சர்வம் சக்திமயம் - 3
ஆகஸ்ட் 29,2020,10:30  IST

கண்ணில் கண்ட மனிதர்கள்

அந்தச் சமயத்தில் ஊர் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தது குமோனி மொழி. என் மனசுக்குள் ஒலித்தது கண்ணதாசனின் பாடல் மொழி.
''கடவுள் ஒருநாள் உலகைக் காணத்
தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் வாழ்வை கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்''
எப்பொழுதும் இப்படித்தானே இருக்கிறது நம் வாழ்க்கை. ஒருத்தருக்கு நந்தவனம்; இன்னொருவருக்கு நொந்தவனம்; ஒருத்தருக்கு பூமாலை; இன்னொருவருக்கு எரிமலை; ஒருவருக்கு இனிப்புக்கடல்; இன்னொருவருக்கு உப்புக்கடல்; ஒருவருக்கு வானவில்; இன்னொருவருக்கு ஊனவில்; ஒருவருக்குக் கொண்டாட்டம்; இன்னொருவருக்குத் திண்டாட்டம்.
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் பகுதிக்குத்தான் பயணித்துக் கொண்டிருந்தேன். புதுடில்லியிருந்து விமானப் பயணம். மப்பும், மந்தாரமும், மழையும், காற்றுமாக இருந்த வானிலையில் விமானி - விமானத்தை இயக்கும் போதே அதிர்வுகளும், குலுக்கலுமாகப் பயணம் திண்டாட்டமாக இருந்தது. தரை இறங்கப் போகிறோம் என்று அறிவிப்பு செய்து கால்மணி நேரமாகியும் ஊர் மீது விமானம் சுற்றி வந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுகமாகச் சாய்ந்து சாய்ந்து விமானம் பறந்தபோதே - மனசில் கலக்கம். ''தாயே இதென்ன சோதனை? ஏன் இந்தச் சீற்றம்?'' என மனசுக்குள் பிரார்த்தனை எல்லாப் பயணிகளிடமும்.
''காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் தரை இறக்க முடியவில்லை. இறுதி முயற்சியாக மாற்று மார்க்கத்தில் முயற்சி செய்கிறேன். பொதுவாக விமானத்தை முன்பக்கமாக டைவ் செய்து இறக்குவது வழக்கம். இது மாதிரியான இக்கட்டான நேரத்தில் விமானத்தின் பின்பக்கத்தைத் தரையிறக்க முயற்சிப்போம் இல்லாவிட்டால் மீண்டும் புதுடில்லி திரும்ப வேண்டியதுதான்'' இதுவே விமானி செய்த அறிவிப்பு.
பயணிகள் அதுவரைக்கும் இயற்கை வனப்பை ரசித்தது மறந்து போய் - உத்தரகாண்ட் பசுமையை ரசித்தது மறந்துபோய் - கடவுளை வழிபடத் துவங்கினார்கள். எல்லோரின் கண்களிலும் மரணபயம். ''தரை இறங்க முடியாமல் டில்லி திரும்பினாலும் சரிதான். உயிரோடு திரும்பினால் போதும்'' இதுதான் ஒவ்வொருவர் மனசும் வேண்டியது.
''கள்ளம் இல்லாப் பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?''
- மறுபடியும் மனசுக்குள் கேட்டது கண்ணதாசன் பாடல் மொழி.
குமோன் மலைப் பகுதி மேலே சுற்றியடித்த விமானத்தை ஒருவழியாகத் தரை இறக்கினார் விமானி. பயணிகள் எழுந்து நின்று கைதட்டி கடவுளுக்கு நன்றி சொல்லிக் குதுாகலித்தனர். அப்புறம் ஒரே நொடியில் வழக்கம்போல இயல்பு மனிதர்களாகிப் பரபரப்பாகி முண்டியடித்தனர்.
'கடவுளுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை புரியவில்லை...''
- இப்படி நிறைவு செய்யும் கண்ணதாசன் நம்மைப் பற்றித்தான் இப்படியெல்லாம் பாடியிருக்கிறார்.
ஊருக்குள் போனதிலிருந்து மனசில் துடிப்பும் தவிப்பும் ஏற்பட்டது.
''அம்மையைப் பார்க்க வேண்டும்...அவளின் தரிசனத்தில் என்னைக் கரைக்க வேண்டும். அவளின் கரிசனத்தில் என்னை நிறைக்க வேண்டும்'' என நகர்ந்தது பொழுது.
