புதிய பார்வையில் ராமாயணம் - 48
ஜூலை 11,2020,16:02  IST

பாத தரிசனம்

அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டது. அனைவரும் ராமனின் வருகையை எதிர்பார்த்த போது, ஒரு உயிர் மட்டும் லட்சுமணன் வருகையை எதிர்நோக்கியது. அது வேறு யாருமல்ல, அவனது மனைவி ஊர்மிளைதான். அண்ணனுக்குச் செய்யும் சேவையில் எந்தக் குறைபாடும் கூடாது என்பதற்காக, கணவருக்குத் தன் நினைவு வரவே கூடாது என ஊர்மிளை சத்தியம் வாங்கியிருந்தாள். தான் அவன் நினைவில் ஏங்கும் நிலைமை வந்தால், அந்த உணர்வு, காற்றில் பறந்து சென்று அவனிடம் தங்கி விடும் என்பதற்காக கணவர் வரும்வரை துாங்கும் வரத்தைப் பெற்றாள்.
லட்சுமணன் வந்துவிட்டான்.
சம்பிரதாயப்படி அவன் தாயார்களான கோசலை, கைகேயி மற்றும் பெற்ற தாயான சுமித்திரையின் பாதம் பணிந்து ஆசி பெற்றான். பிறகு சகோதரர்கள் பரதன், சத்ருக்னனை ஆரத்தழுவி பிரிவுத் துயரை தீர்த்துக் கொண்டான். அடுத்து வரப்போவது தன்னிடம்தான் என்ற ஆவலுடன் காத்திருந்தாள் ஊர்மிளை.
அயோத்திக்கு வந்து விட்டானே தவிர, தன் மாளிகையில் அமர்ந்தபடி வனவாசத்தின் இறுதி நாட்களின் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து போயிருந்தான் லட்சுமணன்.
அண்ணனின் துக்கத்தில் பங்கேற்று தானும் அவனைப் போல தவித்த வன வாசத்தை நினைவு கூர்ந்தான். அண்ணியார் என்ற உறவு காரணமாக சீதையை அவன் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. குரல் மட்டும் கேட்டுப் பழகியவன் அவன். அண்ணியார் வருகிறார் என்றால் லட்சுமணனின் கண்கள் நிலத்தைப் பார்க்கும். அண்ணியாரின் பாதம் மட்டும் அந்தக் கண்களில் படும். தாய் என்னும் தெய்வத்தின் பாத தரிசனம் மட்டும் கண்டு பரவசப்படும் பக்தனாகவே இருந்தான் லட்சுமணன்.
அந்த அன்னை மீட்கப்பட்டு விட்டாள். தாயேயானாலும் குழந்தை மனதோடு மாய மானை அவள் விரும்பியதை தவறு என்றா சொல்ல முடியும்? ஒருவேளை தீர்க்க தரிசனமாக ராவணன் அழிவு நெருங்கியதை உணர்ந்து அதற்குத் தான் மூலகாரணமாக அமைய வேண்டும் என்று அந்தத் தாயே விரும்பினாளோ? அதற்காகத் தான் படவேண்டிய துன்பங்களை அறிந்தே ஏற்றுக் கொண்டாளோ? அதனால்தான் ராமனை அவ்வளவு வற்புறுத்தினாளா? காட்டின் அந்தப் பகுதியில் அதுவரை அதுபோன்ற ஒரு பொன்மானைக் கண்டதில்லை, இது ஏதோ ஏமாற்று வேலை போலிருக்கிறது என்று ராமன் தன் ஊகத்தைச் சொன்னபோதும், விடாப்பிடியாக, அந்த மான் தனக்கு வேண்டும் என்று அன்னை அடம்பிடித்ததற்கும் காரணம் இருந்திருக்கிறது. எந்தத் தாய்க்கும் இயல்பாக இருக்கும் தியாக உணர்வு சீதைபிராட்டிக்கும் இருக்கிறது. ஆனால், இவரது தியாகம் கணவருக்காக, குழந்தைகளுக்காக, குடும்பத்துக்காக இல்லை. உலக நன்மைக்காக; பொல்லாதவர்கள் பொடிப் பொடியாக. ராவணனை அழிப்பதன் மூலம் அவனைப் போல தீயவர்கள் தங்களுக்கு படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்ற பரந்த நோக்கில்தான்.
