வந்தாள் மகாலட்சுமியே...
மார்ச் 27,2021,16:28  IST

மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் மகாலட்சுமியுடன் சம்பந்தப்பட்ட பெயர்கள் பல உண்டு. அதில் ஸ்ரீநிவாசன், பூகர்ப்பன், மாதவன் குறித்த வரலாறு இடம் பெற்றுள்ளது.

ஸ்ரீனிவாசாய நமஹ
அமிர்தம் பெறுவதற்காக தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மகாலட்சுமி பங்குனி உத்திரத்தன்று அவதரித்தாள். செந்தாமரையில் வீற்றிருந்த அவளை முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் வணங்கினர். பொன் ஆடை, ஆபரணங்களை அணிவித்து கொண்டாடினர். அவள் தனக்குரிய மணாளரை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நடத்த முடிவெடுத்தாள். தேவர்களும் முனிவர்களும் அதில் பங்கேற்க காத்திருந்தனர். ஆனால் அவள் யாரையும் ஏற்கவில்லை. இறுதியாக மகாவிஷ்ணு அவளைக் கண்டு, ''திருமகளே வருக! நின் வரவு நல்வரவாக வேண்டும்' என வரவேற்றார். அதைக் கேட்டதும் 'இவரே என் மணாளர்' என அவரது இதய தாமரையில் இடம் பிடித்தாள். 'ஸ்ரீ' என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளைத் தன் மார்பில் வைத்திருப்பதால் 'ஸ்ரீனிவாசன்' எனப் பெயர் பெற்றார் மகாவிஷ்ணு. 'ஸ்ரீனிவாசாய நமஹ' எனச் சொல்பவர்களுக்கு செல்வம் பெருகும்.

பூகர்ப்பாய நமஹ
மகாபலிபுரத்திற்கு அருகிலுள்ள திவ்யதேசம் திருவிடந்தை. இங்கு அகிலவல்லித் தாயாரை இடது தோளில் தாங்கிய படி வராகப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். மகாபலிபுரத்தை ஆட்சி செய்த மன்னர் வராகப்பெருமாள் மீது பக்தி கொண்டிருந்தார். இவர் கோயிலுக்கு வரும் போது ஒரு குதிரையிலும், தரிசனம் செய்து விட்டு செல்லும் போது மற்றொரு குதிரையிலும் செல்வார். ஏனெனில் ஒரே குதிரையால் நீண்ட துாரம் அவரை சுமந்து செல்ல முடியாது என்பதால் இப்படி செய்தார்.
ஒருமுறை மன்னர், ''வராகப் பெருமாளே... எப்போதும் தாயாரை இடதுகையால் தாங்கி நிற்கிறீரே! உமது கை வலிக்கவில்லையா?'' என வருந்தினார். தனக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு கருவுற்ற தாய் எப்படி குழந்தையை சுமக்கிறாளோ அதுபோல தாயாரும் பூமியில் வாழும் உயிர்களைத் தாங்குகிறாள். அவளின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே நானும் தாயாரைச் சுமந்தபடி இருக்கிறேன்'' என்றார். இவரது திருநாமமான 'பூகர்ப்பாய நமஹ' என்று சொல்லி வழிபட்டால் மனபாரம் தீரும்.

மாதவாய நமஹ
விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மணி. மகாலட்சுமியின் அம்சமான இவள் கிருஷ்ணரிடம் மனதைப் பறி கொடுத்தாள். ஆனால் ருக்மணியின் சகோதரனான ருக்மி, நண்பனான சிசுபாலனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தான். வருந்தத்திற்கு ஆளான ருக்மணி, உயிரை மாய்க்கப் போவதாக கிருஷ்ணருக்கு ஓலை அனுப்பினாள். உடனடியாக விதர்ப்ப நாட்டிற்கு விரைந்து ருக்மணியைக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும், ருக்மியையும் வெற்றி கொண்டு திருமணம் செய்தார்.
மகாபாரதத்தில் கிருஷ்ணரை அழைக்கும் போது 'மாதவா' என்கிறான் அர்ஜுனன். மாதவன் என்பதற்கு மகாலட்சுமியை மணந்தவர் என்பது பொருள்.
மாதவாய நமஹ என்று சொல்லி வழிபட்டால் நல்ல மணவாழ்க்கை அமையும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X