நடந்தது அந்த நாள்! முடிந்ததா பாரதம்!
ஜூலை 31,2020,13:11  IST

தேவர், அசுரர்களுக்கு இடையே யுத்தம், மகாபாரத யுத்தம் நடந்ததாக புராணங்கள் சொல்கிறதே உண்மையா? இதன் உட்கருத்து என்ன என்பதை அறிய விரும்பிய பக்தர் ஒருவர், காஞ்சி மகாசுவாமிகளைச் சந்தித்து கேட்டார்.
மகாசுவாமிகள் பக்தரிடம், ''தேவ அசுர யுத்தம் பற்றி உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளது. ஆசார்யர் ஆதிசங்கரர் இதற்கான விளக்கம் அளித்திருக்கிறார்.
மனிதனின் மனம்தான் யுத்தம் நடக்கும் இடம். ஓய்வே இல்லாமல் இங்கு யுத்தம் நடக்கிறது. புராணத்தில் சொல்லப்படும் வாள், வில்லுடன் நடத்தும் சண்டை இல்லை இது.
மனதில் ஒருபக்கம் நல்ல செயல்களில் ஈடுபடு என்று சொல்வது மாதிரி இருக்கும். மற்றொரு பக்கம் வேண்டாத தீய செயல்களைச் செய்ய யாரோ துாண்டுவது போல இருக்கும்.
இப்படி நல்லதுக்கும், கெட்டதுக்குமாக சண்டை நடந்து கொண்டேயிருக்கிறது.
நல்ல எண்ணங்களை தேவர்கள் என்றும், கெட்ட எண்ணங்களை அசுரர்கள் என்றும் உருவகம் செய்துள்ளனர். மனதைப் பொறுத்த வரை பெரும்பாலும் அசுரர்களுக்கே வெற்றி கிடைக்கிறது. எப்போதாவது தான் தேவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
அசுரர்களே வெற்றி பெற வேண்டும் என்றே நாமும் எண்ணுகிறோம். ஆனால் அந்த வெற்றி துக்கத்தில் முடியும் போது நம் புத்தி வீணாகிவிட்டதே என்று வருந்துகிறோம்.
நல்ல எண்ணங்களாகிய தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று எப்போதாவது நினைக்கிறோம். அப்படி வெற்றி கிடைத்தால் யாருக்கும் துக்கம் வருவதில்லை. மாறாக மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது.
இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஒரு குழந்தையிடம் இருக்கும் வாழைப்பழத்தை இன்னொரு குழந்தை பலவந்தமாகப் பிடுங்கியது. பறி கொடுத்த குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது இன்னொரு குழந்தை அந்தப் பக்கமாக வந்த போது, பறிகொடுத்த குழந்தை அழுவதை பார்த்தது.
உடனே புதிதாய் வந்த குழந்தை, தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை அழும் குழந்தைக்கு கொடுத்தது. இப்போது பழத்தைப் பிடுங்கிய குழந்தைக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்றாலும் அதையும் விட, பழத்தைக் கொடுத்ததே, அக்குழந்தைக்கே மகிழ்ச்சி அதிகமிருக்கும்.
இப்படி எண்ணம், சொல், செயலால் நற்செயல்களில் நாம் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் அசுரர்கள் தோற்பர். தேவர்கள் வெற்றி பெறுவர். தேவர்களாகிய நல்ல எண்ணங்கள் வெற்றி பெற வேண்டுமானால் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். மனதில் எழும் ஒவ்வொரு எண்ணங்களையும் கண்காணித்தபடி இருக்க வேண்டும்'' என விளக்கம் அளித்தார்.
தெளிந்த மனதுடன் சுவாமிகளை வணங்கிய பக்தர் விடை பெற்றார்.

உடல்நலம் பெற...காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

திருப்பூர் கிருஷ்ணன்
thiruppurkrishnan@hotmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X