தைரியமாகச் சொல்! நீ பக்தன் தானா!
மே 08,2021,15:07  IST

பலசரக்குக்கடை நடத்தும் பெருமாளுக்கு இரண்டு மகன்கள். அளவான வருமானத்தில் நிம்மதியாக வாழ்ந்த பக்தரான, அவரது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. கடன் பிரச்னை அதிகரித்தது. அதைச் சமாளிப்பதற்குள் மூத்த மகன் காதல் விவகாரத்தில் சிக்கினான். இளைய மகன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் ஊரைச் சுற்றினான். குடும்பத்தை எண்ணியே இரவு துாக்கம் குறையத் தொடங்கியது.
ஒருநாள் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு துாணில் சாய்ந்ந்திருந்தார் பெருமாள். அவரைக் கண்ட பட்டாச்சாரியார், ''என்ன பெருமாள் ரொம்ப சோர்வா இருக்கியே...கொஞ்ச நாளா நானும் உன்னை பார்த்துட்டுத்தான் இருக்கேன்...உனக்கு என்னாச்சு?'' எனக் கேட்டார்.
''தினமும் கடவுளை கும்பிடத்தான் செய்றேன் சுவாமி. ஆனா என்னவோ குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கு'' என்றார்.
உடனே பட்டாச்சாரியார் கோயிலுக்கு வெளியே அழைத்து வந்தார்.
''இதோ பாரப்பா... பெருமாள் இங்கு நடப்பதை உன்னிப்பாக கவனி. உண்மை புரியும்'' என்றார்.
கழைக்கூத்தாடி ஒருவர் அந்தரத்தில் கட்டிய கயிற்றில் நடந்து கொண்டிருந்தார். அவரது தோளின் இருபுறமும் காலைத் தொங்கவிட்டபடி ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். நீண்ட குச்சி ஒன்றைக் கையில் பிடித்தபடி சமன் செய்தபடி நடந்தார். அங்கிருந்த அனைவரும் பரபரப்பு அடைந்தனர். அவர் கயிற்றை கடந்ததும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அவர், ''மீண்டும் இங்கிருந்து அந்த எல்லைக்கு என்னால் நடக்க முடியும் என நம்புறீங்களா?'' எனக் கேட்டார்.
''நிச்சயம் முடியும்'' என்று ஒரே குரலில் கத்தினர்.
''நீங்கள் சொல்வது உண்மையானால் உங்களில் ஒருவர் தன் குழந்தையை என்னிடம் ஒப்படைங்க பார்க்கலாம். அக்குழந்தையைச் சுமந்தபடி கயிற்றில் நடந்து காட்டுறேன்'' என்றார். வாயடைத்து நின்ற பார்வையாளர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தனர். காரணம் கூத்தாடியின் திறமையை கண்ணால் பார்த்தும் கூட, அவர்களால் முழுமையாக அவரை நம்ப முடியவில்லை.
''பெருமாள்...உன் நிலையும் இப்படித் தான் இருக்கிறது. கடவுளை நம்பினாலும் பக்தி முழுமை பெறவில்லை. அதாவது கடவுளை பூரண சரணாகதி அடையவில்லை'' என்றார்.
''சுவாமி... சரணாகதி என்றால்...புரியவில்லையே'' எனக் கேட்டார்.
'' நம்பிக்கை வேறு. சரணாகதி வேறு. எதைப் பற்றியும் சிந்திக்காமல் நம்மைக் கடவுளிடம் முழுமையாக ஒப்படைப்பது சரணாகதி. வாழ்வில் இன்பமோ, துன்பமோ எது குறுக்கிட்டாலும் சோர்ந்து விடக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொள். உன் வாழ்க்கை வசந்தமாகும்'' என்றார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X