* அழகும் அறிவும் உள்ள குழந்தைக்கு...
டி.பிருந்தா, விழுப்புரம்
சஷ்டி திதியன்று விரதமிருந்து, மாலையில் முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசத்தை காலை, மாலையில் படியுங்கள்.
தெய்வ சங்கல்பம் என்றால் என்ன?
எஸ்.யோகேஷ், மதுரை
நினைப்பதை எல்லாம் நம்மால் சாதிக்க முடியாது. எது நல்லதோ அல்லது சரியானதோ அதை நமக்காக கடவுள் செய்வார். இதையே தெய்வ சங்கல்பம் என்பர்.
ஜாதகம், கைரேகை, நாடி ஜோதிடம் எது சிறந்தது?
எம்.வினிதா,கோவை
சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதி என மருத்துவ முறைகள் பல இருக்கின்றன. ஏதாவது ஒன்றை பின்பற்றினால் தானே நோய் தீரும். அதுபோல எதிர்காலத்தை அறியும் வழிமுறைகள் எல்லாம் சிறப்பானதே. நம்பிக்கையுடன் பின்பற்றினால் பலன் நிச்சயம்.
மணி ஒலிக்காமல் பூஜை செய்யலாமா?
கே.நிதிஷ், புதுச்சேரி
மணியோசையுடன் ஆரத்தி காட்டுவது அவசியம். தெய்வீகமான மணி ஒலிக்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது.
இழந்த பதவியை பெற...
கி.துர்கா, ஊட்டி
பட்டாபிஷேக ராமரை வழிபடுங்கள்.
* துரோகிகளிடம் இருந்து தப்பிக்க...
சி.ஷிவானி, காஞ்சிபுரம்
குலதெய்வம், இஷ்ட தெய்வத்திடம் முறையிடுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நன்மை நடக்கும்.
* வேண்டுதல் நிறைவேறாவிட்டால் காணிக்கையை என்ன செய்யலாம்?
பி.சந்தோஷ், திருப்பூர்
வேண்டுதல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் காணிக்கை செலுத்துவது அவசியம். நம்பிக்கையுடன் இருங்கள். கடவுள் கைவிட மாட்டார்.
* தர்ப்பண நாளில் நம் வீட்டில் உறவினர்கள் சாப்பிடலாமா?
எம்.நிவாஸ், சிவகங்கை
சாப்பிடலாம். உணவளிப்பதால் உங்களுக்கும், உண்பதால் உறவினருக்கும் புண்ணியம் சேரும். முன்னோர்களின் ஆசியால் குடும்பம் தழைத்தோங்கும்.
பெற்றோரை வணங்கினால் கோயிலுக்குச் செல்ல வேண்டாமா?
தி.நிலாணி, கடலுார்
பெற்றோரே கண்கண்ட தெய்வங்கள். அவர்களின் சொல்லுக்கு மதிப்பளிப்பது குழந்தைகளின் கடமை. அவர்கள் காட்டிய வழியில் கோயில் வழிபாடு செய்வது அவசியம். ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் தாய், தந்தையாக விளங்கும் கடவுள் குடியிருக்கும் இடம் கோயில் என்பதை உணருங்கள்.