சிறுமியாக வந்த பாலாம்பிகை
நவம்பர் 09,2020,09:25  IST

காஞ்சி மகாசுவாமிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதயாத்திரையாக வந்திருந்தார். பரங்கிமலை நந்தீஸ்வரர், திரிசூலம் திரிசூலநாதரை தரிசித்து முடித்து, வழியில் இருந்த அத்திமர நிழலில் உட்கார்ந்தார். சீடர்களும் ஆங்காங்கே மரநிழலில் ஓய்வெடுத்தனர்.
மகாசுவாமிகளுக்கு தாகமாக இருந்ததால் சீடர்களை கைதட்டி அழைத்தார். சப்தம் கேட்காததால் யாரும் கவனிக்கவில்லை. அப்போது சிறுமி ஒருத்தி தண்ணீர் செம்புடன் சுவாமிகளின் முன் வந்தாள். அருள் பொங்கச் சிரித்தபடி, 'என்ன தாகமாக இருக்கிறதா' எனக் கேட்டபடி தண்ணீர் கொடுத்தாள். மகிழ்ச்சியுடன் குடித்த மகாசுவாமிகள் உதவி செய்த சிறுமிக்கு நன்றி சொல்ல நிமிர்ந்தார்.
என்ன ஆச்சரியம்! சிறுமியைக் காணவில்லை. அதற்குள் போக வாய்ப்பில்லையே என சுற்றுமுற்றும் பார்த்தார்.
சீடர்களிடம் தேடச் சொல்லியும் அவள் அகப்படவில்லை.
உடனே தியானத்தில் ஆழ்ந்தார் மகாபெரியவர். 'சிறுமியாக வந்தவள் அம்பிகையே' என அவரது உள்மனம் உணர்த்தியது. உடனே அந்தக் கிராமத்தின் தலைவர், அப்பகுதி மக்களையும் அழைத்து வர சீடர்களை அனுப்பினார். தான் உட்கார்ந்திருந்த அத்திமரத்தை சுற்றி தோண்டிப் பார்க்கும்படியும், தெய்வ சான்னித்தியம் அங்கு இருப்பதால் சுவாமி சிலைகள் மண்ணில் புதைந்து இருக்க வாய்ப்புண்டு என்றும் அறிவுறுத்தினார். அதன்பின் சுவாமிகளின் நடைபயணம் தொடர்ந்தது.
மக்கள் தோண்டிய போது சற்று ஆழத்தில் பாலாம்பிகை, சண்டிகேஸ்வரி சிலைகள் அகப்பட்டன.
மகாசுவாமிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திலேயே கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி உருவானது தான் சென்னை நங்கநல்லுார் அருகிலுள்ள பழவந்தாங்கல் நேருநகர் ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி கோயில். மகாசுவாமிகள் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்.

உடல்நலம் பெற...
காஞ்சி மகாசுவாமிகள் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

திருப்பூர் கிருஷ்ணன்
thiruppurkrishnan@hotmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X