பத்ரகிரியாரின் ஞானப்புலம்பல்...
அக்டோபர் 29,2020,15:09  IST

'''ஆமை வருமார் கண்டு அடைந்து'
அடக்கம் செய்தால் போல்
ஊமை உருக்கொண்டு
ஒடுங்குவது எக்காலம்?''

ஆமை உன்னைப் பார்த்தால் ஓடி விடும்; அதைப் போல ஆசை அடக்கினால் உயர்வாய்!

'''துாண்டு விளக்கு அணைய
தொடர்ந்து இருள்முன் சூழ்ந்தாற்போல'
மாண்டு பிழைத்து வந்த
வகை தெரிவது எக்காலம்?''

விளக்கைத் துாண்டுமுன் இருள் இருக்கும். உள்ளத்தை துாண்டினால் மன இருள் மறையும்.

'''துரியினில் மீன்போல்' சுழன்று
மனம் வாடாமல்
ஆரியனத் தேடி
அடிபணிவது எக்காலம்?''

வலையில் விழுந்த மீன் துடிக்கும். அதுபோல் ஆகாது வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்காதே.

'''காண்டத்தை வாங்கி
கருமேகம் மீண்டது போல்'
பாண்டத்தை நீக்கி
பரம் அடைவது எக்காலம்''

கடல்நீரை (காண்டம்) சூரியன் வாங்கி மழைநீர் படைக்கின்றான். அதுபோல் வாழ்ந்து காட்டு.

''வம்படிக்கும் மாதருடன்
வாழ்ந்தாலும் 'மன்னுபுளியம்
பழமும் ஓடும் போல்'
ஆவது இனி எக்காலம்?''

பழுத்த புளி ஓட்டில் ஒட்டாது. அதுபோல வம்பு செய்பவருடன் ஒட்ட வேண்டாம்.

''பற்றற்று 'நீரில்
படர்தாமரை இலைபோல்'
சுற்றத்தை நீக்கி மனம்
துார நிற்பது எக்காலம்?''

நீர் உயரும் போது தாமரை உயர்வதுபோல் பணம் வரும் போது சுற்றம் உறவாடும்.

'''நீரில் குமிழி போல்' நிலையற்ற
வாழ்வை விட்டு உன்
பேரில் கருணை வெள்ளம்
பெருக்கு எடுப்பது எக்காலம்?''

நீர்க்குமிழி மாதிரிதான் வாழ்க்கை. அதற்குள் அடுத்தவர்க்குக் கருணை காட்டு.

''எண்ணாத துாரம் எல்லாம்
எண்ணி எண்ணிப் பாராமல்
'கண்ணாடிக்குள் ஒளிபோல்'
கண்டு அறிவது எக்காலம்?''

கண்ணாடியில் பட்ட ஒளி பளிச்சிடுவதுபோல நல்ல எண்ணங்களைப் 'பளிச்' சிடச் செய்க.

'''காந்தம் வலித்து இரும்பைக்
கவர்ந்து இழுத்துக் கொண்டது போல்'
பாய்ந்து பிடித்து இழுத்து
உன்பதத்தில் வைப்பது எக்காலம்?''

காந்தமும், இரும்புமாக கலந்திட வேண்டும். நான் இரும்பு; கடவுளே காந்தம்.

''சூதும் களவும் தொடர் வினையும்
கட்டிடக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு
உனை அடைவது எக்காலம்?''

துருத்தியில் ஊதினால் தீ பிடிக்கும்; அப்படித்தான் சூதும் களவும் தீமை செய்யும்.

''பட்டமற்றுக் காற்றினில்
பறந்தாடும் சூத்திரம்போல்
விட்டு வெளியாக
விசுவாசித்தல் எக்காலம்?''

காற்றில் பட்டம் பறக்கும். அதைப்போல சுவாசம் தந்தவனை நேசிப்போம்.

