ஹிந்து கோயில்களை பாதுகாப்போம்
ஏப்ரல் 02,2021,15:54  IST

தங்களின் தேவை என்ன என்பதை மக்கள் உடனே சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு தேர்தல் முடிந்த பிறகு, போராட்டம் நடத்துவது வேஸ்ட்.
'அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோயில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்னும் கோரிக்கை இப்போது வலுக்கிறது. நம் பண்பாடு, கலாசாரத்தின் ஆதாரம் கோயில்கள். ஆனால் அவை சிதைக்கப்பட்டு வருகின்றன. கீழே உள்ளதைப் படியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.
* 11 ஆயிரத்து 999 கோயில்களில் தினமும் ஒருகால பூஜை கூட நடக்கவில்லை.
* மாதம் ரூ.800 வருமானம் பெறும் கோயில்களின் எண்ணிக்கை 35,000.
* 37 ஆயிரம் கோயில்களில் பூஜை செய்வது, கோயிலை பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்து வேலைகளையும் தலா ஒரு நபரே செய்கிறார்.
* 1200 சுவாமி சிலைகள் 25 ஆண்டுகளில் திருடு போய் உள்ளன.
ஆண்டு ஆண்டாக நம் முன்னோர்களால் பராமரிக்கப்பட்ட கோயில்கள் 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. பல கோயில்களில் விளக்கேற்ற ஆளில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் 25 கோயில்கள் இருந்தாலே பெரிய விஷயம். கோயில்களை அழிய விடுவது பாவம் அல்லவா?
ஹிந்து கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான சட்டங்களை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். அதன் பொருள் மதவிஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது தான். இந்தியாவில் மற்ற மதத்தினருக்கு இந்த அடிமைத்தனமோ, தலையீடோ இல்லை. அந்தந்த மதத்தினர் அவரவர் வழிபாட்டு தலங்களை நிர்வகிக்கின்றனர். ஆனால் ஹிந்துக்களின் உரிமையில் மட்டுமே இந்த தலையீடு உள்ளது. இது நம் உரிமையை பறிப்பதாகும்.
தமிழக கோயில்கள் எந்தளவுக்கு மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் பாருங்கள்.
அரசின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலங்கள், 2.33 கோடி சதுரடி பரப்பில் கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 128 கோடி ரூபாய் வருமானம் வருவதாக கணக்கு காட்டுகிறார்கள். இதே நேரம் சீக்கியர்கள் அடங்கிய குருத்துவாரா கமிட்டியிடம் 85 குருத்துவாராக்கள் உள்ளன. அதற்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்குகிறார்கள். இந்த இரண்டையும் ஒப்பிட்டால் எந்தளவுக்கு மோசமாக கோயில் நிர்வாகம் உள்ளது என்பது புரியும்.
கோயில்களை பக்தர்களிடம் கொடுத்தால் முறைகேடு நடக்கலாம் என சிலர் சந்தேகப்படுகின்றனர். இதன் வாயிலாக அவர்கள் சொல்வது ஹிந்து சமூகத்தில் நேர்மையான, திறமையான 25 பேர் கூட இல்லை என்பதே. இது உண்மையானால் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் 'ஹிந்துக்களில் 25 பேர் கூட நேர்மையானவர்கள் இல்லை. அதனால் தான் கோயில்களை அரசு நிர்வகிக்கிறது' என மக்களிடம் வெளிப்படையாக சொல்லலாமே. 'கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு அளிப்பேன்' என தேர்தல் உறுதி எடுங்கள். கோயில்களைக் காப்பாற்றுங்கள்.

ஜக்கி வாசுதேவ்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X