மாதர் குலத்தின் மாணிக்கம்
பிப்ரவரி 04,2011,14:15  IST

அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் அன்புப்புதல்வியான ஹஸரத் பாத்திமா(ரலி) அவர்கள் மாதர் குலத்தின் மாணிக்கமாகத் திகழ்கிறார்கள். இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கை முன்மாதிரியாக அமைந்துள்ளது. வரம்புக்கு மீறிய வறுமையில் வாழ்ந்தாலும், அவர்கள் பொறுமையைக் கடைபிடித்தார்கள்.
கைப்பிடித்த கணவர் ஹஸரத் அலி (ரலி) அவர்க ளின் அன்புக்குப் பாத்திரமானார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து, அருமை ஹஸன் ஹுஸைன் (ரலி) அவர்களின் அன்னையாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் வரலாற்றில் நமக்கு மாபெரும் படிப்பினைகள் உள்ளன.
பாத்திமா (ரலி) அவர்கள் ஹஸரத் கதீஜா (ரலி) அவர்களின் நான்காவது புதல்வியாக அவதரித்தார்கள். அப்போது நபிகள் பெருமானாருக்கு வயது 41. அதாவது, அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த முதல் ஆண்டிலே பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். அல்லாஹ்வே, "பாத்திமா' என்று பெயரிடுமாறு அறிவித்தான். "பாத்திமா' என்றால் "நெருப்பில் இருந்து பாதுகாப்பு' என்று பொருள். எனவே, பிறப்பின் போதே பாத்திமா (ரலி) அவர்கள் சிறப்படைந்தார்கள்.
ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாத்திமா (ரலி) அவர்கள் வளர்ந்தார்கள். அவர்களது அழகு பெருமான்(ஸல்) அவர்களைப் போலவே அமைந்திருந்தது. அவர்களை நிக்காஹ் செய்து கொள்ள பலரும் பெருமானாரிடம் கோரினர்.
இதில் ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி) அவர்களும், ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களும் அடங்குவார்கள். ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்றார்கள். கடைசியாக ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் உத்தரவும் அவர்களுக்கே நிக்காஹ் செய்து கொடுக்குமாறு வந்தது. எனவே ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில், ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கும், அலி (ரலி) அவர்களுக்கும் நிக்காஹ் நடந்தது. அப்போது பாத்திமா (ரலி) அவர்களின் வயது சுமார் 15 தான்.
எத்தனையோ செல்வந்தர்கள் மணம் முடிக்கக் காத்திருந்தும் ஏழையான அலி (ரலி) அவர்களை மனதார ஏற்றுக்கொண்டார்கள். எளிய முறையில் அவர்களது நிக்காஹ் நடைபெற்றது. அவர்களுக்கு தரப்பட்ட சீதனப்பொருட்களை விரல் விட்டு எண்ணி விடலாம், இது நாயகம் அவர்களின் எளிமையின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X