள் கைகேயி!
'என்ன கொடுமை இது? ராமனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரச பதவியை நயவஞ்சகமாகப் பறித்தவள், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்துக்கு வித்திட்டவள், அங்கே தன் மனைவியான சீதையை பறிகொடுக்க காரணமானவள், ராஜ சுகத்தை அனுபவிக்க விடாமல் கானக வாழ்வை மேற்கொள்ளச் செய்தவள்... அவளையா ராமன் வணங்குகிறான்?'
கிட்டத்தட்ட ராமனை அப்படியே பற்றி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் லட்சுமணன்.
“அண்ணா, என்ன காரியம் செய்கிறீர்கள்? உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், மனைவிக்கும், சகோதரர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்தமாக அயோத்தி மக்களுக்கும் தீங்கு செய்த பெண்ணின் காலில் போய் ஏன் விழுகிறீர்கள்? நம் தந்தையின் மரணத்துக்கு காரணமான இவள் எந்தப் போற்றுதலுக்கும் உரியவள் அல்ல. யாருடைய மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏற்றவள் இல்லாத இவள் காலில் போய் விழுவது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சார்ந்திருக்கும் எங்களுக்கும் இழுக்கு'' என்றான். உடலே பதறியது அவனுக்கு. சுற்றி நின்றவர்களும் சொல்வதறியாமல் சிலை போல நின்றனர்.
ராமன் அவர்களை பொருட்படுத்தவில்லை. கைகேயியின் கைகளைப் பற்றிக் கொண்டான். “அம்மா...” என்றழைத்த அந்தப் பாசக் குரலில் அப்படியே கரைந்து போனாள் கைகேயி. செய்த பாவத்தின் குற்ற உணர்வு அவளுக்கு கண்ணீராக பெருக்கியது.
“அழாதீர்கள் அம்மா. இதோ நான்தான் வந்துவிட்டேனே...” ராமன் அவளைப் ஆசுவாசப்படுத்தினான்.
“நான் பாவியப்பா. உன்னைப் போன்ற மகனை இழக்கத் துணிந்த மகாபாவி.
என் மகன் நாடாள வேண்டும் என்ற பேராசையில் நான் இழந்தவைதான் எத்தனை... அன்புக் கணவர், உன்னுடைய அருகாமை,
என் சக்களத்திகளின் பாசம், அயோத்தி மக்களிடம் இருந்த மதிப்பு, ஏன் கடைசியில் என் மகன் பரதனே என்னைத் துாற்றி துாசியாகப் புறக்கணித்தானே... நீயும்தான் மனைவியை இழந்து, காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து எவ்வளவு துன்பப்பட்டாய்... ராமா தயவுசெய்து என் மீது அன்பு காட்டாதே. நான் அதற்கு தகுதியானவள் அல்ல. என் மீது கடுஞ்சொல் வீசு, நீ ஓங்கி அறைந்தாலும் எனக்கு சம்மதமே...”
லட்சுமணன் பரபரத்தான். ராமன் தன் வேதனைகளை ஆவேசமாக வெளிப்படுத்தப் போகிறான் என பார்த்துக் கொண்டிருந்தான்.
“அம்மா...எல்லாம் நன்மைக்காக நடப்பவைதானம்மா. என்னை காட்டிற்கு அனுப்பியதால் நீங்கள் இழந்தவற்றை நான் தியாகம் என்றே சொல்வேன். ஆமாம். அதனால்தான் அரக்கர்கள் பலர் அழிந்தனர். அதுவரை துன்பப்பட்ட மக்கள், முனிவர்கள் எல்லாம் நிம்மதியாக வாழ முடிந்தது. இதெல்லாம் நீங்கள் என்னை காட்டிற்கு அனுப்பி வைத்ததால் நிகழ்ந்தவைதானே? அதற்காக நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
கைகேயி மட்டுமல்ல, லட்சுமணன் உட்பட அனைவரும் கண்ணீர் பெருக்கினர். இப்படியொரு உயர்ந்த உள்ளம் ராமனைத் தவிர யாருக்கு இருக்கும்?

தொடரும்
பிரபு சங்கர்
72999 68695

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X