நற்றுணையாவது நமச்சிவாயவே!
மே 08,2021,15:04  IST

மே 6 - திருநாவுக்கரசர் குருபூஜை

கடலுார் மாவட்டம் திருவாமூரில் வாழ்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மருள்நீக்கியார். இவரது சகோதரி திலகவதியார். ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இவர் சைவத்தை விட்டுப் பிரிந்து சமண சமயத்தை தழுவினார். பல சமண நுால்களை கற்றார். தருமசேனர் என்னும் பெயரால் சமணர்கள் இவரை அழைத்தனர். இதைக் கண்டு வருந்திய திலகவதியார் சிவபெருமானிடம் முறையிட்டார். கனவில் தோன்றிய சிவபெருமான், 'வருந்த வேண்டாம். விரைவில் உன் தம்பியை ஆட்கொள்வோம்' என அருள்புரிந்தார். திடீரென தருமசேனருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. சமணர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. திலகவதியாரின் உதவியை நாடிய தருமசேனர் தன் நிலையைச் சொல்லி வருந்தினார்.
''ஈசனின் திருநீறே நோய் தீர்க்கும் அருமருந்து'' என்றார் திலகவதியார். உடனே சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லி திருநீற்றைப் பெற்ற தருமசேனர் உடம்பெங்கும் பூசிக் கொண்டார். அடுத்த நொடியே நோயின் தீவிரம் குறைய ஆரம்பித்தது. திருவதிகையில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் சன்னதியில், 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்ற பதிகத்தைப் பாடி நோய் நீங்கப் பெற்றார். அப்போது வானில் அசரீரியாக 'இனி நாவுக்கரசர் என அழைக்கப் பெறுவாய்' என்று சிவபெருமானே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இதை அறிந்த சமணர்கள் பல்லவ மன்னரான மகேந்திரவர்மனிடம் சென்று திருநாவுக்கரசரை தண்டிக்குமாறு சூழ்ச்சியில் ஈடுபட்டனர். சமண சமயத்தை பின்பற்றிய மகேந்திரனும் அதற்கு உடன்பட்டான். சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்தும், விஷம் கலந்த பாலைக் கொடுத்தும், யானையின் காலில் இடற வைத்தும், கல்லில் கட்டி கடலில் எறிந்தும் துன்புறுத்தினான். சமணர்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் உயிர் பிழைத்தார் திருநாவுக்கரசர். நாடெங்கும் அவரது புகழ் பரவியது. இறுதியில் மகேந்திரவர்ம பல்லவனும் திருநாவுக்கரசரை ஏற்று சைவ சமயத்தில் இணைந்தான். 'கற்றுணைப் பூட்டியோர்
கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' எனும் நமச்சிவாய பதிகத்தில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார் திருநாவுக்கரசர்.
திருவரத்துறை, திருமுதுகுன்றம், திருவேட்களம், திருக்கழிப்பாலை தொடங்கி சிதம்பரம், திருவாரூர் வரை பல சிவன் கோயில்களில் தங்கியிருந்து திருப்பதிகம் பாடி சிவபெருமானின் மனதை குளிரச் செய்தார். தரிசித்த சிவத்தலங்களில் எல்லாம் உழவாரப் பணியில் ஈடுபட்டார். கடவுள் குடியிருக்கும் இல்லமான கோயில் அழகுறத் திகழ வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.
அற்புதங்கள், மகிமைகள், தொண்டுகளில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் செல்லும் இடங்களில் எல்லாம் சிவனருளை நிலைநாட்டினார். 'உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலுார் மேவிய புண்ணியனே' என்று பாடியபடி சித்திரை சதய நட்சத்திரத்தன்று சிவனின் திருவடியில் கலந்தார். தமிழும் சைவமும் தழைத்தோங்கச் செய்த திருநாவுக்கரசரின் குருபூஜை விழா இந்த ஆண்டு மே 6 அன்று சிவன் கோயில்களில் நடக்கிறது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X