தாக்க தாக்க தடையறத் தாக்க!
ஜூலை 24,2020,20:59  IST

முருக பக்தரான பாலதேவராயர் ஒருமுறை திருச்செந்துாரில் இருக்கும் போது வயிற்று நோயால் அவதிப்பட்டார். அவருக்கு காட்சியளித்த முருகப்பெருமான், கந்தசஷ்டி கவசம் பாடச் செய்து நோயை போக்கினார். இந்தக் கவசத்தை படிப்பவர்கள் உடல்நலத்துடன் வாழ்வர் என்றும் அருள்புரிந்தார். ஒவ்வொரு படை வீட்டுக்கும் கவச பாடல்கள் இருந்தாலும், திருச்செந்துார் கவசமான கந்தசஷ்டி கவசமே பிரபலமானது
வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை இதை படித்தால் தெரிந்து கொள்ளலாம். முதலில் பக்தன், கடவுளை தியானிக்க வேண்டும். பின் மனமுருகி அழைக்க வேண்டும். அவரை மனதில் நிறுத்தி கஷ்டங்களில் இருந்து விடுவிக்க முறையிட வேண்டும். கடைசியாக அவரையே சரணடைய வேண்டும்.
என்னை காப்பாற்ற உடனே வா என முருகனை அழைக்கிறார் பாலதேவராயர். பின்னர் “சரவணபவ” என்னும் மந்திர எழுத்துக்களை முன்பின்னாக மாற்றியும், 'ர', 'ரி' எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரித்தும், முருகப்பெருமானை மனதில் நிலை நிறுத்துகிறார். இது மந்திரங்களை பிரயோகிக்கும் முறைகளில் ஒன்று.
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி…
என்று முருகனின் தோற்றத்தை பாடுகிறார். பின் முருகனின் திருவடி, சிலம்பு ஏற்படுத்தும் ஒலியை வர்ணிக்கிறார்.
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக
மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
''முருகா...உன் திருவடியை சரணடைந்தேன். தலை, முகம், கண்கள், காதுகள், மூக்கு என எல்லா உறுப்புகளையும் காத்தருள்க'' என்றும், ''முருகா! உன்னைப் பாடும் வாய், பல், கன்னம், மார்பு, தோள்கள், பிடரிகள், முதுகு, விலா முதலிய உறுப்புகளை வேற்படையால் காத்தருள வேண்டும்'' என உறுப்புகளை வரிசையாக சொல்கிறார்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
“முருகப்பெருமானே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளை போக்கி, நோய், பில்லி, சூனியம், வறுமை, தீராத கவலையில் இருந்து விடுவிப்பாயாக'' என முறையிடுகிறார்.
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க…
பல திருநாமம் சொல்லி முருகனைப் போற்றும் தேவராயர், கவசத்தை படிக்கும் முறையைச் சொல்கிறார். எப்போது, எந்த மனநிலையுடன் படிக்க வேண்டும், படித்தால் கிடைக்கும் பலன் பற்றி விளக்குகிறார்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி…
என விவரிக்கிறார்
காலை, மாலையில் உடல், மனத்துாய்மையுடன் பாட வேண்டும். இதனால் நவக்கிரகங்கள் நன்மை அளிக்கும் எனக் குறிப்பிடுகிறார்.
புராண காலத்தில் அசுரர்களான ஹிரண்யகசிபு, ராவணன், கம்சன், சிசுபாலன் போன்றவர்கள் கடவுளை இழிவுபடுத்தினர். ஆனாலும் கடவுளை யாராலும் அழிக்க முடியாது.
குழந்தைகளுக்கு கந்தசஷ்டி கவசத்தைச் சொல்லிக் கொடுப்போம்.
கந்தனுக்கு அரோஹரா! முருகனுக்கு அரோஹரா!

கே.வி.ராமலிங்கம்
thedal.articles@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X