மீண்டும் பச்சைப்புடவைக்காரி - 43
ஜூலை 31,2020,13:14  IST

பாவ மன்னிப்பு

“பத்து வருஷமாக் கூடப் பொறந்தவன் மாதிரி பழகினவன் என் முதுகுல குத்திட்டான்யா. அவன கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிரலாம்னு துடிக்கிறேன்யா.”
புலம்பினார் ஒரு பெரிய செல்வந்தர். நாங்கள் ஒரு நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
நடந்தது இதுதான். செல்வந்தர் வீட்டில் வருமான வரி ரெய்டு வரப்போகிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. கணக்கில் வராத பணம் ஒரு கோடி ரூபாயை இரவோடு இரவாக நண்பரான மற்றொரு செல்வந்தரிடம் கொடுத்திருக்கிறார்.
மறுநாள் வருமான வரி ரெய்டு நடந்தது. எதுவும் தேறவில்லை. ஒரு மாதத்தில் இன்னும் பல ஆவணங்களை ஆராய்ந்தபின் வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து விட்டனர்.
நிம்மதியுடன் நண்பரின் வீட்டுக்குப் போனார் செல்வந்தர். அவரது கைகளைப் பற்றி கண்ணீர் மல்க நன்றி சொல்லிவிட்டு பணத்தைக் கேட்டிருக்கிறார்.
“எந்தப் பணம்?” என நண்பர் சொன்னவுடன் செல்வந்தருக்கு நெஞ்சு வலித்தது.
“இன்கம்டாக்ஸ் ரெய்டு வரப் போறாங்கன்னு தெரிஞ்சு ஒரு ஞாயிற்றுக்கிழமை ராத்திரி பத்து மணிக்குக் கொண்டுவந்து கொடுத்தேனே!”
“நான் கருப்புப் பணத்தை கையால கூடத் தொட மாட்டேன்.
“படுபாவி! கோடி ரூபாயை அமுக்கிட்டயேடா! பொண்ணு கல்யாணத்துக்கு வச்சிருந்த பணம்டா. இது தெரிஞ்சா என் பொண்டாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்திரும்டா.”
நண்பர் அலட்டிக் கொள்ளவில்லை.
செல்வந்தரால் போலீசில் புகார் கொடுக்கமுடியாது. கணக்கில் வராத பணம் ஆயிற்றே! அப்படியே கொடுத்தாலும் பணம் கொடுத்ததற்கான ஆதாரமும் கிடையாதே!
“நான் முடிவு பண்ணிட்டேன். மடப்புரம் காளி கோயில்ல காச வெட்டிப் போட்டு நேந்துக்கப்போறேன். அவன் ரத்தம் கக்கிச் சாகப்போறான்?”
அவருடைய அலைபேசி ஒலித்தது. “போலீஸ் கமிஷனர் பேசறாரு. பத்து நிமிஷமாகும். யோசிச்சி வையுங்க.”
சீருடை ஊழியை ஒருத்தி மேஜையைத் துடைப்பது போல் அருகில் வந்தாள்.
“கவலைப்படாதே. உன்னை நான் பேச வைக்கிறேன். மனம் நிறைய அன்பு இருக்கட்டும். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
கீழே விழுந்த பேனாவை எடுக்கும் சாக்கில் அவளது கால்களைத் தொட்டு வணங்கினேன்.
பதட்டத்துடன் திரும்பி வந்தார் செல்வந்தர். என் மனதிலிருந்து வார்த்தைகள் பொங்க ஆரம்பித்தன.
“கருப்புப்பணத்த உங்க நண்பர்கிட்ட கொடுக்கலேன்னா என்ன ஆயிருக்கும்?”
“அதிகாரிங்க அள்ளிட்டுப் போயிருப்பாங்க.”
“ஆடிட்டர், வக்கீல வச்சிக்கிட்டு அப்பீல் கேசுன்னு அஞ்சாறு வருஷம் அலைஞ்ச பிறகு எடுத்த பணத்துல வரி, வட்டி, அபராதம் போக கால்வாசி திரும்பக் கெடைச்சா ஜாஸ்தி. ஆக உங்க நண்பர் எடுத்துக்கிட்டது 25 லட்சம்தான், இல்லயா?”
“அதனால..''
“அதுமட்டுமில்ல, இப்போ உங்களுக்கு டிபார்ட்மெண்ட்ல நல்ல பேரு. அவங்க கையில கருப்புப் பணம் சிக்கியிருந்தா கடைசி வரைக்கும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருப்பாங்க.”
அவர் பேசவில்லை.
“நீங்க அரசாங்கத்த ஏமாத்தினீங்க. உங்க நண்பர் உங்கள ஏமாத்தினாரு. உங்க ரெண்டு பேருக்கும் பெரிசா வித்தியாசம் ஒண்ணும் இல்ல சார்.”
“போனது உங்க பணம் இல்ல... அதான் இப்படிப் பேசறீங்க. நான் வெள்ளிக்கிழமை மடப்புரம் போறேன். காச வெட்டி போடறேன். அவன் ரத்தம் கக்கிச் சாகறான்.”
கோபத்துடன் எழுந்து சென்றார் செல்வந்தர்.
சீருடை ஊழியை கையில் உணவு நிறைந்த தட்டுடன் வந்தாள்.
“இதைச் சாப்பிடு அருமையாகப் பேசி அசத்திவிட்டாயே!”
“அவர் கோபித்துக்கொண்டு போய்விட்டாரே.”
“உன் வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. நாளைக்குள் மனம் மாறிவிடும்”
“மடப்புரம் கோயிலுக்குப் போகமாட்டானா?”
