வரதா வரம்தா - 55
ஆகஸ்ட் 29,2020,10:32  IST

பூமியின் நீர்ப்பாத்திரம்

அந்த வைதீகரின் பேச்சு வேதாந்த தேசிகனை ஆழ்ந்து யோசிக்கச் செய்தது. ஒரு கிணற்றை உருவாக்குவது என்பது மானுடரின் அறிவும் உழைப்பும் கலந்த செயல். இதற்கும் மந்திர தந்திரத்திற்கும் தொடர்பில்லை. ஆயினும் நீரோட்டம் அறிவது, வெற்றி கருதி செயலை நல்லநேரம் பார்த்து தொடங்குவது என்ற விஷயங்கள் இதோடு தொடர்புடையவை!
நீரோட்டம் அறியவும், நல்லநேரத்தை அறியவும் கல்வி ஞானம் தேவை. கூடுதலாக பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தின் அம்சம் கொண்ட உடல் உடையவருக்கே இச்செயல் எளிதாகும். இவர்களாலேயே நிலத்தின் மீது நின்று அதன் அடியில் ஓடும் நீரோட்டத்தை தன் உடலில் உருவாகும் காந்த அலைகளால் தொடர்பு கொள்ள இயலும். அவ்வாறு உடம்பின் அலைகள் அடியிலுள்ள நீருடன் தொடர்பு கொள்ளும் போது உடலில் இனம் புரியாத உணர்வு உருவாகும்.
எல்லோருக்கும் இது சாத்தியமன்று. மற்றவர்கள் இதனால் தாழ்ந்தவர்கள் என்றோ, குறைவுபட்ட உடல் கொண்டவர்கள் என்றோ பொருளில்லை. ஒரு மனிதனின் உடல் பஞ்சபூத அம்சமாகும். இந்த பஞ்சபூத அம்சம் சிலருக்கு நிலக்கூறுடன் இருக்கும். சிலருக்கு நீர்க்கூறு... இன்னும் சிலருக்கு அக்னி, வாயு, ஆகாயம் என பூதசக்தி கூடுதலாக இருக்கும்.
இது இயற்கையான அமைப்பு. நிலக்கூறு பூதபலத்தை அதிகம் உடைய ஒருவரால் மட்டுமே நீரோட்டம் காண இயலும்.
அப்படி நீரோட்டம் உள்ள இடத்தை தோண்டினாலே நீர் அகப்படும். இல்லாவிட்டால் தோண்டிய குழி ஒரு இருள் பள்ளம் என்றாகி அங்கே துர்ஆத்மாக்கள் சென்று அடையும் நிலை தோன்றி விடும்.
இப்படி கிணறு தோண்டுவதன் பின்னே அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டிய விஷயங்களே உள்ளன. அடுத்து நல்ல நேரத்தில் அக்காரியத்தை தொடங்குவது என்பதும் பிரதானம். இங்கே நேரத்தில் நல்லநேரம், கெட்ட நேரம் என்று உள்ளதா என்ற கேள்வி எழும்.
உண்மையில் நல்ல நேரம் என்று இல்லை. நல்லதை மட்டுமே எண்ணி, நல்லதையே செய்து வருவோருக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே! ஆயினும் நல்லதை மட்டுமே செய்து இந்த மண்ணில் வாழ்வது அசாத்தியமான செயல். ஒரு நல்லதை உணர ஒரு கெட்டதும், ஒரு கெட்டதை உணர ஒரு நல்லதும் என்று ஒரு கலவையாக இருப்பதே இந்த உலகமாகும். அதனால் தான் பூமியே கூட இரவு, பகல் என்ற இரண்டு தன்மை கொண்டதாக உள்ளது. அதிலும் கூட விடியற்காலை, உச்சிவேளை, மதியம், மாலை என்னும் கால அடையாளங்கள் தோன்றி நாமும் அதற்கேற்ப செயல்படுகிறோம்.
இந்த வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. எனவே தான் காலை நேரத்தில் செயல்பட உகந்த கிரகசாரம் மிகுந்த நேரத்தை ஒரு நல்ல நேரமாக கருதி அவ்வேளை செயலை தொடங்குகிறோம். இது ஒருவகை அறிவியலே.
