'சூப்பர் பிரைன்' யோகா
ஜூலை 31,2020,13:15  IST

முதல்கடவுள் விநாயகரின் வழிபாட்டு முறைகளில் முதன்மையானது தோப்புக்கரணம். ஆனால் தற்காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள்... ஏன் பெரியவர்கள் கூட விநாயகருக்கு தோப்புக்கரணமிட வெட்கப்படுகின்றனர். இதன் பெருமை உணர்ந்தால் விருப்பமுடன் ஈடுபடுவோம்.
தேவர்களை அடிமையாக்கிய கஜமுகாசுரன் கொடிய தண்டனை வழங்கினான். வேளைக்கு 1008 வீதம் தினமும் மூன்று வேளையும் 3024 தோப்புக்கரணமிட வேண்டும் எனக் கட்டளையிட்டான். தேவர்களின் துயர் தீர கஜமுகாசுரனை வதம் செய்தார் விநாயகர் அதற்கு நன்றிக்கடனாக 3024 தோப்புக்கரணம் இடப் போவதாக தேவர்கள் தெரிவித்தனர். தினமும் மூன்று முறை தோப்புக்கரணம் இட்டால் போதும் என்றார் விநாயகர்.
அகத்திய முனிவரின் கமண்டலத்திற்குள் அடைபட்ட காவிரி, ஆறாக ஓடினால் உலகம் பயன் பெறும் என்று தேவர்கள் விரும்பினர். விநாயகரே இதை செய்யத் தகுதியானவர் எனக் கருதி வேண்டுகோள் விடுத்தனர். விநாயகர் காகமாக மாறி, அகத்தியரின் கமண்டல நீரைக் கீழே கவிழ்த்தார். வெகுண்டு எழுந்த அகத்தியர் விரட்டிய போது சிறுவனாக மாறி நின்றார் விநாயகர். ''ஏன் இப்படி செய்தாய்?'' என்று சிறுவனின் தலையில் குட்டினார். அதன்பின் தன் நிஜவடிவைக் காட்டினார் விநாயகர். திடுக்கிட்டு, ''சுவாமி... தவறு செய்த என்னை மன்னியுங்கள்'' என தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர். ''அகத்தியரே! காவிரியால் உலகம் பயன் பெற வேண்டும் என்பதற்காக நடத்திய திருவிளையாடல் இது. எங்கும் வளம் பெருகட்டும்'' என வரம் அளித்தார்.
''தலையில் குட்டி தோப்புக்கரணம் இடும் உன் பக்தர்களை தவறுகளில் இருந்து விடுவித்து அருள்புரிய வேண்டும்'' என்று அகத்தியர் வேண்டினார். விநாயகரும் சம்மதிக்கவே,அன்று முதல் குட்டிக் கொண்டு தோப்புக் கரணமிடும் பழக்கம் வந்தது.
அறிவியல் ரீதியாக யோகப் பயிற்சிகளில் தோப்புக்கரணமும் ஒன்று. இரு கைகளால் நெற்றிப்பொட்டில் குட்டும் போது அங்குள்ள நரம்புகள் துாண்டப்பட்டு சுறுசுறுப்பு அடைகின்றன. 'எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பதால் தலையில் ரத்த ஓட்டம், மூளையின் செயல்பாடுகள் சீராக இருந்தால் உடல் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
காது மடல்களை இழுத்தபடி உட்கார்ந்து எழுவதால், மமகாரம் (என்னுடையது) என்ற எண்ணம் மறையும். நான் என்னும் ஆணவம் உண்டாகாது. காது மடல்களை இழுத்தால் சேட்டைகள் குறையும் என்பதால் தான் அக்காலத்தில் ஆசிரியர்கள் காதை திருகி தோப்புக்கரணம் இடச் சொல்லி தண்டிக்கும் வழக்கம் இருந்தது. தண்டனையாக செய்யாமல் பக்தியுடன் தோப்புக்கரணம் இட்டால் நமக்கு நாமே புத்துணர்வு பெற்றவர்களாவோம்.
தினமும் காலையில் 25 முறை தோப்புக்கரணம் இட்டால் ஞாபக சக்தி, சுறுசுறுப்பு, சோர்வற்ற மூளை செயல்பாடு, ஆரோக்கியமான கால்கள், சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். ஆன்மிகம், அறிவியல் பூர்வமான சூப்பர் பிரைன் யோகாவான தோப்புக்கரணத்தை இதனடிப்படையில் தான் வழிபாட்டில் உருவாக்கினர். இதனால் உடல் நலம், விநாயகரின் அருள் பலம் கிடைக்கும்.

தேச.மங்கையர்க்கரசி
Athma Gnana Maiyam

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X