மக்கள் குறைவாக இருக்கும் தீவு ஒன்றில் தனது ஷூக்களை விற்க எண்ணிய ஒரு நிறுவனம், மேலாளர் ஒருவரை அங்கு அனுப்பியது. அவர் போன வேகத்தில் திரும்பி வந்தார். அத்தீவில் யாருமே ஷூ அணியவில்லை. அங்கு எதுவும் விற்க முடியாது என்றார். இதை அறிந்த நிறுவனத்தின் தலைவர் அங்கு சென்றார்.
மக்கள் கூடும் ஒரு இடத்தில் ஷூக்களை அடுக்கி வைத்தார். 'வெளியில் போனால் பாதங்களில் சூடேறாது, பனிக்காலத்தில் வெதுவெதுப்பாக இருக்கும்' என, ஷூ அணிவதால் ஏற்படும் நன்மையை விளக்கினார். ஆனால் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. தலைவர் சோர்ந்து போகவில்லை.
'நாளை காலை ஆறு மணிக்குள் வரும் இருபது பேருக்கு, இலவசமாக ஷூக்கள் வழங்கப்படும்' என அறிவிப்பு செய்தார்.
மறுநாள் அலைகடலென அனைவரும் திரண்டு வந்தனர். சொன்னபடியே இருபது பேருக்கு ஷூ கொடுக்கப்பட்டது. சில நாட்கள் சென்றது. அனைத்து ஷூக்களும் விற்றுத்தீர்ந்தன.
எப்படி என்று நினைக்கிறீர்களா.. தலைவரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி அது. இலவசமாக பெற்றவர்கள் அதை பயன்படுத்தும் விதத்தை, பார்த்தவர்களுக்கு அதை வாங்கும் ஆசை ஏற்பட்டது.
எதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியிருந்தால், நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.