மொத்தத்தில் கிணறு வெட்ட பவுதீகம், அறிவியல் ஞானம் இருந்தால் போதுமானது. அப்படியிருக்க எதை வைத்து, 'உம் தேசிகரின் மந்திரத்தாலும் ஆகாது' என்று மந்திரத்தை குறிப்பிட்டு பேசினர் என்ற கேள்வி தேசிகரின் மனதிலும் தோன்றியது. அதுவே அவரை சிந்திக்கவும் வைத்தது. அதைக் கண்ட ஒருவர் தேசிகரிடம் வினவத் தொடங்கினார்.
''சுவாமி... தாங்கள் எது குறித்து சிந்திக்கிறீர்கள் என நாங்கள் அறியலாமா?''
''மந்திரத்தாலும் ஆகாது என்று சொன்னார்கள் அல்லவா அது குறித்து...''
''அப்படியானால் ஆகும் என்கிறீர்களா?''
''மனதை தரப்படுத்துவதும், திறப்படுத்துவதும் தானே மந்திரம். அவ்வாறு ஒரு மந்திரம் ஒருவர் மனதை தரமும், திறமும் உடையதாக ஆக்கி விட்டால் அதன்பின் அவரால் ஆகாததும் உண்டா என்ன?''
''என்றால் உம் மந்திர சக்தியால் இங்கே கிணறு தோண்டி அதை பயன்படுத்த முடியும் என்கிறீர்களா?''
''இங்கு மட்டுமல்ல...எங்கும் அதை செய்ய இயலும். என்னால் மட்டுமல்ல... இப்படி கேட்டவர்களாலும் செய்ய இயலும்''
''அது எப்படி?''
''மந்திரம் என்பதே மனதோடு தொடர்புடையது தானே? அதாவது ஒரு சக்தி மிகுந்த ஒலிக்கற்றை. மந்திரம் ஒருவரின் மனதை ஒரு புள்ளியில் குவியச் செய்து அதீத சக்தியைத் தருகிறது. அந்த சக்தி அறிவை செயல்படுத்தி நல்ல நேரத்தையும், செய்ய வேண்டிய செயலுக்கான சக்தியையும் அளிக்கிறது. இவ்வளவே இதன் பின்புலம்!
இதில் மாயத்திற்கும், தந்திரங்களுக்கும் இடமே இல்லை''
''இப்படி தாங்கள் விளக்கமாய் கூறும் போது புரிகிறது. அப்படியானால் இங்கே கிணறு சாத்தியம் என்கிறீர்களா?''
''அந்த தேவநாதன் நம்முள் புகுந்து விட்டால் எல்லாமே சாத்தியம் தான்''
''சுவாமி.. அவன் நம்முள் புக நாம் தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?''
''நம்பிக்கையும், பக்தியும் இருந்தால் அந்த தகுதி தானாக வந்திடுமே?''
வேதாந்த தேசிகனின் பதில் எல்லோரையும் மவுனமாக சிந்திக்க மட்டுமே வைத்தது. ஆனால் தேசிகன் சிந்தித்தபடி இராமல் செயலிலும் இறங்கினார்.
வான் பார்த்து கைகூப்பி, மனதில் வரதனை, அரங்கனான தேவநாதனை என்ற அவன் வண்ணங்களை நிரப்பி, பக்தியுடன் தியானித்தவர் மாளிகைப்புறத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தின் மீது நின்று நீரோட்டம் உணர்ந்து பின் அங்கே அவர்கள் அனைவரும் பார்த்திட மண்வெட்டி கொண்டு வட்டமாய் குழி தோண்டலானார். அதைக் கண்ட அவரின் சீடர்கள் அவருக்கு ஒத்தாசையாக தாங்களும் இறங்கினர்.
