முத்தான மூன்று உண்மைகள்
ஜூலை 07,2020,11:48  IST

 அசுரனான மகாபலி குருநாதர் சுக்ராச்சாரியாரின் வழிகாட்டுதலுடன் யாகங்கள் நடத்தி வலிமை பெற்றான். ஆணவத்துடன் திரிந்து தேவலோகத்தைக் கைப்பற்றினான். தேவேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஓடி ஒளிந்தான். வருத்தம் அடைந்த இந்திரனின் தாயான அதிதி, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்து அவரையே மகனாகப் பெறும் வரம் பெற்றாள். ஆவணி துவாதசியும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில் அதிதி, கஷ்யபர் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மகாவிஷ்ணு. குள்ளமாக இருந்ததால் 'வாமனர்' என அழைக்கப்பட்ட அவர் சிறுவனாக வளர்ந்தார்.

நர்மதை நதிக்கரையில் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினான் மகாபலி. அதில் அந்தணர்களுக்கு தானம் அளிக்க ஏற்பாடானது. அங்கு வந்த வாமனர் மூன்றடி நிலத்தை தானம் கேட்டார். வந்திருப்பவர் காக்கும் கடவுளான விஷ்ணு என்பதை அறிந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் தானம் அளிப்பதை தடுக்க முயன்றார். ஆனால் மகாபலி ஏற்க மறுத்தான். தானம் கொடுக்கும் முன், தீர்த்தத்தை தாரை வார்க்க கமண்டலத்தை எடுத்தான் மகாபலி. அதற்குள் வண்டாக மாறிய சுக்ராச்சாரியார், கமண்டலத்தில் தீர்த்தம் வரும் வழியை அடைத்தார். தர்ப்பை புல்லினால் வண்டை வெளியே தள்ளினார் வாமனர். இதனால் வண்டாக மாறிய சுக்ராச்சாரியாருக்கு ஒரு கண் போனது.

தானத்தைப் பெற்றுக் கொள்ளும் முன் வாமனர் உடலைப் பெருக்க ஆரம்பித்தார். வானில் உள்ள நட்சத்திரங்கள் அவரது பாதங்களுக்கு ஆபரணமாக காட்சியளித்தன. ஒரு காலால் பூமியையும், மற்றொரு காலால் மேலுலகத்தையும் அளந்தபின் மூன்றாவது அடியை எங்கு வைப்பது எனக் கேட்டார். மகாபலி தன் தலையில் வைக்குமாறு பணிவுடன் தெரிவித்தான். அசுரனின் ஆணவம் அழிந்ததைக் கண்ட வாமனர், பாதாள உலகிற்கு மகாபலியை மன்னராக்கி, அடுத்த தேவேந்திர பதவி அளிப்பதாக ஆசிர்வதித்தார். மேலும் மகாபலியின் அரண்மனை வாயில் காப்பானாக தாம் இருக்கப் போவதாகவும் வாக்களித்தார்.

இந்த அவதாரம் மூலம் முத்தான மூன்று உண்மைகள் உணர்த்தப்படுகின்றன.
1. தர்ம செயல்களில் ஈடுபடுவதோடு, கொடுத்த வாக்கை காப்பாற்றினால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை அசுரனான மகாபலியின் வாழ்வு உணர்த்துகிறது.

2. நற்செயலில் ஈடுபடுபவரை தடுத்தால் தண்டனை உறுதி என்பதை அசுரகுரு சுக்ராச்சாரியரின் கண் இழந்த சம்பவம் காட்டுகிறது.

3. மகாபலியைக் காக்கும் கடமையை கடவுளே ஏற்றதன் மூலம் தன்னிடம் சரணடைந்தவரை கடவுள் காப்பாற்றுகிறார் என்பது சரணாகதியின் மகிமையை சொல்கிறது.

இனி மாறு வேட போட்டிகளில் பங்கேற்கும் போது ராமர், கிருஷ்ணர் போல வாமனர் வேடமிட்டால் குழந்தைகள் இதன் சிறப்பை அறிய வாய்ப்புண்டாகும்.


கே.வி. ராமலிங்கம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X