அன்னையின் விருப்பத்திற்குப் பின்னால் இருந்த நோக்கம் புரிந்தோ புரியாமலோ அரை மனதுடன் ராமன் அந்தப் பொன்மானை துரத்திச் சென்றான். காவலுக்கு நின்றிருந்த லட்சுமணன் தர்ம சங்கடத்திற்கு ஆளானான். அண்ணன் தனியே செல்ல அனுமதித்திருக்கக் கூடாது…. நேரம் செல்லச் செல்ல சீதையின் தவிப்பு அதிகமாகியது. குடில் வாசலுக்கும், உள்ளுக்குமாக அவள் தவிப்புடன் நடந்தாள். வாசலுக்கு வரும்போது, மரியாதை காரணமாக தலைகுனிந்து நின்ற லட்சுமணனின் கண்களுக்கு அவளுடைய பரிதவித்த பாதங்கள் பட்டன. தாமரையாக மலர்ந்திருந்த அந்தப் பாதங்களில் லேசான நடுக்கம் பரவியிருந்தது. அப்போதே ஓடிச் சென்று ராமனுடன் இணைந்து பொன்மானை பிடிப்பதில் தானும் பங்கேற்க நினைத்தான் லட்சுமணன். ஆனால், தன்னைக் காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றது, அன்னையின் பாதுகாப்பு கருதிதான் என்பதால் குடிலின் வாசலிலேயே காவல் புரிந்தான்.
ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம், ராமனின் குரல் ஒலித்தது. ''லட்சுமணா, சீதா...'' சீதையைவிட அதிகம் திடுக்கிட்டவன் லட்சுமணன்தான். இப்படி ஒரு தீனமான குரலில் ராமன் ஒருநாளும் உதவி கோரும் அழைப்பு விடுத்ததில்லை. துன்பம், வலி, வேதனை, ஏமாற்றம் என முகத்தளவில்கூட வலியை காட்டத் துணியாத அவன் இப்போது இப்படி மரண ஓலமிட முடியுமா? இல்லை. இது ஒரு மாயை. அண்ணன் ஏற்கனவே சொன்னபடி அந்த மானே ஒரு மாயைதான். ஆகவே ராமனின் இந்தக் குரலும் ஒரு மாயைதான். லட்சுமணன் அமைதி காத்தான்.
ஆனால், சீதைக்கோ பொறுமை இல்லை. ராவண வதத்திற்கு அவள் நாள் குறித்துவிட்டாள் போலிருக்கிறது. இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியிருக்கும். உடனே லட்சுமணனை நோக்கி சப்தமிட்டாள்: “அண்ணன் குரல் உனக்குக் கேட்கவில்லையா? சிறிதும் சலனமின்றி நிற்கிறாயே! போ, உடனே போய் காப்பாற்று...”
என்னது? அண்ணனை காப்பாற்றுவதா? அதையும் யார் சொல்வது? சிவதனுசு முறித்த பராக்கிரமத்தில் இருந்து, பரசுராமரை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரம் என்றெல்லாம் உடனிருந்தே பார்த்திருந்த சீதைக்கா இப்படி சந்தேகம்? நானே, 'ஐயோ அண்ணனுக்கு ஆபத்து' என்று பதறினாலும், 'உளறாதே. அவர் வீரத்தைக் குறைத்து மதிப்பிட்ட உன்னை அவருடைய தம்பி என்று சொல்வதே கேவலம்' என்று வெகுண்டு எழ வேண்டியவள் அல்லவா அவள்? ஆனாலும் அவள் வீம்பாக நின்றாள். லட்சுமணன் அங்கிருந்து விரைந்து செல்வதில் அவள் தீர்மானமாக இருந்தாள்.