''இயங்கும் சராசரத்தில்
'எள்ளும் எண்ணெயும்' போல்
முயங்கும் அந்த வேதமுடிவு
அறிவது எக்காலம்?''

எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது போல படைத்தவனே என்னை ஆள்வதும் உண்மை.

''மனதை ஒரு வில்லாக்கி
வான் பொறியை நாணாக்கி
எனது அறிவை அம்பாக்கி
எய்வது இனி எக்காலம்?''

வில் - நாண் - அம்பு இது வேட்டைக்கு உதவும். மனம் - அறிவு வாழ்க்கைக்கு உதவும்.

'''கடத்துகின்ற தோணிதனைக்
கழைகள் குத்தி விட்டாற்போல்'
நடத்துகின்ற சித்திரத்தை
நான் அறிவது எக்காலம்''

தோணியில் உள்ள மூங்கில் குத்தினால் அது ஓட்டை ஆவது போல, மனதை கெட்ட எண்ணங்களால் ஓட்டை ஆக்காதே!

கூட்டில் அடைபட்ட புழு
குளவி உருக் கொண்டது போல்
வீட்டில் அடைபட்டு
அருளை வேண்டுவது எக்காலம்?

கொட்டக் கொட்ட புழு குளவி ஆகும். நல்லதை நினைக்க நினைக்க நல்லதே நடக்கும்.

கடலில் ஒளிந்து இருந்து
கனல் எடுத்து வந்ததுபோல்
உடலில் ஒளித்த சிவம்
ஒளி செய்வது எக்காலம்?

கடலில் இருந்து எழுந்து ஒளி தரும் நிலவு போல, மனதுக்குள் இருந்து கடவுள் ஒளி தருகிறார்.

கடைந்த வெண்ணெய்
மோரில் கலவாது - அது போல்
உடைந்த தமியேன்
உனைக் காண்பது எக்காலம்?

எடுத்த வெண்ணெய் மீண்டும் மோர் ஆகாது. அதுபோல பிறந்த நான் இனி எப்படி கடவுளை சேர்வேன்.

அறிவை அறிவால் அறிந்தே
அறியும் அறிவுதனில்
பிரிவுபட நில்லாமல்
பிடிப்பது இனி எக்காலம்

அறிவை அறிவால் அறிவது போல, பிரிவுபட அறியாமல் ஒன்று சேர்த்துவிடு.

மீனை மிக உண்டு நக்கி
விக்கி நின்ற கொக்குபோல்
தேனை மிக உண்டு
தெவிட்டி நிற்பது எக்காலம்?

மீன் கிடைக்க கொக்கு மயங்கும். கடவுள் என்ற தேன் கிடைத்தால் மயக்கம் வரும்.

எள்ளும் கரும்பும் எழுமலரும்
காயமும் போல,
உள்ளும் புறம் நின்று அது
உற்று அறிவது எக்காலம்?

எள்ளுக்குள் எண்ணெய், கரும்புக்குள் சர்க்கரை! மலருக்குள் வாசம். உடம்புக்குள் கடவுள்!

அன்னம் புனலை விடுத்து
அமிர்தத்தை உண்பது போல்
என்னை விடுத்து உன்னை
இனிக் காண்பது எக்காலம்?

பாலைப்பருகி, அதிலுள்ள நீரை ஒதுக்குவது அன்னத்தின் செயல். அதுபோல நல்ல எண்ணத்தை மட்டும் ஏற்க அருள்வாய்.

அந்தரத்தில் பூத்து அலர்ந்து
எழுந்த தாமரை போல்
சிந்தை வைத்துக் கொண்டு
தெரிசிப்பது எக்காலம்?

நீர் எந்தளவு உயர்ந்தாலும், அந்தளவு உயர்ந்து தாமரை மலரும். எந்த இடத்தில் இருந்தாலும் கடவுள் சிந்தனை உன்னை உயர்த்தும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X