குப்பை வண்டி விதி
மே 08,2021,15:12  IST

கம்பெனியின் நிர்வாக அதிகாரி அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல டாக்சி ஒன்றை வரவழைத்தார்.
செல்லும் வழியில் அவர்களுக்கு முன்பு சென்ற கார் சிக்னல் ஏதுமின்றி திடீரென திரும்பியதால் நிலை தடுமாறும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சுதாரித்த டாக்சி டிரைவர், பிரேக்கை பிடித்து முன் சென்ற காரை இடிக்காமல் லாவகமாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த டிரைவர், தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான். டாக்சி டிரைவரோ வாய் திறக்கவில்லை. மவுனமாக கேட்டதோடு புன்சிரிப்புடன் கைகளையும் காட்டினார். அவரது செயல்பாடுகள் தவறாக வண்டி ஒட்டிய நபரை எச்சரிப்பது போல் இல்லை. ஏதோ நெருங்கிய நண்பரிடம் பழகுவது போல் இருந்தது.
''ஏன் அவனை சும்மா விட்டீங்க? வெளுத்து வாங்கியிருக்க வேண்டாமா...அவன் மீது தப்பை வெச்சிகிட்டு நம்ம மேல எகிறுறானே?'' என்றார் நிர்வாக அதிகாரி.
அப்போது டிரைவர் சொன்ன தத்துவம் தான் 'குப்பை வண்டி விதி'. ''ஐயா...மனிதர்களில் பலர் குப்பை வண்டி போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகள், அழுக்குகளைச் சுமந்து திரிகின்றனர். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.
குப்பைகள் சேர்ந்ததும் இறக்கி வைக்க இடம் தேவைப்படும். சில நேரங்களில் நம்மிடம் இறக்கி வைப்பார்கள். அந்த குப்பையை நமக்குரியதாக கருதாமல் புன்சிரிப்புடன் கையசைத்தபடி இடத்தை விட்டு விலக வேண்டும்.
அவர்கள் கொட்டும் குப்பை எண்ணங்களை நம் குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ மற்றவர் மீது திணிக்கக் கூடாது.
இல்லாவிட்டால் நம் வாழ்வு பாழாகி விடும்'' என்றார். அவரது நல்லெண்ணத்தை அறிந்த அதிகாரி வியந்தார்.
இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் சாதனையாளர்கள் தங்களின் மனதிற்குள் குப்பை வண்டிகள் நுழைய அனுமதிப்பதில்லை. காரணம் இன்றி யாராவது உங்கள் மீது எரிந்து விழுந்தாலோ, கடுஞ்சொற்கள் அள்ளி வீசினாலோ நிலை குலைய வேண்டாம். அவர்களிடம் சண்டையிடாதீர்கள். புன்னைகையை பதிலாக அளித்து விட்டு அங்கிருந்து நகருங்கள்.
நம்மை சரியாக நடத்துபவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம் வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதையும், 90% நாம் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X