புதிய பார்வையில் ராமாயணம் - 51
ஜூலை 31,2020,13:14  IST

கூனி நிமிர்ந்தாள்

அயோத்தியில் கோலாகலம் கொப்புளித்தது. கடலே பொங்கிப் பெருகி வந்ததோ என அஞ்சும் வகையில் மக்களின் சந்தோஷ ஆரவாரம் இருந்தது. குடிமக்களே இப்படி என்றால் அரண்மனையில் கேட்கவா வேண்டும்! மகிழ்ச்சி துள்ளல் ஒவ்வொருவர் இதயத்தின் துடிப்பையும் அதிகரிக்கச் செய்தது.
அண்ணன், அண்ணி அடியொற்றி வந்து கொண்டிருந்த லட்சுமணனின் கண்களில் ஒரு கிழவி பட்டாள். அவள்... அவள்... அதற்கு முன் அரண்மனையில் அவளை பார்த்திருந்தாலும், அவள் முகத்தில் தாண்டவமாடும் வக்கிரத்தை அவன் உணர்ந்தான். ஆனால், எங்கும் பரவிப் பரந்திருந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் பங்கேற்காமல் அவள் ஏன் தனித்து ஒதுங்க வேண்டும்?
சிறிது தொலைவு போனதும் மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தான் லட்சுமணன். அவளைக் காணவில்லை. அதே சமயம் அவர்களைத் தொடர்ந்து மரியாதை நிமித்தம் வந்துகொண்டிருந்த அந்த அரண்மனையின் நெடுநாளைய அரசவை ஊழியர் ஒருவர் லட்சுமணனின் தயக்கம் கண்டு நெருங்கி வந்தார். “யாரைத் தேடுகிறீர்கள்? அந்த கூனியையா..?” என்று கேட்டார்.
லட்சுமணன் “ஆமாம்...கூனிப் பாட்டியா அவள்?”
“ஆமாம். வெறும் கூனிப் பாட்டி இல்லை, கொடுமைக்காரப் பாட்டி” என்றார் அவர்.
“உங்கள் தமையனாரும் நீங்களும் வனவாசம் செல்ல இவள் தானே மூலகாரணம்...”
பளிச்சென்று திரும்பினான் லட்சுமணன். “இந்தப் பாட்டியா? எப்படி?”
“கூனி, உங்களுடைய சிற்றன்னை கைகேயியின் சேடிப் பெண்மணி என்பது நினைவிருக்கிறதா?”
“ஆமாம். கேகைய நாட்டு இளவரசியான என் சிற்றன்னையாருக்கு உதவியாக அங்கிருந்து சீதன வெள்ளாட்டியாக வந்தவள்... ஆமாம், நினைவிருக்கிறது...”
“இந்த கூனியின் பேச்சைக் கேட்டே கைகேயி தசரத மன்னரிடம் ராமர் காட்டுக்குப் போக வேண்டுமென்றும், பரதன் அயோத்தியை ஆளவேண்டும் என்றும் அதிரடி கோரிக்கை விடுத்தார்...”
“அப்படியா?” என்று கேட்ட லட்சுமணனின் முகம் சிவந்தது. “இந்த சேடிப் பெண்ணாலா என் தமையனார் காட்டுக்குப் போக வேண்டி வந்தது?”
“ஆமாம்.”
“என்ன காரணம்?”
“சகோதரர்கள் நீங்கள் நால்வரும் சிறு பிள்ளைகளாக விளையாடிய காலத்தில், ராமன் கவணால் இந்த கூனியின் முதுகில் அடித்தாராம். ஒரு சிறுவனால் அவமானப்பட வேண்டியதாகிவிட்டதே என்ற ஆதங்கமும், தன் உடற்குறை பிறருக்கு விளையாட்டாகி விட்டதே என்ற மன ரணமும் அவளை கைகேயிடம் புறம்பேச வைத்தன...”
“அட! இந்த அற்பக் காரணத்துக்காகவா சிற்றன்னையார் இவ்வளவு பெரிய கொடுமையை ராமனுக்குச் செய்தார்?”
“இது ஒரு ஊக்குவிப்புக் காரணமாக இருக்கலாம். கைகேயியார் அடி மனதில் தன் மகன் பரதன் நாடாள வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கும். ராமனின் தாயார் கோசலை தன்னைப் போல அரச பரம்பரையில் வந்தவள் அல்ல, சிற்றரசனின் மகள் என்பதால், அவளை விட தானே அரசாட்சிக்குத் தகுந்தவள் என்ற அந்தஸ்து மனோநிலை கொண்டிருந்திருப்பாள். அந்த ஜ்வாலை கூனியால் விசிறப்பட்டது. ராமன் என்னை உண்டிவில்லால் அடித்தான், அதனால் அவனைப் பழிவாங்க வேண்டும் என்றா கூனி சொல்லியிருப்பாள்? அரச வம்சத்து சேடியாயிற்றே, ராஜ தந்திரமாக பேசியிருப்பாள். அரசகுலத்தவனான உன் மகன் எல்லா தகுதியோடும் காத்திருக்க, மூத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வது நியாயமா? எனக் கேட்டிருப்பாள்...”
“ஓ!” லட்சுமணனுக்கு உண்மை புரிந்தது.
சிறுவன் ராமன் தாக்கியதற்கு இப்படி குரூரமாகப் பழி வாங்கியிருக்கிறாளே! அவளை சந்தித்து நாலு கேள்வி கேட்க வேண்டும் கேட்கும் கேள்வியில் அவள் நாணிக் குறுக வேண்டும்... என்று லட்சுமணன் பரபரத்தான். பட்டாபிஷேகம் முடிந்து, சற்றே கிடைத்த ஓய்வு நேரத்தில் கூனி தங்கும் இடத்திற்கு ராமனையும், சீதையையும் அழைத்துச் சென்றான். லட்சுமணனின் வற்புறுத்தலைவிட, கூனியிடம் தன்னிலை விளக்கம் ஒன்றை ராமன் தர வேண்டியிருந்தது. அதற்காகவே அவன் லட்சுமணனுடன் சென்றான்.
