மீண்டும் பச்சைப்புடவைக்காரி - 47
ஆகஸ்ட் 29,2020,10:32  IST

அறிவு என்னும் வாகனம்

பச்சைப்புடவைக்காரி அடிக்கடி என்னிடம் அன்பாக பேசி அறிவு கொடுக்கிறாள். அந்த அறிவால் ஓரளவு வாழ முடிகிறது. போகும் வழிக்கும் சேர்த்து ஞானத்தை வழங்குகிறாள் அந்த ஞானேஸ்வரி. இந்த அறிவும் ஞானமும் இல்லாதவர்கள் கதிதான் என்ன? பச்சைப்புடவைக்காரிதான் பரம்பொருள் என்ற அடிப்படை தெரியாதவர்கள் இருக்கிறார்களே!
அவர்களுக்காக வேண்டிக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடைப்பயணம் கிளம்பினேன். கல்லுாரி பேராசிரியை போல் தோற்றமளித்த ஒரு பெண் வழிமறித்தாள்.
“இது எந்தக் கடையில் கிடைக்கும்?” என்றபடி ஒரு சீட்டை நீட்டினாள். வாங்கிப் பார்த்து திடுக்கிட்டேன்.
“அறிவு - 1 கிலோ.
ஞானம் ½ கிலோ”
“எவ்வளவு நாளாக இந்த நிலைமை? நல்ல மனநல மருத்துவரை..''
“உன் மனதில் அகந்தை புகுந்துவிட்டது. அதை மனநல மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாது.”
“தாயே! மன்னியுங்கள். இருந்தாலும் அறிவு.. ஞானம் இல்லாமல் தவிப்பவர்களை...''
“அறிவும் ஞானமும் நீ அடைய வேண்டிய இலக்கு இல்லை. அந்த இலக்கிற்கு அழைத்துச் செல்லும் வாகனம் மட்டுமே. அதுவும் பாதிவழியில் மக்கர் செய்து உன்னைக் கவிழ்த்துவிட்டுவிடும். அறிவைவிடச் சிறந்த வாகனம் அன்பு. மனம் நிறைய அன்பு இருந்தால் போதும் அறிவு தேவையில்லை.”
“எனக்குப் புரியவில்லையே!”
“அங்கே நடக்கும் காட்சியைப் பார்.”
அந்தப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் இட்ட உத்தரவு தெளிவாக இருந்தது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நுாறு பேரும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டும். அவரவருடைய வாகனங்களை எடுத்துக் கொண்டு வரவேண்டும். வாகனங்கள் பெரிதாக, வலுவாக, சிறப்பாக இருந்தால் நல்லது.
தலைவர், அதிகாரிகளின் வாகனங்களை நோட்டமிட்ட பின் அங்கிருந்து அனைவரும் அவரவர் வாகனங்களில் கிளம்பி ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு இலக்கை அடைய வேண்டும். அங்கே விருந்து, கேளிக்கை, மகிழ்ச்சி எல்லாம் காத்திருக்கும். எவ்வளவு விரைவாக இலக்கை அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து பதவி உயர்வு, ரொக்கப்பரிசு எல்லாம் கொடுக்கப்படும்.
வாகனங்கள் கிளம்ப வேண்டிய இடத்திற்குத் தலைவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். அதிகாரிகள் தங்கள் சக்திக்கு ஏற்ப வாகனங்களைக் கொண்டு வந்திருந்தனர். பொது மேலாளர் ஒரு பென்ஸ் காரில் வந்திருந்தார். அவர் துறையில் ஊழல் மலிந்திருப்பது குறித்து அனைவரும் பேசினார்கள். தலைவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மக்கள் தொடர்புத் துறையில் அதிகாரியாக இருந்த மணிவண்ணன் மாருதி ஆல்டோவில் வந்தார். பென்ஸ்க்கும், மாருதி ஆல்டோவுக்கும் இடையே உள்ள அத்தனை வகையான வாகனங்களும் அங்கே அணிவகுத்து நின்றன. தலைவர் ஒவ்வொரு வாகனமாகப் பார்த்துப் பின் அந்தந்த அதிகாரியை வாழ்த்தி வழியனுப்பினார்.
சொந்த வாகனம் வைக்க வசதியில்லாத சிலர் இரவல் வாகனத்தில் வந்திருந்தனர். சிலர் வாடகைக்கு எடுத்துக்கொண்டும் வந்தனர்.
தலைவரின் உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது வரதன் என்னும் அதிகாரிதான். அவர் நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரி. கடும் உழைப்பாளி. நேர்மையின் சிகரம். ஆனால் பாவம் அவரிடம் வாகனம் வாங்குவதற்கு வசதியில்லை. ஆஸ்துமா நோயாளியான அவரது தாய்க்கும் இதய நோயாளியான அவரது மனைவிக்கும் சிகிச்சையளிக்கவே வருமானம் போதவில்லை. வழக்கமாக அலுவலகத்திற்கு வரும் டி.வி.எஸ் 50 வாகனத்தில் தான் வந்தார்.
