மீண்டும் பச்சைப்புடவைக்காரி - 48
செப்டம்பர் 04,2020,17:30  IST

நடிகைக்குக் கிடைத்த பிடிமானம்

“நீங்க எனக்காக வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இப்போதான் ஷூட்டிங் முடிச்சிட்டு வரேன். எனக்காக இருபது நிமிஷம் காத்துக்கிட்டிருக்க முடியுமா? ப்ளீஸ்.. “
சொன்னவள் திரையுலகின் முன்னணி நடிகை. நான் இருந்தது அவளது வீட்டின் வரவேற்பறையில்.
திரைப்படங்களில் பார்த்தைவிட இன்னும் அழகாக இருந்தாள். ஆறடி உயரம். நீளமான முகம். அழகிய கண்கள். கவர்ச்சியான உடை. முழு ஒப்பனையில் இருந்தாள்.
இவ்வளவு அழகான நடிகையுடன் அறையில் தனியாக இருப்பது..எனக்கு பயமாக இருந்தது.
“நீ அத்துமீறி விடுவாய் என பயப்படுகிறாயோ?”
குரல் கேட்டு திடுக்கிட்டேன். குளிர்பானம் கொண்டு வந்த நடிகையின் ஊழியை வடிவில் பச்சைப்புடவைக்காரி ஜொலித்தாள். விழுந்து வணங்கினேன்.
“அஞ்சாதே! அவள் திரும்பி வரும்போது உன் மனதில் இருக்கும் பயம் போய்விடும்.”
“என்னை இங்கே ஏன் வர வைத்தீர்கள்?”
“உன் மூலம் இவளது மனதில் இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு சொல்லமுடியுமா என பார்க்கிறேன். இயல்பாக இரு.”
திரும்பி வந்த நடிகையைப் பார்த்து திடுக்கிட்டேன். ஒப்பனை இல்லாமல் வயதானவளாக, வியாதி வந்தவளாக தோன்றினாள். கருப்பை ஒட்டிய மாநிறம். முகத்தில் லேசாகச் சுருக்கங்கள் தெரிந்தன. சாதாரண நுால் புடவை அணிந்திருந்தாள்.
“இதுதான் உண்மையான நான். உங்ககிட்ட ஒரு அபலைப் பொண்ணாக பேசப் போறேன். ஒரு பிரபலமான நடிகையா இல்ல.”
நான் விழித்தேன்.
“ஒரு பாவப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கேன் சார். என் மார்க்கெட் இனிமே ரொம்ப நாள் நிலைக்காது. கோடிக்கோடியா பணம் இருக்கு.”
“உங்க குடும்பம்.. “
“பெத்த அம்மாவே என்னை ஏமாத்திட்டா. பணத்த எடுத்துக்கிட்டு ஓடிட்டா. அப்பா முகத்தப் பாத்ததேயில்ல.”
“கணவர், திருமணம்..''
“முயற்சி செஞ்சி பாத்துட்டேன் சார். மூணு கல்யாணம் எதுவும் ஒத்துவரல. எல்லாரும் என் உடம்பு மேலயும் என் பணத்துமேலயும்தான் குறியா இருக்காங்க. டைவர்ஸ் பண்ணிட்டேன். நல்ல வேளை குழந்தை பெத்துக்கல..”
“நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?”
“நீங்க பச்சைப்புடவைக்காரி மீது எழுதின புஸ்தகங்களை வாசிச்சேன். மனசுல இனம்புரியாத நிம்மதி. அந்த நிம்மதி தொடர்ந்து கெடைச்சாப் போதும் சார். அப்படியே வாழ்க்கைய முடிச்சிருவேன்.”
ஏன் இப்படி விரக்தியாகப் பேசுகிறாள்?
“கர்ப்பப்பையில கேன்சர். ஆரம்ப கட்டம்தான். அடுத்த மாசம் ஆப்ரேஷன். அதுக்கப்பறம் கெமோ, ரேடியேஷன், முடி கொட்டறது, வலி, தனிமை கொடுமை..”
கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினாள்.
“இந்த நிலையில வாழ்க்கையில ஒரு பிடிமானம் வேணும் சார். பச்சைப்புடவைக்காரிக்கு எப்படி பூஜை பண்றது அவள எப்படி தியானம் பண்றதுன்னு நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும். நீங்க என்ன கேட்டாலும் தரேன் சார்”
என்னவென்று சொல்வது? எப்போதாவது கோயிலுக்குப் போவது, எப்போதும் அவள் அன்பை நினைத்தபடி உள்ளூர அழுதுகொண்டேயிருப்பது இவைதானே எனக்குத் தெரிந்த பூஜையும் தியானமும். இதுவரை முறையாக மலர் துாவி பூஜை செய்ததில்லையே! அவளை மனதில் நிறுத்தியபடி தியானம் செய்ததில்லையே! திடீரென குருடனை ராஜபார்வை பார்க்கச் சொன்னால்…
நடிகையின் ஊழியை உள்ளே வந்தாள். அவள் என்னருகே வந்து குளிர்பானக் கோப்பையை எடுத்த போது பேனாவைக் கீழே போட்டுவிட்டு அதை எடுப்பதுப் போல் அவளது பாதம் தொட்டேன். பச்சைப்புடவைக்காரி லேசாகச் சிரித்தாள். அவள் உத்தரவு கொடுத்துவிட்டாள்.
“நீங்க தப்பான ஆளக் கூப்பிட்டிருக்கீங்க. எனக்கு பூஜை, தியானம், ஸ்லோகம் இதெல்லாம் தெரியாது. எனக்கு தெரிஞ்சி ஒரு நாள்கூட பூஜை செஞ்சதில்ல. தியானம்ணு உக்காந்தா மனசு கண்டபடி அலைபாயும்”
நடிகை அதிர்ந்து போயிருந்தாள்.
“ஆனா நீங்க கேட்ட பிடிமானத்த என்னால தரமுடியும்.”
“என்ன சொல்றீங்க? ஒண்ணுமே புரியலயே.”
“இப்போ உங்க வாழ்க்கைக்கு இருக்கற ஒரே பிடிமானம் அந்தப் பச்சைப்புடவைக்காரிதான். அவள இறுக்கமாப் பிடிச்சிக்கங்க. அவ உங்களோட இருந்தா நீங்க உங்க கேன்சர அப்படியே ஊதித் தள்ளிடலாம். அதுக்கு நான் கேரண்டி.”
நடிகை திருதிருவென்று விழித்தாள்.
“மேடம் நீங்க பூஜை, தியானம் செய்ய வேண்டாம். அவளைக் காதலிங்க போதும்.”
“அதுதான் எப்படின்னு சொல்லுங்க?”
“இந்த வயசுல உங்களுக்குக் காதலிக்கத் தெரியாதுன்னு மட்டும் சொல்லிராதீங்க. உங்க வாழ்க்கையில யாரையாவது உண்மையாக் காதலிச்சிருக்கீங்களா?”
“காதலிச்சிருக்கேன். ஆனா எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க.”
“அவங்க காதல் உண்மையாங்கறது கேள்வியில்ல. நீங்க அவங்க மேல வச்ச காதல் உண்மையானதுதானா?”
“ஆமா.”
“காதல் வயப்பட்ட சமயத்துல எப்படி உருகியிருப்பீங்க? விஷயமே இல்லாம நாள் முழுவதும் பேசிக்கிட்டேயிருப்பீங்க. துாரத்துல உங்க காதலனைப் பாத்தவுடன் நெஞ்சு படபடக்கும். காதலன் சின்னப் பரிசு கொடுத்தாக்கூட நீங்க வானத்துல பறப்பீங்க. அவனது விரல் லேசாப் படும் போதே உங்க நெஞ்சு அப்படியே உருகும் இல்லையா? காதலனுடைய சந்தோஷத்துக்காக உயிரையே கொடுக்கலாம்னு தோணும் இல்லையா?”