முதலில் கணவர், பிறகு கொழுந்தன். இருவரையும் அனுப்பிவிட்டுத் தான் தனிமையில் இருக்கத் துணிந்தது ஏன்? அப்போதுதான் ராவணனை ஈர்க்க முடியும், அவனால் தான் சிறைபிடிக்கப்பட முடியும், தன் பிரிவால் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டு வெறியுடன் ராவணனை வதம் செய்ய முன்வருவான் ராமன்.
அப்படியே நடந்தது. ராவண வதத்திற்குப் பிறகு வந்த சீதையின் பாதம் பணிந்தான் லட்சுமணன். ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்.
நடந்து முடிந்த சம்பவங்களை நினைத்தபடியே லட்சுமணன் தன் மாளிகைக்கு சென்றான். அப்போது யாரோ உள்ளே வரும் மெலிதான அசைவு தெரிந்தது. தரையில் நடந்து வந்த அந்தப் பாதங்களைக் கண்டு வியந்தான். அது அண்ணியாரின் பாதங்கள் அல்லவா? அன்னை சீதாதேவி இங்கே எதற்காக வந்திருக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. அப்படியே அந்த பாதங்கள் முன் விழுந்து நமஸ்கரித்தான்.
“ஐயோ, என்ன செய்கிறீர்கள்?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். எதிரில் பயம், கூச்சம், அதிர்ச்சி என்று எல்லாவித எதிர்மறை உணர்வுகளாலும் ஆட்கொள்ளப்பட்டு நின்றிருந்தாள் ஊர்மிளை. தன் கால்களில் கணவர் விழுவதா? அவள் கண்களில் மிரட்சி. லட்சுமணனுக்கு புத்தி பேதலித்து விட்டதா? தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லாத குற்ற உணர்வு இத்தனை நாள் அவனை தகித்ததோ? அதனால்தான் இப்படி மன்னிப்பு கேட்பதற்காக காலில் விழுந்தானா..?
லட்சுமணனும் கூச்சத்தால் நெளிந்தான். மனைவியை அருகில் அமர்த்திக் கொண்டான். நடுங்கிய அவளை ஆதரவாக அணைத்தான்.
நெடிய நாள் பிரிந்தவனிடம் பேச எவ்வளவோ விஷயம் இருந்த ஊர்மிளைக்கு முதல் பேச்சே இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது: “ஏன் இப்படிச் செய்தீர்கள்?”
நடுங்கும் அந்தக் குரலில் தொனித்த கனம் அவனை முறுவலிக்க வைத்தது. “என்னை மன்னித்துவிடு ஊர்மிளை...” என்று மீண்டும் சரணாகதியை ஒலித்தான் லட்சுமணன். “உன் பாதங்கள்... அது... அதை... அண்ணியாரின் பாதங்கள் என்று நினைத்துக் கொண்டேன். காட்டில் அண்ணனுடன் வாழ்ந்த நாட்களில் அண்ணியாரின் பாதங்களுக்கு மேல் ஏறிட்டுப் பார்த்துப் பழகாதவனாக இருந்தேன். அண்ணியார் என்னருகே நடந்து வந்தார் என்றால் அந்த பாத அசைவிலிருந்து, அவரது தேவை என்ன என்பதை அறிந்து அதனை உடனே செய்து கொடுத்துப் பழகிவிட்டேன். அதனால் அதுபோன்ற உன் பாதங்களைக் கண்ட நான் அது அண்ணியாரின் பாதம் என நினைத்து விட்டேன். அவரிடம் ஆசிர்வாதம் பெறவே வணங்கி எழுந்தேன்... என்னை மன்னித்துவிடு ஊர்மிளை...” நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ஊர்மிளை.

தொடரும்
பிரபு சங்கர்
72999 68695

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X