“இது அஞ்சு கிலோமீட்டர் போறதுக்கே ஒரு நாள் ஆகுமேய்யா. இதுல எப்படி ஆயிரம் கிலோமீட்டர் போகப்போகிறீர்? நீர் அங்கே செல்வதற்குள் ரிடையராகிவிடுவீர்.” என்று வசதியாக இருக்கும் கொள்முதல் அதிகாரி வரதனைக் கலாய்த்தார்.
தலைவர் வரதனின் வண்டியைப் பார்த்தார்.
“இதிலா...''
“என்னிடம் இருப்பது இதுதான். நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்.”
“சரி சற்று தள்ளி இருங்கள். எல்லோரையும் அனுப்பிவிட்டு வருகிறேன்.”
காலை பதினொரு மணிக்குள் அந்த இடமே காலியானது. வரதன் மட்டும் தலைவரை எதிர்நோக்கி நின்றிருந்தார்.
“இந்த வண்டியிலேயே ஆயிரம் கிலோமீட்டர் போங்கன்னு உத்தரவு இட்டா என்ன பண்ணுவீங்க?”
“உடனே கிளம்பிருவேன்.”
“வழியில வண்டி மக்கர் செய்தால்?”
“இந்த வண்டியில ஆயிரம் கிலோமீட்டர் போன்னு உத்தரவு போட்ட நீங்க அதுக்கு ஒரு வழி பண்ணாமலா இருப்பீங்க?”
“ஒருவேளை உங்களால ஓட்டமுடியாம மயங்கி விழுந்திட்டீங்கன்னா?”
“அதுக்கும் நீங்க ஏற்பாடு பண்ணியிருப்பீங்க. சார்”
“ஒரு வேளை நான் எந்த ஏற்பாடும் செய்யலேன்னா?”
“விழுந்த இடத்துலயே உயிர் போயிரும். அதனால என்ன, சார்? எனக்கு இவ்வளவு நாள் சோறு போட்டுக் காப்பாத்தினமாதிரி என் குடும்பத்துக்கு வழி செய்ய மாட்டீங்களா என்ன?”
“என்னய்யா சொல்ற?”
“உண்மையத்தான் சொல்றேன் தலைவரே! நான் படிப்புல அப்படி ஒண்ணும் புலி இல்ல. நேர்மை இருக்கற அளவுக்கு அறிவோ, திறமையோ கிடையாது. இருந்தாலும் எனக்கு வேலை கொடுத்தீங்க. என்னையும் அறியாம எவ்வளவோ தப்பு பண்ணியிருக்கேன். இருந்தாலும் வேலையவிட்டுத் துரத்தாம வச்சிருக்கீங்க. உங்க அன்புக்காக உயிரை விடறது பெரிய விஷயமாத் தோணல. எனக்கு வழி தெரியாது. என்கிட்ட சரியான வண்டி இல்ல. எந்த இடத்துக்குப் போகப்போறோம்னும் தெரியாது. ஆனா உங்களைத் தெரியும், தலைவரே. உங்க அன்பத் தெரியும். நீங்க எந்தச் சமயத்துலயும் என்னைக் கைவிடமாட்டீங்கன்னு தெரியும். நீங்க என்னை இந்த இத்துப் போன டி.வி.எஸ் 50ல ஆயிரம் கிலோமீட்டர் போகச் சொன்னீங்கன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னும் எனக்குத் தெரியும். ஒருவேளை நான் வழியில மயங்கி விழுந்து சாகணுங்கறதுதான் உங்க விருப்பம்னா அப்படி சாகறதுதான் எனக்கு சொர்க்கம். எனக்கு நீங்கதான் எல்லாம், தலைவரே.”
தலைவர் வரதனைத் தன் நெஞ்சாரத் தழுவினார்.
“இந்த வண்டி உனக்கு வேண்டாம்யா. நீ என்னோட வா. எனக்குச் சொந்தமான விமானத்துல உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். அவங்கல்லாம் அங்க வர ரெண்டு மூணு நாள் ஆகும். நாம ஒன்றரை மணி நேரத்துல போயிடலாம்.”
வரதன் தலைவரின் காலில் விழப் போனார். ஆனால் தலைவர் தடுத்து மீண்டும் தழுவிக் கொண்டார்.
“அறிவால் பணம் சம்பாதிக்கலாம். புகழ் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். ஆனால் அறிவு, ஞானத்தை வைத்துக்கொண்டு என்னை நெருங்க முடியாது. சிலர் ஆன்மிக இலக்கியத்தைக் கரைத்துக்குடித்துவிட்டு அருள் பெற்றதாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.”
என்னைத்தான் சாடுகிறாள் என்பது புரிந்தது. தலைகுனிந்தேன்.
“அந்தக் கதையின் முடிவு என்னவென்று சொல்லட்டுமா? தங்கள் வாகனங்களில் பயணித்த அதிகாரி யாரும் இலக்கை அடையப் போவதில்லை. வரதன் மட்டுமே இலக்கை அடைவான்.”
“ஞானத்தால் எந்தப் பயனும் இல்லை என்ற பெரிய ஞானோபதேசத்தைச் செய்துவிட்டீர்களே! ஒரே ஒரு வரம் வேண்டும், தாயே.”
“என்ன வரம்?
“நான் இலக்கை அடையாவிட்டால் பரவாயில்லை. பயணத்தையே தொடங்காவிட்டாலும் பாதகமில்லை.
என்னிடம் இருப்பதாக நான் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவையும், ஞானத்தையும் அழித்துவிடுங்கள். கதையில் வரும் வரதன் தன் தலைவரிடம் காட்டும் அன்பையும் விஸ்வாசத்தையும் நான் உங்களிடம் காட்ட அருள் செய்யுங்கள்.”
அன்னை சிரித்தபடி மறைந்தாள்.

இன்னும் வருவாள்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X