எடுத்த எடுப்பிலேயே தன் கோபத்தைக் காட்டினான் லட்சுமணன்: “படுபாவி. சாதாரண சேடிப் பெண். அயோத்தியின் அமைதியையே கெடுத்து விட்டாயே! ஏன் இப்படி செய்தாய்?”
கூனி தலை குனிந்தாள். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. செய்தது தவறு என்பதை உணர்ந்து அதற்குரிய தண்டனையை ஏற்க தயாராக இருந்தாள்.
அவளுடைய நிலை கண்டு ஒரு பெண் என்ற முறையில் சீதை வருத்தம் கொண்டாள். தன் கொழுந்தனின் கோபம் அந்தப் பெண்ணை என்ன பாடுபடுத்துமோ என அச்சமும் கொண்டாள். தன் கணவனைப் பார்த்தாள்.
“அம்மா...” பாசம் பொங்க அழைத்தான் ராமன்.
அப்படியே நெக்குருகிக் கண்ணீர் பெருக ராமனை முற்றிலும் நிமிர்ந்து பார்க்க முடியாத உடற்குறையுடன் கை கூப்பினாள் கூனி.
அந்த கைகளை அப்படியே பற்றினான் ராமன். “தாங்கள் என் மீது கோபம் கொண்டது நியாயமே. தங்களது உடற்குறையை நான் கேலி செய்ததாக, எள்ளி நகையாடியதாக தாங்கள் நினைத்ததில் தவறும் இல்லை. தங்கள் நிலையில் யாரும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்...”
''அதோடு அன்னை கைகேயியின் சேடிப் பெண் என்ற கர்வமும் இருந்திருக்கும், என்னையா கேலி செய்தாய் என்ற அகம்பாவமும் சேர்ந்திருக்கும்...” லட்சுமணன் கோபத்துடன் கூனியைப் பார்த்துப் பேசினான்.
அவனை அமைதியாக இருக்கும்படி கையமர்த்தினான் ராமன். சீதை, தன் கணவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆனால், அந்த பால பருவத்தில் நான் அவ்வாறு செய்ததற்குக் காரணமும் இருந்தது...” ராமன் விளக்க முற்பட்டான்.
லட்சுமணன், சீதை மட்டுமல்லாமல் கூனியும் அவனை வியந்து நோக்கினாள்.
“ஆமாம், அம்மா. என் தந்தையார் என்னை பயிற்சி முறையில் அரண்மனையின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். தனக்குப் பிறகு இந்த நாட்டை நான் ஆளப் போகிறேன் என்ற எண்ணத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயிற்சி அளித்தார் அவர். அந்த வகையில் கொல்லன் பட்டறைக்குப் போய், அங்கே போர் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வளைந்து நிற்கும் உலோகக் கம்பிகளையும், தகடுகளையும் நேர் செய்வதற்காக சம்மட்டியால் அடிப்பார்கள். அதைப் பார்த்து வந்த நான், தங்களது வளைந்த முதுகையும் உண்டிவில் கல்லால் அடித்தால் நிமிர்ந்துவிடாதா என்ற ஆதங்கத்தில்தான் அப்படிச் செய்தேன். ஆனால், என் எண்ணமும், அதன் தொடர்பான என் செயலும் பெருந் தவறு என்பதை நான் அப்போது உணரவில்லை...”
“ராமா, என் செல்வமே...” என்று பிளிறல் குரலில் கதறிய கூனி, அப்படியே ராமனை அணைத்துக் கொண்டாள். “உன் உள்ளம் என்றுமே, எப்போதும் மென்மையானது. அதைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே! நான் எவ்வளவு பெரிய அறிவிலி! ராமா, என்னை மன்னித்து விடப்பா... அயோத்தி மன்னனே, உன்னுடைய நல்ல உள்ளம் புரியாமல் உன்னை வனத்திற்கு அனுப்ப வைத்த எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடப்பா...”
“நீங்கள் என்றென்றும் எங்களுடன் இருக்க வேண்டும். தங்களை என் தாய்க்கு சமமாக நான் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும். அதுதான் என்னால் தங்களுக்குத் தர முடிந்த தண்டனை” என்றான் ராமன்.
சீதையும் லட்சுமணனும் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டனர். மனதால் நிமிர்ந்து விட்ட கூனி வெகுநேரம் விசும்பிக் கொண்டிருந்தாள்.

தொடரும்
பிரபு சங்கர்
72999 68695

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X