எம்.முத்தையா, கோவில்பட்டி
*குழந்தைகள் நன்கு படிக்க யாரை வணங்கலாம்?
தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், சரஸ்வதிக்குரிய ஸ்தோத்திரம், பாடல்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
த.நேரு, வெண்கரும்பூர்
*ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?
மண்டலத்தை திரிபட்சம் (மூன்று பட்சம்) என்பர். பட்சம் என்பது 15 நாட்கள். 3 பட்சம் என்பது அதாவது 45 நாட்கள் ஒரு மண்டலம்.
எஸ்.ரேணுகா, கோவை
*நாலும் தெரிஞ்சு நடக்கணும் என்பதன் பொருள் என்ன?
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவை வாழ்வின் தர்மங்கள். அறவழியில் வாழ்வு நடத்துதல், நேர்மையான வழியில் பணம் தேடுதல், மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்தல், கடவுள் அருளால் மோட்சம் அடைதல். இந்த நான்கையும் சரியாக பின்பற்றுவதே சிறந்த வாழ்க்கை.
எஸ்.கார்த்திக் ஆனந்த், பெங்களூரூ
*சில கோயில்களில் ஆண்கள் சட்டையின்றி தரிசிக்கிறார்களே...
ஆண்கள் இடுப்பில் வேட்டி, துண்டுடன் செல்வது தரிசன விதிமுறை. இதை பின்பற்றுவது நல்ல விஷயமே.
ஆ.மல்லிகா, சென்னை
* தேய்பிறை நாட்கள், அமாவாசையில் குழந்தை பிறப்பது தோஷமா?
தோஷம் இல்லை. பகவான் கிருஷ்ணர் தேய்பிறையில்(அஷ்டமி) தான் அவதரித்தார்.
எஸ்.கற்பகம், மயிலாப்பூர்
*தானத்தில் சிறந்தது எது?
பிறரை திருப்திபடுத்தவும், புகழுக்காகவும் தானம் அளிக்கக் கூடாது. மனதிருப்தியுடன் முடிந்தளவுக்கு பிறருக்கு எதைக் கொடுத்தாலும் அது சிறந்தது தான்.
எஸ்.மீனாட்சி, மதுரை
*இரவில் துாக்கமின்றி சிரமப்படுகிறேன். பரிகாரம் சொல்லுங்கள்
மதியத்தில் துாங்குவதை தவிருங்கள். இரவு உணவுக்குப் பின் அலைபேசி, 'டிவி' வேண்டாம். நல்ல புத்தகங்களை படித்தால் மனம் அமைதி பெறும்.
வி.முனியசாமி, நாகர்கோவில்
*வீட்டு வாசலில் பசு கோமியம், சாணம் இடுவது நல்லதா?
இது நல்ல சகுனம். பழம், கீரை, காய்கறி கழிவுகளை பசுவுக்கு அப்போது கொடுப்பது நல்லது.
வி.வையாபுரி, திண்டுக்கல்
*வட்டித்தொழில் செய்யும் நான் கோயில்களுக்கு உதவி செய்கிறேன். கடவுள் அருள் கிடைக்குமா?
வங்கிகள் செய்வதை தானே நீங்களும் செய்கிறீர்கள். இதில் தவறில்லை. குறைந்த வட்டியில் பணம் தருவதும் ஒருவகையில் தர்மம்தான். கந்துவட்டி மட்டும் வேண்டாம். கடவுளின் அருள் கிடைக்கும்.