தேடி வந்த பரிசு
அக்டோபர் 29,2020,15:10  IST

ஒருமுறை தேவர்களும், முனிவர்களும் கூடி, கல்வியில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து 'வித்வ தாம்பூலம்' என்னும் பொன்முடிப்பை பரிசளிக்க விரும்பினர். 'உலகிலேயே சிறந்த கல்விமான் அவ்வையார்' என்ற முடிவு செய்து தாம்பூலத்துடன் அவ்வையாரை சந்தித்தனர்.
''சாதாரண பாட்டு எழுதும் எனக்கு எதற்கு பரிசு? தேவர்களின் தலைவர் இந்திரன் 'ஐந்திரம்' என்னும் இலக்கண நுாலை எழுதியிருக்கிறார். இலக்கண வித்தகரான அவரே பொருத்தமானவர்'' என்றார்.
குழுவினர் இந்திரனைக் காணச் சென்றனர்.
''யார் சொன்னது இலக்கண வித்தகர் நான் என்று! என் மீதுள்ள மதிப்பால் பாட்டி சிபாரிசு செய்தாலும் எனக்கு அந்த தகுதி இல்லை. 'அகத்தியம்' என்னும் இலக்கணம் எழுதிய அகத்திய முனிவருக்கு கொடுங்கள்'' என்றார்.
குழுவினர் அகத்தியரிடம் ஓடினர்.
கலகலவெனச் சிரித்த அகத்தியர், ''இதை பெறும் தகுதி எனக்கில்லை. ஆதிபராசக்தியிடம் செல்லுங்கள். ஏட்டுக் கல்வியை விட ஞானமே உலகில் சிறந்தது. அதை வழங்கும் அம்பிகையே பொருத்தமானவள்'' என்றார்.
அம்பிகையிடம் சென்று, ''அம்மா! ஞானத்தை அருள்பவளே! தங்களுக்கு பரிசளிக்க வந்துள்ளோம்'' என்றனர்.
''குழந்தைகளே! உங்கள் அன்புக்கு நன்றி. என் நாயகரான சிவனுக்கே குருவாக வந்து உபதேசித்தவன் முருகப்பெருமான்! ஞானப்பண்டிதன் என போற்றப்படும் அவனே பொருத்தமானவன். கந்தலோகம் சென்று பரிசை ஒப்படையுங்கள்'' என்றதும் அங்கு புறப்பட்டனர். முருகனும் ஏற்பதாக இல்லை.
''தேவர்களே! முனிவர்களே! படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் செல்லுங்கள் நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்தவர் அவரே'' என்றார். குழுவினரும் பிரம்ம லோகம் சென்று, ''பிரம்மதேவா! வேத நாயகா! உம்மையே சிறந்த கல்விமானாக தேர்வு செய்துள்ளோம். பரிசை ஏற்க வேண்டும்'' என்றனர்.
அருகில் இருந்த சரஸ்வதியைப் பார்த்த அவர், '' சகலகலாவல்லி என போற்றப்படுபவள் இவள் தானே! இவளது வீணை இசைக்கு வேறெந்த இசையும் ஈடாகுமா! அனைத்து கலைக்கும் அதிபதியல்லவா அவள்! கலைகளின் அதிபதியான இவளிடம் பரிசை கொடுங்கள்'' என்றார்.
தேடி வந்த தாம்பூல பரிசை ஏற்று மகிழ்ந்தாள் சரஸ்வதி.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X