''அரசு தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்ற என்னை ஊரே பாராட்டியது. பரிசுகள் குவிந்தன. மேலும் படித்து இன்ஜினியர் ஆனேன், தொழிற்சாலை துவங்கினேன்.
அமோக லாபம் கிடைத்தது. கோடீஸ்வரன் ஆனேன். பெற்றோர் மகிழ்ந்தனர்.
பல நாடுகள் என் சாதனையைப் பாராட்டி விருதுகள் அளித்தன. இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குகிறேன். எப்போதும் விமானத்தில் பறக்கிறேன். என் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது'' இப்படி ஒருவர் பெருமைப்படுகிறாரா?
நிச்சயமாக அவர் சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை. அவரது பணத்தால் சமுதாயத்திற்கு பலன் கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால் இதற்கு மாறாக வாழ்ந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோனாஸ்சால்க். புளு காய்ச்சல் பரவிய காலத்தில் மருந்து கண்டுபிடிக்கும் பணியை இவரிடம் அரசு ஒப்படைக்க, வெற்றிகரமாக முடித்து பரிசு பெற்றார். ஆனால் பணம் கிடைத்தும் ஜோனாசின் மனதில் வெறுமை நிலவியது. உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் போலியோவால் நடக்க முடியாமல், கை, கால்களை அசைக்க முடியாமல் வாழ்கிறார்களே என வருந்தினார். குழந்தைப் பருவத்திலேயே போலியோ வராமல் தடுக்க ஆலோசித்தார்.
நீண்டநாள் உழைப்பின் பயனாக மருந்து கண்டுபிடித்ததும். மனநிறைவு பெற்றார். இன்று உலகமே அவரது சாதனையை வாழ்த்துகிறது.
தனிப்பட்ட சாதனைக்காக விருது பெறுவதை விட, பிறருக்கு உதவிட கல்வியும், அறிவும் பயன்பட வேண்டும். இதுவே உண்மையான வெற்றி. விஞ்ஞானியின் உழைப்பால் உலகெங்கும் உள்ள குழந்தைகள் போலியோ தடுப்பு மருந்தால், இன்று நிமிர்ந்து நடக்கிறார்கள்.
இந்த உலகம் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும்.