“நிச்சயம் போவான். அவனுடைய வருங்காலத்தைக் காட்டுகிறேன் பார்.”
காட்சி விரிந்தது.
மடப்புரம் காளி கோயில். நாக்கைத் துருத்திக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றாள் பத்ரகாளி. குளித்துவிட்டு ஈரமான ஆடைகளுடன் கோயிலுக்குள் நுழைந்தார் என்னுடன் பேசிய செல்வந்தர்.
ஒரு காசை வைத்து அதன் மீது உளியை வைத்து சுத்தியலால் அடிக்கப்போனார் செல்வந்தர். சட்டென திரும்பி உக்கிரமான காளியைப் பார்த்தார்.
“வேண்டாம்மா! நானும் தானே தப்பு பண்ணியிருக்கேன்? வரியை ஏய்ச்சதுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் தந்ததா நெனச்சிக்கறேன். அவன் குழந்தை குட்டியோட நல்லா இருக்கட்டும் தாயி! உன்மேல சத்தியம் இனிமே அரசாங்கத்த எந்த வகையிலயும் ஏமாத்தமாட்டேன் தாயி. “
அவர் பிரார்த்தனை செய்தது எனக்கு நன்றாகக் கேட்டது.
வெட்ட எடுத்த காசை உண்டியலில் செலுத்தி விட்டு, காளியை விழுந்து வணங்கிவிட்டுக் கிளம்பினார்.
“பதிலுக்கு நான் என்ன செய்வேன் சொல் பார்க்கலாம்?”
“அது தெரியாதாக்கும்? அவருக்கு வேறு ஒரு வகையில் ஐந்து கோடி தருவீர்கள்.”
“உன் கணக்குப்பிள்ளை புத்தி இன்னும் போகவில்லையே! இன்று மடப்புரம் கோயிலில் அவன் பெற்ற நிம்மதி நுாறு கோடிக்குச் சமம். அதனால் பல ஆண்டுகள் வரை நல்ல உடல்நலத்துடன் வாழ்வான். இவன் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சிறப்பாக இருக்கும். அதனால் அவன் தொழிலில் நல்ல பெயர் பெறுவான். நிறையச் சம்பாதிப்பான். நிறைவாக வாழ்வான்.”
“ஏமாற்றியவன் கதி என்ன தாயே? அவன் செய்த துரோகத்திற்கு அவன் ரத்தம் கக்கிச் சாகவேண்டாமா?”
“உன் மனதில் ஏன் இந்தக் கொலைவெறி? மடப்புரத்தில் இருக்கும் என் உருவத்தைப் பார்த்து என்னைக் கொடுமைக்காரி என எண்ணி விட்டாயோ?”
“தாயே!” என்று கதறியபடி காலில் விழுந்தேன்.
“இவனை வஞ்சித்தவன் பாவம் செய்தான்.”
“பாவம் என்றால் என்ன, தாயே?”
“மனதில் அன்பு குறைதல். “
“பாவத்திற்கான தண்டனை?”
“அன்பு மீண்டும் மனதில் ஆவேசத்துடன் புகுதல்.”
“அவ்வளவு தானா? ஒரு கோடி ரூபாயைத் திருடியிருக்கிறான். குறைந்த பட்சம் இரண்டு கோடியாவது இவன் நஷ்டப்பட வேண்டாமா?”
“கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்ற தண்டனை உங்கள் ஆட்சியில்தான். என் ராஜ்ஜியத்தில் கிடையாது.”
“இவனுக்கு என்னதான் தண்டனை தாயே?”
“ஆசையில் அறிவிழந்து விட்டான். ஒரு வருடம் கழித்து அவன் வீட்டில் அதே போல் வருமானவரி ரெய்டு வரும். அவர்கள் அந்த பணத்தை எடுத்துகொண்டு போய்விடுவர். அதற்கு வரி, வட்டி, அபராதம் என்று முக்கால்வாசியை இழந்துவிடுவான். அதனால் நிதி நெருக்கடி ஏற்படும். கவலைகளால் உடல் நலத்தை இழப்பான். வைத்தியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் தவிப்பான். இவனால் வஞ்சிக்கப்பட்டவன் இவனுக்கு உதவி செய்வான். கடைசி காலத்தில் நண்பனின் கையில் முகம் புதைத்து அழுவான். செய்த பாவங்களுக்கு வருந்துவான். இறப்பான். அடுத்த பிறப்பு நல்லதாக இருக்கும்.”
“இதுவரை நான் பெரிதாகப் பாவம் எதுவும் செய்ததில்லை என்றாலும் ஆசைக்கு மயங்கித் தப்பு செய்துவிடுவேனோ என்ற பயம் நிறைய இருக்கிறது, தாயே!”
“உன் மனதில் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்.”
“அது முடியுமா என்று தெரியவில்லை, தாயே! ஆனால் நீங்கள் என் மனதைவிட்டு என்றும் அகலாமல் இருக்கும் வரத்தைக் கொடுங்கள். அது போதும்.”
“போதாது, அப்பனே! மனதில் அன்பு குறைந்தால் பாவம் செய்யத் துணிவாய்.”
“அன்பு என்றால் என்ன, நீங்கள் என்றால் என்ன? நீங்கள் என் மனதைவிட்டு அகலாமல் இருந்தால் என் மனதில் அன்பு குறையவே வாய்ப்பில்லையே!”
அன்னை சிரித்தபடி மறைந்தாள். நான் அங்கேயே உறைந்துபோய் நின்றிருந்தேன்.

இன்னும் வருவாள்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X