''தற்செயலாக செயலாற்றுவதற்கு உகந்த நேரமாக இந்த நேரம் அமைந்து விட்டது. இதன் முடிவு நிச்சயம் நல்லவிதமாக இருக்கும்'' என்று அப்போது அனைவரிடமும் குறிப்பிட்ட தேசிகன் தொடர்ந்து உழைத்திட, அதைக் கண்டு அனைவரும் பாடுபட கிணறும் உருவாகியது. நீரும் பீறிட்டு வந்தது! இனி எக்காலத்திலும் இது வற்றாது. அதன் ஒரு பாகம் கருடநதியின் மிசையும், மறுபாகம் கடல்புரத்தின் மிசையும் இருந்திட நீருக்கு உத்தரவாதம் என்ற நிலை உருவானது. இதன்பின் தேசிகனை மறுத்து பேசியவர்கள் சொன்ன கோணல் கற்களைக் கொண்டே பக்கவாட்டு சுவரையும் தேசிகன் எழுப்பலானார். இந்த வேளை தன் கணித அறிவைப் பயன்படுத்தினார். அந்த கணித அறிவு ஒளிர்ந்திட பிரார்த்தனை புரிந்தார். பிரார்த்தனைக்கான பயனை வேதாந்த பெருமானும், மலை மீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானின் அம்சமான ஹயக்ரீவனும் வழங்கிட, ''இயலாது, நடவாது, முடியாது'' என்று சவால் விட்டவர்கள் நாணித் தலைகுனியும் வண்ணம் அக்கிணறும் உள்ளது. இன்றும் தேசிகரின் திருமாளிகையில் இக்கிணறு ஒரு சாட்சி போல் உள்ளது.
இந்த வேளையில் கிணறு குறித்த அரிய செய்திகளையும் தேசிகன் கூறலானார்.
''ஒரு கிணறு என்பது பூமியின் ஒரு நீர்ப்பாத்திரம் போன்றது. அசுத்தம் அணுக இயலாதபடி ஆழத்தில் இது இருப்பது இதன் சிறப்பு. எவரும் இதை நேராக தீண்ட முடியாது. ஒரு கயிறு, ஒரு கருவி, ஒரு பாத்திரம் மூலமே நீரை நாம் பெற்று பயனடைகிறோம். இதனால் மாசுபடாத பவித்ர நீரை உடையதாக கிணறு திகழ்கிறது. கூடுதலாக 'அறிவு, முயற்சி, உழைப்பு' உடையோருக்கே எதுவும் அகப்படும் என்ற கருத்தை மறைமுகமாக கூறுவதாகவும் கிணறு திகழ்கிறது. ஆற்று நீரிலும், குளத்து நீரிலும் கூட இது சாத்தியமில்லை. எளிதில் அது மாசடைய வாய்ப்புண்டு. கிணற்றை ஒருவர் அத்தனை சுலபத்தில் மாசாக்கிட முடியாது. இதன் நீர் மட்டும் உயர்ந்தும், தாழ்ந்தும் காலகதியையும் எடுத்துரைக்கும். அம்மட்டில் இது ஒரு காலக்கருவியும் கூட. இதுவே ஞானியருக்கு கண்ணாடியும் கூட!
ஒரு ஞானி தன்னைக் காண இது புறத்திலும் உதவுகிறது, அகத்திலும் உதவுகிறது. எனவே ஞானியர், ஆச்சார்ய புருஷர்களுக்கு ஒரு கிணறே முதல் தேவை... ஆறும் குளங்களும் பிறகே...'' என்று கிணற்றின் நுட்பமான சங்கதிகளையும் தேசிகன் எடுத்துரைத்தார்.
சுருங்கச் சொல்வதானால் எதிர்ப்புகளும், எதிர்கேள்விகளும் வேதாந்த தேசிகனை புடமிட்ட பொன் போல ஜொலிக்கச் செய்தன. திருவஹீந்திர புரத்தில் இச்சாதனையை நிகழ்த்தியவர் தன் வாழ்நாளில் இது போல எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தினார். ஸ்ரீவைஷ்ணவம் பொலிந்து விளங்க ஏராளமான நுால்களை இயற்றினார். இவற்றில் பாதுகா சஹஸ்ரமும், அத்திகிரி மகாத்மியமும் தனிப்பெரும் சிறப்புடையவையாகும்.
தன் மனையாளான திருமங்கையிடம் வேதாந்த தேசிகன் உரைத்தாற் போல அந்த அத்திகிரி வரதனும், உலகில் உள்ளோர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செயலுக்கு ஆவன செய்தான். அது?
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X