அமாவாசை அபிஷேகம்
மே 08,2021,15:18  IST

நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை என்பது வழக்கம். இவர் கர்நாடக மாநிலம் மைசூரு விஜய் நகரில் யோக நரசிம்மர் என்னும் பெயரில் உங்களுக்காக காத்திருக்கிறார். அமாவாசையன்று இவரை தரிசித்தால் சூரியனைக் கண்ட பனி போல பிரச்னை, தீயசக்திகள் ஓடிவிடும்.
அசுரனான இரண்யனின் ஒரே மகன் பிரகலாதன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே, நாரதரின் உபதேசத்தால் விஷ்ணு பக்தனாக மாறினான். அசுர குலத்தின் குருவான சுக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க மகனை அனுப்பினான் இரண்யன். அங்கு படிக்க வந்த சிறுவர்களும் பிரகலாதனால் பக்தர்களாக மாறினர். 'அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா?' என வெகுண்ட இரண்யன் மகனைக் கொல்லத் துணிந்தான். விஷம் கொடுத்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையை விட்டு மிதிக்கச் செய்தான். ஆனாலும் நாராயண மந்திரத்தை ஜபித்து தப்பித்தான். கடைசி முயற்சியாக இரண்யன் மகனிடம், “எங்கே உன் ஹரி?” என கேட்டான். 'துாணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்றான் பிரகலாதன். துாணை பிளக்க இரண்யன் முயன்ற போது, அதைப் பிளந்தபடி தோன்றிய நரசிம்மர் அசுரனைக் கொன்றார். அவர் இங்கு இருக்கிறார்.
சாளகிராமம் என்னும் கல்லினால் ஆன மூலவர் குத்துக் காலிட்டபடி யோக நிலையில் உள்ளார். சங்கு சக்கரம் ஏந்தியுள்ள இவரது மார்பில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள். அதர்வண வேதத்தை கால் கட்டை விரலில் அடக்கியவர் இவர்.
இந்த ஆண்டு வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனையும், வைகாசி பவுர்ணமியன்று சகஸ்ர கலசாபிஷேகமும், பிரதமையன்று சுதர்சன ஹோமமும் நடக்கிறது. வீண்பயம், எதிரி தொல்லை, வழக்கு பிரச்னையில் இருந்து விடுபட அமாவாசையன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் 300 லிட்டர் பால், 300 லிட்டர் தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பதினாறு கைகளோடு காட்சி தரும் சக்கரத்தாழ்வார் இக்கோயிலில் 'அஷ்டபுஜ சுதர்சனர்' என்னும் பெயரில் எட்டுக்கைகளுடன் இருக்கிறார். உற்ஸவர் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் இருக்கிறார்.

எப்படி செல்வது: மைசூரு - மங்களூரு மெயின் ரோட்டில் 4கி.மீ.,
விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாத அமாவாசை
நேரம்: காலை 6:00 - 1:30 மணி; மாலை 5:30 - 10:00 மணி
தொடர்புக்கு: 0821 - 256 3646
அருகிலுள்ள தலம்: உத்தனஹள்ளி ஜூவாலாமுகி அம்மன் கோயில் (12 கி.மீ.,)
நேரம்: காலை 7:00 - 2:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 98447 05061

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X