வரதா வரம்தா - 56
செப்டம்பர் 04,2020,17:31  IST

அத்தி மரத்தின் சிறப்பு

திருவஹீந்திரபுரத்தில் இருந்தும் வேதாந்த தேசிகர் திருவரங்கத்திற்கு திரும்பவும் சென்றது என்பது திருவரங்கத்தை விட்டு பிள்ளை லோகாச்சார்யரால் மதுரை கொடிக்குளம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட திருவரங்கத்து அழகிய மணவாளன் திரும்ப வந்து சேர்ந்த தருணத்தில் தான்...
பிள்ளைலோகாச்சார்யாரால் கொண்டு செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாள் பாரத தேசத்தின் தென்பகுதியே ஒரு சுற்று சுற்றியவராக கேரளா சென்று பின் திருமலை சென்று அதன்பின் திருவரங்கம் அடைய 60 ஆண்டுகள் ஆயிற்று.
இந்த 60 ஆண்டுகளில் வேதாந்த தேசிகனும் முதிர்வும், பிரகாசமும் கொண்டிருந்தார். இவருக்கு குமார வரதாச்சார்யார் என்ற மகன் பிறந்து அவரும் தந்தைக்கேற்ற தனயனாக விளங்கினார்.
இவரே தன் தந்தைக்கான தனியனையும் அதாவது கட்டியம் கூறும் பாடலை எழுதியவர்.
தந்தையும், தனயனும் ஒன்றாக திருவரங்கம் வந்து அழகிய மணவாளன் திரும்ப கோயில் கொண்டபோது அதைகண்டு மகிழ்ந்தவர்களும் கூட....!
மிலேச்சர்களின் ஆதிக்கம் கூடுவதும், பின் குறைவதுமாக இருந்த காலகட்டம் அது! கலிமாயை பல காட்சிகளை அன்றாடம் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு விளையாட்டில் அதில் விளையாடுபவர் வெற்றிக்காக முனையும் போது எதிரியாக விளையாடுபவர் நம் வெற்றியை தட்டிப் பறிக்க முயல்வார். நாம் போராடித்தான் வெல்ல வேண்டியிருக்கும். அந்த போராட்டத்தை நாம் குறை கூறுவதில்லை. அப்போது கடவுளிடம் கூட என் வெற்றிக்கு துணை நில் என்றுதான் வேண்டுவோம். கடவுளே இது என்ன சோதனை என புலம்ப மாட்டோம். ஒருவேளை தோற்றாலும் அடுத்து வெற்றி பெறுவோம் என நம்புவோம்.
கிட்டதட்ட வாழ்வும் விளையாட்டு போலத்தான். கடவுள் இதில் நடுவரைப் போன்றவர். நடுவர் இருதரப்புக்கும் பொதுவாக செயல்படுவதைப் போல்தான் கடவுளும் வாழ்வில் நல்லவர் கெட்டவர் என்னும் இரு சாரருக்கும் எல்லா வாய்ப்பையும் அளித்து செயல்படுகிறார். இறுதியில் நல்லவனே வெல்வான் என்பதே நிதர்சனமாகும். ஆனால் அந்த இறுதி எது என்பதில் குழப்பம் ஏற்பட்டு, தாமாக ஒரு இறுதியை கற்பனை செய்தபடி கடவுள் கைவிட்டு விட்டார், அவர் இல்லவே இல்லை என்றெல்லாம் புலம்பித் திரிவதும் உண்டு.
ஸ்ரீவேதாந்த தேசிகன் காலத்தில் இப்படி புலம்ப பல வாய்ப்புகள் இருந்தன. மிலேச்சர் படையெடுப்பும், தங்கள் கொள்கை என்று சிலை வழிபாட்டுக்கு எதிராக அவர்கள் செயல்பட்ட போதெல்லாம், அதை சகித்தும் எதிர்த்தும், கல்லிலும் முள்ளிலும் கூட கடவுள் இருக்கிறான் என்னும் கருத்தோடு அதை ஸ்தாபிப்பவராக தேசிகன் திகழ்ந்தார்.
