* முளைப்பாரி எடுப்பதன் நோக்கம் என்ன?
எம்.கனுஷாஸ்ரீ, சென்னை
பயிர்களை விளைவிக்கும் பூமாதேவி, பயிர்களுக்கு அதிபதியான சந்திர பகவானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுக்கின்றனர். இதனால் மழை வளம் பெருகி நாடு செழிக்கும்.
செய்வினை, ஏவலில் இருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா?
கே.அபிகாஷினி, மதுரை
செய்வினை, ஏவலில் ஈடுபடுவது மகாபாவம். ஒரு கட்டத்தில் செய்பவர்களை அது திரும்ப தாக்க ஆரம்பிக்கும். மற்றவர்கள் யாராவது உங்களுக்கு செய்திருப்பதாக தெரிந்தால் தெய்வத்தை சரணடைவதே வழி. ராகு காலத்தில் துர்கை அல்லது சரபேஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுங்கள்.
* தீய சொற்களை சொல்லக் கூடாது ஏன்?
எஸ்.வத்ஸன், திருப்பூர்
நம்மைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் இந்திரன் உள்ளிட்ட எட்டு தேவர்கள் காவல் புரிகின்றனர். இவர்களை அஷ்டதிக்கு பாலர்கள் என்பர். இவர்கள் 'ததாஸ்து' என்று அடிக்கடி கூறுவர். 'அப்படியே ஆகட்டும்' என்பது இதன் பொருள். கோபத்தில் தீய சொற்களை சொல்லும் போது, அத்துடன் 'ததாஸ்து' என்ற சொல்லும் இணைய தீங்கு உண்டாகும். எனவே நல்ல சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்.
அரபு நாட்டில் உள்ள எனக்கு வீட்டில் வழிபட மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்
எல்.கவின், திருவள்ளூர்
அன்றாட வழிபாட்டுக்கான மந்திரம், ஸ்லோகம், பாடல் குறித்த புத்தகங்கள் உள்ளன. அதில் இருந்து இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லி நீங்கள் வழிபடலாம். அரபு நாடுகளில் வாரம் ஒருமுறை கூட்டுவழிபாடு நடத்துவதற்கு அரசு அனுமதி அளிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாம்.
* காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றக் கூடாதாமே...
ஜே.சபரீஷ், தேனி
தாராளமாக விளக்கு ஏற்றலாம். அம்பிகையின் அருளால் குடும்பம் நலமாக இருக்கும்.
நடராஜர், கிருஷ்ணர் படம் இருந்தால் வீடு ஆடிப் போகும் என்கிறார்களே...
எல்.கேஷிகா, ஊட்டி
புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் நடராஜர் நடனத்தை தரிசித்ததால் பிறவிப்பயனை அடைந்தனர். புல்லாங்குழல் இசைத்தபடி கிருஷ்ணர் பசுக்களை மேய்த்ததால் அவை பாலை வாரி வழங்கின. இதனால் நடராஜர், கிருஷ்ணர் இருக்குமிடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
எம்.கண்ணன், புதுச்சேரி.
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி. பதிவிரதையான இவர் வான மண்டலத்தில் நட்சத்திரமாக திகழ்கிறார். திருமண தம்பதியர் இவரை தரிசித்தால் குடும்ப வாழ்க்கை சிறக்கும்.