கண்ணீர் மலகத் தலையாட்டினாள்.
“சினிமாவுல காதல் காட்சில டைரக்டர் சொன்னபடி நடிக்கணும். ஆனா நிஜ வாழ்க்கையில யாருமே எப்படிக் காதலிக்கணும்னு உங்களுக்குச் சொல்ல தேவையில்ல, இல்லையா?”
“ம்ஹும்.”
“மனுஷங்களக் காதலிச்சி ஏமாந்தது போதும்மா. அந்த மஹேஸ்வரிய, அந்த மாயக்காரியக் காதலியுங்க. நீங்க அவள நோக்கி ரெண்டு எட்டு எடுத்து வச்சா அவ உங்கள நோக்கி ரெண்டு லட்சம் மைல் ஓடி வருவா. இது சத்தியம்.
“நீங்க காதலிக்கும் போது காதலன் எனக்கு அதக் கொடுக்கலையே, இதக் கொடுக்கலையேன்னு கவலைப்பட மாட்டீங்க. அவனுக்கு நான் இன்னும் அதிகமாக் கொடுக்கணும்னு துடிச்சிக்கிட்டு இருந்திருப்பீங்க இல்லையா? அதே மன நிலையோட பச்சைப்புடவைக்காரியக் காதலிங்க.
“கேன்சரால நீங்க படற வலி, கெமோ தெரப்பி ரேடியேஷனால அனுபவிக்கும் வேதனை எல்லாம் காதல்லபட்ட காயமா நெனச்சிக்கங்க. அந்தச் சிகிச்சையால உங்க தலை முடி கொட்டும் உங்க சருமத்துல தடிப்புக்கள் வரலாம். அதெல்லாம் அந்தக் காதலி உங்களுக்குச் செய்யற அலங்காரமா நெனச்சிக்கங்க. உங்க காதலியான பச்சைப்புடவைக்காரி சில நேரத்துல உங்களோட முரட்டுத்தனமா விளையாடுவா. பிறாண்டுவா. வலி, வேதனையக் கொடுப்பா. ஆனா எந்தச் சமயத்துலயும் உங்களக் கைவிடமாட்டா. யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டா.
“உங்ககிட்ட இருக்கற பணம், உங்க மார்க்கெட், உலகமே கொண்டாடும் உங்க அழகு - பச்சைப்புடவைக்காரியோட காதலுக்கு முன்னால இதெல்லாம் வெறும் துாசிம்மா.
'அம்மா உன் காதலுக்காக இன்னும் நுாறு பிறவி எடுத்து இதே மாதிரி வேதனைப்படவும் தயாரா இருக்கேன்'ன்னு அவ கால்ல விழுந்து கதறுவீங்க. அவ உங்களத் துாக்கி நிறுத்தித் தன்னோட அணைச்சிப்பா. அப்போ உங்களுக்கு அழக்கூடத் தெம்பு இருக்காது''
அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. அதன்பின் அங்கே அதிக நேரம் இருக்கவில்லை.
வெளியே வரும்போது ஊழியை வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி எதிரில் வந்தாள். காலில் விழுந்தேன்.
“தாயே பிடிமானம் அவளுக்கு இல்லை. எனக்கு. அது நீங்கள் மட்டும்தான். இந்தக் கொத்தடிமை என்றும் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடக்க அருள் செய்யுங்கள்.”
“என்ன சார்... படிக்கட்டு தடுக்கிக் கீழ விழுந்ததுக்கா இப்படி அழுதுக்கிட்டு இருக்கீங்க?”
என்னைத் துாக்கிவிட்ட டிரைவர் கரிசனத்துடன் கேட்டார். என்ன பதில் சொல்வதென எனக்குத் தெரியவில்லை.

இன்னும் வருவாள்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X