ஊரடங்கும் நந்தனாவும்
ஜூலை 11,2020,16:14  IST

 ஊரடங்கு நேரத்தில் வீண் பொழுது போக்குகளில் ஈடுபட நந்தனாவுக்கு விருப்பமில்லை. பரணில் இருந்த பழைய புத்தகங்களை தேடி எடுத்தாள். கதை புத்தகங்களோடு ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், அவ்வையார், ஆண்டாள், ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்களின் வரலாறையும் படிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்தது. அவற்றை பற்றி தந்தையிடம் விவாதம் செய்தாள்.
ஒருநாள், ''அப்பா.... அர்ஜூனன், லட்சுமணன், அனுமன், பிரகலாதன், அகலிகை, ஆண்டாள், ஆதிசங்கரர், ராமானுஜர், நாயன்மார் போன்ற பக்தர்களுக்கு கடவுள் அருள்புரிந்துள்ளார். இவர்களில் முதலிடம் யாருக்கு?'' எனக் கேட்டாள்.
வியப்பாக இருந்தாலும், மகளின் சிந்திக்கும் திறனை எண்ணி மகிழ்ந்தார். ''நந்தனா! ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது நியாயம் ஆகாது. கடவுளின் அருள் பெற்ற அனைவரும் போற்றதலுக்கு உரியவர்கள்'' என்றார்.
ஆனால் அவள் விடவில்லை.
“இல்லை அப்பா நீங்கள் சொல்லத்தான் வேண்டும்” என அடம் பிடித்தாள். சிரித்தபடியே, '' நீ என்னை விட மாட்டாய் போலிருக்கிறதே...சரி, சொல்கிறேன். எதனால் அவர்கள் உன்னத நிலையை அடைந்தனர் என நினைக்கிறாய்?'' எனக் கேட்டார் தந்தை.
''அர்ஜுனன் - பகவத் கீதையை கேட்டவர் அதுவும் கிருஷ்ணரிடமே!
லட்சுமணன் - ராமருக்கு சேவை செய்ய வாழ்வையே அர்ப்பணித்தவர்.
அனுமன் - ராம பக்தரான இவர் சீதையை ராமரிடம் சேர்த்து வைத்தவர்.
பிரகலாதன் - இவருக்காக திருமால் நரசிம்மராக அவதரித்தார்.
ஆண்டாள் - பக்தையான இவர் ரங்கநாதரை மணந்தார்
இப்படி இவர்கள் பக்திக்காக போற்றப்படுகின்றனர்'' என விளக்கம் அளித்தாள்.
'கதைகளை ஆழமாக படித்திருக்கிறாய் மகிழ்ச்சி!' என்று மகளை பாராட்டி விட்டு தொடர்ந்தார். 'உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு நாளுக்கு முன்பு என்னிடம் ஒரு சந்தேகம் கேட்டாய் - 'லட்சுமணனாக பிறந்த ஆதிசஷேனே மறுபிறவியில் பலராமராக பூமிக்கு வந்தார். ஆனால் பலராமர் தசாவதாரங்களில் ஒருவராக இடம்பிடிக்க, லட்சுமணர் மட்டும் ஏன் அவதாரமாகக் கருதப்படுவதில்லை' என்றாயே அதற்கான பதிலை இப்போது சொல்கிறேன்.
ராமருக்கு தம்பியாக பிறந்து வாழ்நாள் முழுவதும் சேவை செய்தார் ஆதிசஷேன். தன்னலமற்ற அவரை போற்றும் விதமாக கிருஷ்ண அவதாரத்தில் தன் மூத்த சகோதரனாக அவதரிக்கச் செய்ததோடு, தினமும் அவரை வணங்கியும் வந்தார் பகவான் கிருஷ்ணர். இதன் மூலம் தசாவதாரங்களில் பலராமரையும் ஒரு அவதாரமாகவும் உலகறியச் செய்தார். அதனால் எனக்கு மிகவும் பிடித்தவர் லட்சுமணர் தான். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் ஒருவரை பகவான் அவதார புருஷராகவே அங்கீகரித்து அருள்புரிகிறார் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் நந்தனாவின் தந்தை.

கே.வி.ராமலிங்கம்
thedal.articles@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X