நைனிடால், சாத்தலை, பீம்தால், நுகுசியாதால் ஏரிகள் ஊரைச் சுற்றிப் பாய்ந்து வளப்படுத்தும் செழுமை முழுக்கவே அம்மையின் அருள்தான். ஜீவநதியின் நீரோட்டமான ஏரிகளில் பிரவகிப்பது வெறும் நீர் அல்ல. நைனாதேவி அம்மையின் கருணை நீர்தான் காலம் காலமாக ஏரியாகி நிற்கிறது.
நைனிடால் முழுக்க ஏரிப்பிரதேசம் மட்டுமல்ல. மலைப் பிரதேசமும்கூட. சமவெளி இல்லாத ஊரில் படிப்படியான மலை மடிப்புகளில் உள்ளங்கை அளவில் வீடுகளும் அலுவலகங்களும். இவை தவிர ஊர் முழுக்க இருக்கும் திருத்தலங்களுமே படிப்படியான மலைமடிப்புகளில் தான் கட்டப்பட்டுள்ளன.
நைனாதேவி அம்மன் கோயில் நைனிடால் ஏரி அருகே சமவெளியில் இருப்பது கொஞ்சம் வியப்புத்தான். தன் பீடத்தை அம்மன் தானாகவே தீர்மானித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை.
தாட்சாயிணியின் கண்கள் விழுந்த பீடம் நைனிடால். நைனா என்பது 'நயனம்' என்ற சொல்லின் திரிபு. நைனா தேவியின் கண்களை, நயனங்களைத் தரிசனம் செய்யும் கனவு பலகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஏக்கமும் ஆசையும் பரிதவிப்பும் எப்படி குவிந்திருந்தாலும், அம்மை அழைத்தால் அன்றி தரிசனத்துக்கு நேரம் குறிக்க முடியாதே... அப்படித்தான் அம்மை அழைத்தாள். எப்படி இருப்பாள் என் அம்மை? அவளுக்கென்ன குறைச்சல்? அவள் பேரழகி. சிவன் துணையாயிற்றே... அவளிடம் வீரத்துக்கும் குறைவா என்ன? தந்தையின் யாகத்தில் அவமானப்படுத்தப்பட்டதும் யாகத் தீயிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட மாயத்தீ அவள். அவள் திருத்தேகத்தின் கூறுகள் விழுந்த புனிதத் தலங்கள்தான் 51 சக்தி பீடங்கள்.
கண்கள் விழுந்த பகுதியான நைனிடால் - திரும்பிய இடமெல்லாம் சொர்க்கத்தின் அடையாளமாக இருக்கிறது. எளிய மக்கள். ஏராளமான அன்பு. நைனா தேவியின் குழந்தைகள் வேறெப்படி இருக்க முடியும்?
நைனிடால் நைனா தேவி கோயில் வித்தியாசமான அமைப்பு. பிரகாரம் என்றெல்லாம் இல்லாமல் ஒரே பார்வையில் எல்லா சன்னிதானமும் தரிசித்து விடலாம் என்பதான அமைப்பு. நைனா தேவியை அருகில் சென்று தரிசிக்கலாம். அவ்வளவு நெருக்கத்தில் அவளின் கண்கள் நம்மை துளைத்தும் பார்க்கின்றன. அன்பில் நுழைத்தும் பார்க்கின்றன. கருணையில் இழைத்தும் பார்க்கின்றன. அருளால் கிளைத்தும் பார்க்கின்றன.
முழுக்கவே கன்னங்கருப்பான திருமுகத்தில் ஜொலிக்கும் நயனங்கள் பார்த்தால் - நாம் கரைந்து போகிறோம். வாய் பேச முடியாமல் உறைந்து போகிறோம். குறையொன்றுமில்லை என்று நிறைந்தும் போகிறோம்.
அப்படித்தான் ஆனது.
'பத்திரமாக வந்து விட்டாய் என் தரிசனத்துக்காக...'
'நீ தானே விமானத்தை ஆட்டிப் படைத்தாய்... கொஞ்சம்
விளையாட்டுக்காட்டிய லீலை எனக்குப் புரிந்தது தாயே..''
'என் மகளாயிற்றே... புத்திசாலிதான்...' அம்மையோடு வார்த்தைக்கு வார்த்தை வாயாடவா முடியும்?
'கவலைப்படாதே... உன்னை கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றுவேன்... போய் வா' ஆறுதல்படுத்தினாள் நைனாதேவி.
நிம்மதியுடன் அம்மையிடமிருந்து விடைபெற்றேன்.

தொடரும்
ஆண்டாள் பிரியதர்ஷினி
94440 17044

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X