இருந்தால் வேங்கடம்! இறந்தால் வைகுண்டம்!!
அக்டோபர் 29,2020,15:11  IST

திருப்பதி மலையில் நந்தவனம் அமைத்து ஏழுமலையானுக்கு தொண்டு செய்தவர் அனந்தாழ்வான். ஒருநாள் அவர் மண் தோண்டும் போது அவரது கர்ப்பிணி மனைவி மண் சுமக்க வந்தாள். அவள் சிரமத்துடன் நடப்பதைக் கண்ட சிறுவன் ஒருவன் உதவ முன் வந்தான். அதைக் கண்டு, ''நானும், என் மனைவியும் செய்யும் தொண்டில் மற்றவருக்கு இடமில்லை'' என்று விரட்டினார். போவது போல போக்கு காட்டிய அவன், கர்ப்பணி மீதுள்ள பரிவால் மீண்டும் வந்தான். கோபம் கொண்டு, கையில் இருந்த கடப்பாரையை சிறுவன் மீது வீச, அவனது முகத்தில் ரத்தம் வந்தது.
மறுநாள் கோயிலுக்குச் சென்ற அனந்தாழ்வான் சுவாமியின் முகத்தில் ரத்தம் வழிவதைக் கண்டார். சிறுவனாக வந்தது ஏழுமலையான் என்பதை அறிந்து கண்ணீர் சிந்தினார். காயத்திற்கு மருந்தாக பச்சைக் கற்பூரத்தை அப்பினார். இதனடிப்படையில் இன்றும் பச்சைக் கற்பூரம் சாத்துகின்றனர். அனந்தாழ்வான் வீசிய கடப்பாரை கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை இவரது குருநாதரான ராமானுஜர் திருப்பதி மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்தார். அவருக்குப் பணிவிடை செய்ய அனந்தாழ்வான் மலையை விட்டு இறங்கி வந்தார். சீடரைக் கண்டு, '' யாராவது சிறுவர்களை உதவிக்கு அனுப்பியிருக்க கூடாதா?'' என ராமானுஜர் கேட்டார். ''என்னைவிட சிறியவர் யாரும் தென்படவில்லை'' என்றார். அனந்தாழ்வானின் அடக்கத்தைக் கண்ட ராமானுஜர் நெகிழ்ந்தார்.
இதேபோன்று துணிச்சலை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று இவர் வாழ்வில் நடந்தது.
ஒருநாள் அதிகாலையில் நந்தவனத்தில் பூப்பறித்தார் அனந்தாழ்வார். அப்போது கருநாகம் ஒன்று காலில் தீண்டியும் அவர் பொருட்படுத்தவில்லை. வைத்தியரிடம் போகலாம் என அங்கிருந்தவர்கள் கூப்பிட்டும் மறுத்தார்.
''விஷம் என் உயிரைக் குடிக்காவிட்டால் இங்குள்ள ஏழுமலையானை தரிசிப்பேன். இல்லாவிட்டால் வைகுண்டம் சென்று அங்குள்ள பெருமாளை தரிசிப்பேன்'' என்று கோயிலுக்கு நடந்தார்.
இவரைப் போற்றும் விதத்தில் ஏழுமலையானுக்கு சாத்திய மாலையை நந்தவனத்திலுள்ள மரம் ஒன்றிற்கு சாத்தி அதனை அனந்தாழ்வானாக கருதி பூஜிக்கின்றனர்.'

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X