குறிப்பாக காஞ்சியிலும் மிலேச்சர் தொல்லை இருந்தது. ஆயினும் திருவரங்கம் போல் ஆலயத்தினுள் புகுந்து அடாத செயல்புரிவது என்பது பெரிதாக நடக்கவில்லை.
குறிப்பாக அத்திவரதனை இச்சமயத்தில் மிலேச்சர்கள் மட்டுமல்ல, ஆலயத்தில் இருப்போர் கூட பெரிதாக அறிந்திருக்கவில்லை... அவர்கள் அறிந்திராதபடி அனந்தசரஸ் என்னும் குளத்திற்குள் அவன் வாசம் செய்து கொண்டிருந்தான்!
அது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் கலியுகம் கடந்து முந்திய யுகங்களுக்கு அதாவது ஹஸ்திகிரி தோன்றிய அந்த காலப் புள்ளிக்கே சென்றாக வேண்டும்.
''மும்மூர்த்திகளில் தானே முதலானவன் தானே சிருஷ்டி கர்தா... தன்னாலேயே எல்லாம் இயங்குகிறது. தான் இல்லாது போகும் போது எல்லாமே இல்லாது போய்விடும். சப்தலோகங்கள், சூரிய சந்திரர் நட்சத்திரங்கள், உப கிரகங்கள், மாந்தர், தேவர் மிருகம், பறவை என எதுவுமே இருக்காது. எல்லாமே தன்னால்தான்...!'' என்று பிரம்மா அகந்தை வயப்பட்ட இடத்தில் தான் அத்திவரதன் உருக் கொள்கிறான்.
அகந்தையை மஹாவிஷ்ணு அழித்து சர்வமும் நானே... ஆனால் உன்னைப் போல அதை அகந்தையோடு கூறிட மாட்டேன் என்று உணர்த்தவும் பிரம்மாவும் தவறை உணர்ந்து திருந்துகிறார்.
திருந்தினால் போதாது. அகந்தையால் நேர்ந்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்யவும் எண்ணுகிறார். அப்படிச் செய்தால் தான் அது நல்ல முன்னுதாரணமாக ஆவதோடு, காலத்திற்கும் அழியாத ஒரு செய்தியாகவும் இருக்கும்.
இன்னமும் சற்று அழுத்தமாக கூற வேண்டும் என்றால் இது ஒருவகை தேவ நாடகம்! தேவ நாடகங்களையே திருவிளையாடல் என்கிறோம். திருவிளையாடல்களின் வெற்றிக்கான பரிசு என்பது காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாகிவிடும்.
பிரம்மன் அகந்தை வயப்பட்டது கூட திருவிளையாடலே! பரிகாரமும் அதன் தொடர்ச்சியே... பரிகாரம் என்ன தெரியுமா? பூஉலகில் காஞ்சி நகரின் மிசை ஒரு வேள்வி புரிந்தது தான்! வேள்வியின் பயனாக வேள்வித்தீயில் இருந்தே எம்பெருமானும் பேரருளானாக .உற்சவமூர்த்தியாக தோன்றினான். அந்த மூர்த்தியை ஹஸ்தம் என்கிற யானை முதுகில் ஏற்றி வலம் வரச் செய்தான் பிரம்மன்.
பின் ஹஸ்தமே குன்றாகிட, அதன் மேல் அப்படியே பேரருளாளனும் கோவில் கொண்டிட பிரம்மா உள்ளிட்ட சகலரும் மகிழ்ந்தனர். இவ்வேளை சிலர் ரூபமாக மட்டுமின்றி, தன் தேஜோ மயரூபத்தோடும் அனைவருக்கும் காட்சியளித்தான் எம்பெருமான்! அப்படி காட்சியளித்த தருணத்தில் தேவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்கியதால் வரதராஜன் என்றும் ஆனான்!
இக்காட்சி பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட சகலர் மனதிலும் நிரம்பி வழியலாயிற்று. அதி அற்புதக்காட்சி! சங்கு சக்கரதாரியாக கதாயுதமுடன் முகத்தில் புன்னகை ததும்பிட எம்பெருமான் அளித்த காட்சியை கொண்டு ஒரு சிலை செய்து அதை ஆலயத்தின் பிரதான மூர்த்தமாக்கிட விருப்பம் கொண்டார் பிரம்மா. இந்திரனும் அதற்கிணங்கி விஸ்வகர்மா, மயனை அழைத்து சிலை செய்யப் பணித்தான். சிலைகளை கல், உலோகம், சுதை எனப்படும் மண்குழம்பால் வடிப்பதுதான் வழக்கம்.
