பணக்காரர் ஒருவரை சந்தித்து, '' எனக்கு தெரிந்த ஒருவரின் கஷ்டத்தை போக்க உங்களை நாடி வந்தேன்'' என்றார் முல்லா.
'' என்ன பிரச்னை'' எனக் கேட்டார் பணக்காரர்.
'' எனக்கு தெரிந்த அந்த மனிதர் கடன் வாங்கியதில் வட்டி ஏறி விட்டது. கொடுக்க முடியாததால் தற்கொலை செய்வாரோ என தோன்றுகிறது. ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து உதவுங்கள். உங்களுக்கு நான் பொறுப்பு'' என்றார் முல்லா.
இரக்கப்பட்ட பணக்காரர், ''கடன்பட்ட அந்த மனிதர் யார்?'' எனக் கேட்டார்.
'' வேறு யாருமில்லை நான்தான்'' என முல்லா சிரித்தார். இரண்டு மாதம் கழிந்தது. வாக்களித்தபடியே பணத்தை கொடுத்தார் முல்லா.
ஆறு மாதம் சென்ற பிறகு முல்லா மீண்டும் வந்தார். ஏதோ திட்டத்துடன் முல்லா வந்துள்ளதை அறிந்த பணக்காரர், ''என்ன...மறுபடியும் ஒருவருடைய கஷ்டம் தீர்க்க கடன் கேட்டு வந்திருக்கிறீரா'' எனக் கேட்டார்.
தலையாட்டினார் முல்லா.
''கஷ்டப்படும் அந்த மனிதர் நீர்தானே'' எனக் கேட்க, ''இல்லை... உண்மையாகவே ஏழை ஒருவர் கடனால் கஷ்டப்படுகிறார்'' என்றார்.
''உங்களை எப்படி நம்புவது? கடைசியில் அந்த ஏழை நான் தான் என்று சொல்ல மாட்டீர் என்பது என்ன நிச்சயம்?'' எனக் கேட்டார் பணக்காரர்.
''நீங்கள் சந்தேகப்படுவீர்கள் என்றே கடன்பட்டவரையும் அழைத்து வந்தேன்'' என கைகாட்டினார்.
''கடனால் கஷ்டப்படுபவர் நீர்தானா?'' எனக் கேட்க ஏழையும் ஆமாம் என தலையசைத்தார்.
பணக்காரர் பணம் தர சம்மதிக்கவே கைநீட்டினார் முல்லா.
''ஏன் கைநீட்டுகிறீர்கள்? மறுபடியும் என்னை ஏமாற்றுகிறீரா...'' என கோபத்துடன் கேட்டார் பணக்காரர்.
''நான் பொய் சொல்லவில்லை. கடன் வாங்கியவர் இவர் தான். ஆனால் கடன் கொடுத்தவனும் நானே!. அதை பெறுபவனும் நானே'' என்றார் முல்லா. பணக்காரரும் வாக்களித்தபடி பணம் கொடுத்தார்.