செல்வந்தர் ஒருவர் தனது குழந்தைகளை கவனிக்க ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தினார். குழந்தையிடம் பேசக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் செல்வந்தர். இப்படி நாட்கள் சென்றன. தொழிலில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே ஆயாவை வேலையில் இருந்து நிறுத்தினார்.
மீண்டும் தொழிலை எப்படி மேம்படுத்துவது என சிந்தித்துக்கொண்டிருந்தார் செல்வந்தர். அப்போது மகள் ஓடிவந்து அவரை அணைத்துக்கொண்டாள்.
''அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இப்போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றாள்.
''ஏம்மா... இவ்வளவு நாள் நீ சந்தோஷமாக இல்லையா'' எனக்கேட்டார்.
''தொழில் விஷயமாக அலைந்து கொண்டிருந்தபோது உங்களை பார்க்கவே முடியாது. தற்போதுதானே என்னுடன் பேசுகிறீர்கள்'' என்றாள். இதைக்கேட்டவருக்கு மனதில் ஒருவித துக்கம் ஏற்பட்டது.
''அப்பா.. இனி நீங்கள் பணக்காரன் ஆக மாட்டேன் என உறுதிமொழி
கொடுப்பீர்களா'' தயக்கத்தோடு கேட்டாள் மகள். இதைக்கேட்டு மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதார்.
குழந்தைகளின் அன்பை பணத்தால் பெற முடியாது. அவர்களுக்கு நம்முடைய நேரம், கவனிப்பே தேவைப்படுகிறது. பணத்தைவிட இவை அதிக மதிப்பு மிக்கவை.