எம்பெருமானின் அபூர்வக்காட்சி இதுபோல் வழக்கமான ஒன்றுக்குள் அடங்கிடாமல் அதற்குரிய மூலமும் அபூர்வமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய போது தாரு எனப்படும் விருட்ச வகையில் அதாவது மரம் கொண்டு செய்தால் என்ன என்று தோன்றிற்று.
மரச்சிற்பம் என்னும் போது அதை பேணும் முறைகளும் மாறிடும். புதிய அணுகுமுறை தோன்றிடும். அபிேஷக ஆராதனை மரச்சிற்பங்களுக்கு செய்ய முடியாது. பூச்சிகளால் அரிக்கப்படாத படியும் அதை பாதுகாக்க வேண்டும்.
சுருக்கமாய் கூறுவதானால் புதிய நடைமுறையை உருவாக்கினால் அன்றி தாருவகையை உருவாக்க முடியாது.
இதனால் குழப்பம் ஏற்பட்ட போது எம்பெருமானே, 'அத்தி மரங்களிலும் நான் இருப்பதை உலகுக்கு பாடமாக்க விரும்புகிறேன்' என்று கூறவும் அத்திமரத்தால் மயனும், விஸ்வகர்மாவும் சிலை செய்ய முனைந்தனர்! இதனால் அத்தியின் அம்சமான சுக்ரனும் மிக மகிழ்ந்தான்.
அத்தி பூத்ததே தெரியாமல் காய்க்கும் தன்மை கொண்ட தாவரம். அதாவது பலனை வேகமாய் அளிக்கக் கூடியது. அதனால் சுக்ரன் நீச்சமானவர்கள் இந்த மரத்தை நட்டு வளர்த்து அதன் பயனை நீச்சத்துக்கு இணையாக பெற்று சிறப்புறுவர்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்ரனின் இருப்பை வைத்தே இகபர சுகமும், தாம்பத்யமும், வம்ச விருத்தியும் ஏற்படுகிறது. செல்வம் இருந்தும் அதை அனுபவிக்கும் விதியமைப்பை சுக்ரனே அளிக்க வேண்டும். அதனாலேயே எம்பெருமானும் சுக்ர அம்சத்தில் அத்திகிரி அருளாளன் என்றானான். இந்த அருளாளனை வணங்கினாலும் இகபரசுகம் கிட்டும். மகிழ்வான வாழ்வு அமையும். அடுத்து அத்தி மரத்தண்டுக்கு மந்திர சப்தத்தை கருங்கல் போல் ஆகர்ஷிக்கும் சக்தி மிகுதி. அத்தி மரத்தடியில் தவம்புரிந்தால் மனவடக்கம் எளிதில் சித்திக்கும். புவி ஈர்ப்பு விசையையே தன் வயப்படுத்திடும் ஆற்றல் இதன் அணுக் கூறுகளுக்கு உண்டு. பூச்சிகளாலும் எளிதில் அரிக்கப்படாது. புதைந்தால் எளிதில் கரியாகி வைரமாகும். நீரில் கிடந்தாலும் துளியும் தன்னிலை மாறாது அப்படியே உயிர்ப்போடு இருப்பதோடு தண்ணீரில் வினைபுரிந்து அந்த தண்ணீரையும் மந்திர நீராக மாற்றிவிடும்.
மேலினும் மேலான ஒரு விஷயம் - ஒரு அத்தி உள்ள இடத்தில் வற்றாத நீரோட்டம் இருக்கும். இப்படி அத்தி சிறப்புக்குரிய விருட்சமாக திகழ்ந்ததன் பொருட்டே இதனில் எம்பெருமானும் சிலையானான்!
அப்படிச் சிலையானவன் திருக்குளத்தினுள் தன்னை இருத்திக் கொண்ட பின்புலம் சுவையானது மட்டுமல்ல... மிகப் பொருளுடையதும் கூட... அது?

தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X