கே.குருமூர்த்தி, மேற்கு மாம்பலம், சென்னை
* என் மகனுக்கு வயது 32. திருமணம் தாமதமாகிறதே...பரிகாரம் கூறுங்கள்.
25 வயதிற்குள் திருமணம் முடிப்பது நல்லது. இளைஞர்கள் படிப்பு, வேலை வாய்ப்புக்காக திருமணத்தை தவிர்ப்பது சரியல்ல. பரிகாரமாக செவ்வாய்க்கிழமை மதியம் 3:00 - 4:30 மணிக்குள் ராகு காலத்தில் துர்கைக்கு தீபமேற்றி, 'ஓம் ஸ்ரீமங்கள சண்டிகாயை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சிவப்பு நிற மலர்கள் சாத்தி வழிபடுங்கள். வயதான தம்பதியருக்கு ஆடை தானம் அளித்து ஆசி பெறுங்கள்.
சு.நாகராஜன், கன்னியாகுமரி
* சிலர் ஞாயிறு, புதனன்று விரதம் தேவையில்லை என்கிறார்களே... சரியா?
எல்லா நாளும் புனிதமானதே. மற்ற நாட்களில் விரதம் இருப்பவர்கள் ஞாயிறு, புதனன்றும் விரதம் இருக்கலாம்.
கே.லட்சுமி, கோயம்புத்துார்
* வழிபாடு, தொண்டு இவற்றில் சிறந்தது எது?
இரண்டும் சிறப்பானதே. ஒன்றில்லாமல் மற்றொன்று பலன் அளிக்காது.
நா.பார்வதி, பெங்களூரு
* இறந்த ஒருவர் அடிக்கடி கனவில் வருகிறாரே...ஏன்?
அவரை நினைத்து நீங்கள் வருந்துகிறீர்கள் என்று இதற்கு அர்த்தம்.
கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு
* கூட்டுக்குடும்பம் சிறக்க யாரை வழிபடவேண்டும்?
தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் குடும்பத்தில் பிரச்னை உருவாகும். இதனை தவிர்க்க புதனன்று வெண்தாமரை மலர் சாத்தி சரஸ்வதியை வழிபடுங்கள்.
நடேஷ் கன்னா, திருநெல்வேலி
* கோயில்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியின் பின்புறம் நரசிம்மர் இருக்கிறாரே... ஏன்?
'சக்கரம் மூலம் விரைந்து என்னைக் காத்தருள்க' என மகாவிஷ்ணுவை வேண்டுவதே இதன் நோக்கம். நாணயத்தின் இரண்டு பக்கம் போல சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் வேறு வேறு அல்ல. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தீமை அழிந்து உலகில் தர்மம் வாழும்.
இ.நாகராஜன், சாத்துார்
* கர்ப்பமான பெண் எத்தனை மாதம் வரை கோயிலுக்குச் செல்லலாம்?
பிரசவம் நடக்கும் நாள் வரை கோயிலுக்குச் செல்லலாம்.
த.நேரு, வெண்கரும்பூர்
* குலதெய்வ அருள் இருந்தால்தான் இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்குமா?
உண்மை தான். எந்த தெய்வத்தை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்க கூடாது.
பி.பத்மாவதி, மதுரை
* என் குழந்தை எப்போதும் பயப்படுகிறாள். பரிகாரம் என்ன?
பெற்றோர் அரவணைப்பிலேயே வளர்பவர்கள் இப்படி பயப்படுவதுண்டு. மற்றவருடன் இயல்பாக பேசி, விளையாடப் பழக்குங்கள். செவ்வாயன்று சிவப்பு மலர் சாத்தி முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.