பஞ்சமுக லிங்க தரிசனம்
மே 08,2021,15:02  IST

ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு விஜயம் செய்திருந்தார் காஞ்சி மகாபெரியவர். தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் கேட்ட கேள்வி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பல ஆண்டுகளுக்கு முன் வந்த போது அப்பகுதியில் பஞ்சமுக லிங்கம் ஒன்றைத் தான் தரிசித்ததாகத் தெரிவித்தார். அந்த கோயில் எங்கே இருக்கு தெரியுமா எனக் கேட்டார்.
தாங்கள் அறிந்தவரை அப்படி ஒரு பஞ்சமுக லிங்கம் இருப்பதாக அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. மகா பெரியவரின் ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். அவர் சொன்னால் கோயில் நிச்சயம் இருக்கும் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என யோசித்தனர்.
ஊரிலுள்ள பெரியவர்களை அழைத்து விசாரித்தார் மகாபெரியவர். அவர்களில் சிலர் அருகிலுள்ள பிரம்மகுடி என்னும் குன்றின் மீது கோயில் ஒன்று இருந்தது. நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத அக்கோயிலில் இருக்க வாய்ப்பிருக்கலாம்'' என்றனர்.
பிரம்மகுடிக்குச் சென்ற மகாபெரியவர், குன்றின் உச்சிக்குச் செல்வதற்கு அருகிலுள்ள ஊர்களைச் சேர்ந்த இளைஞர்களை உதவிக்கு அழைத்தார். மகாபெரியவரின் விருப்பத்தை அறிந்த இளைஞர்கள் உடனடியாக பணியில் இறங்கினர். அவர்களுடன் ஊர் மக்களும் சேர்ந்து புதர் வெட்டும் பணி தொடங்கியது.
மகாபெரியவரின் மேற்பார்வையுடன் இரண்டே வாரத்தில் பாதை அமைத்தனர். முள்புதர் சூழ்ந்திருந்த கோயிலின் உள்ளே சென்றார் மகாபெரியவர். கருவறையைக் கண்டதும் அவரது விழிகள் பளபளத்தன.
அங்கு கம்பீரமாகக் காட்சியளித்தது பல ஆண்டுக்கு முன்பு அவர் தரிசித்த பஞ்சமுக லிங்கம். அக்கம்பக்கத்து கிராமத்து மக்களை எல்லாம் அன்புடன் அழைத்து, 'இனி கோயிலைப் பராமரிப்பது உங்களின் கடமை' என்பதை மகாபெரியவர் வலியுறுத்தினார். நித்ய பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அபூர்வமான இந்த பஞ்சமுக லிங்கத்தை வழிபட்டு வந்தால் அந்த பகுதியே வளம் பெருகும் என்றார். மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

காஞ்சி மகாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* சாப்பிடும் முன் பறவை, விலங்குகளுக்கு உணவிடுங்கள்.
* உறங்கும் முன், அன்றைய நாளில் செய்த நன்மை, தீமைகளை அலசி ஆராயுங்கள்.
* பட்டு ஆடை உடுத்துவதை தவிருங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

திருப்பூர் கிருஷ்ணன்
thiruppurkrishnan@hotmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X