ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே
என்கிறது திருமந்திரப் பாடல். ஞான மார்க்கத்தை விட மேலான அறநெறி இல்லை. ஞானமார்க்கத்தைப் பற்றாத சமயமும் சிறந்த சமயமல்ல. ஞான மார்க்கத்தை விட முத்தியளிக்கக் கூடிய மார்க்கம் வேறில்லை. ஞானத்தில் உயர்ந்தவரே மனிதர்களில் மேலானவர்.
இப்பாடலுக்கு விளக்கமாக தாயுமானவர் பராபரக்கண்ணி பாடலில்,
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர்காய் கனியாகும் பராபரமே
என்று பாடியுள்ளார்.
மனிதன் வாழ்வதற்குரிய நெறிகள் நான்கு. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம். இவற்றின் தன்மை என்னவென்றால் சரியை - அரும்பு, கிரியை - மலர், யோகம் - காய், ஞானம் - கனியாகும். உலக மதங்களில் சைவ சமயம் ஒன்றே ஞானத்தை உள்ளடக்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
சைவ சமயமே சமயம்
சமயா தீதப் பழம்பொருளை
கைவந் திடவே மன்றுள்வெளி
காட்டும் இந்த கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி
புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேரவாரும் செகத்தீரே
தாயுமானவர் பாடிய இப்பாடலின் பொருள் சைவம் ஒன்றே சிறந்த சமயம். சிவலிங்கத் தோற்றமுடைய உயிரை தவத்தால் அடைந்து முத்தி பெற பிரம்மரந்திரத்தைக் காட்டுவது சைவம் மட்டுமே. இதை விட்டு விட்டு பொய்யான வழிகளைக் காட்டும் வேறு சமயங்களைப் பின்பற்ற வேண்டாம். தலையில் நம் உயிர் அமைந்துள்ள தெய்வ சபையாகிய பிரம்மரந்திரத்தைக் காண என்னோடு வாருங்கள்.
உலக மக்களே! கடவுளைக் காண்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அகத்தியர் விடையளிப்பதைக் கேளுங்கள்:
போக ஒரு தடையுண்டோ அந்த நாட்டில்
போவதற்குப் பொய்கைதனில் முழுக வேண்டாம்
சாகசர்க்குத் தலைகீழாய் நிற்க வேண்டாம்
சத்தலிங்கம் தனக்குமலர் சாத்த வேண்டாம்
தாகமுடன் தீ வளர்த்துக் குதிக்க வேண்டாம்
தாரணியில் பலதெய்வம் தொழவே வேண்டாம்
ஏகமென்ற பிரம்மாவை நாட வேண்டாம்
இந்தநுால் பார்த்தறிவீர் இன்பம் தானே
- அகத்தியர் ஞான விளக்கப் பாடல்
உச்சிக்குழி முதல் உள்நாக்கு வரை நீண்டிருக்கும் பிரம்மரந்திரத்திற்கு 'நாதாந்த நாடு' என்று பெயர். அந்த நாட்டிற்குள்ளே செல்வதற்கு தடையேதும் இல்லை. அங்கே போவதற்குக் குளத்தில் முழுக வேண்டாம். தலைகீழாக நின்று சாகசம் செய்ய வேண்டாம். லிங்கங்களுக்கு மாலை சாத்தி வணங்க வேண்டாம். தீயை வளர்த்து அதில் குதிக்க வேண்டாம். உலகிலுள்ள பல தெய்வங்களையும் வழிபட வேண்டாம். பிரம்மனின் ஆதாரத் தலமான சுவாதிஷ்டானத்தை நாட வேண்டாம். குருவின் மூலம் இந்த நுாலை கற்றறிந்தால் பேரின்ப நிலையான முத்தியை அடையலாம்.
தவம் செய்தால் ஏற்படும் அனுபவத்தை ராமலிங்க வள்ளலார் இவ்வாறு கூறுகின்றார்:
தோற்றமிலாக் கண்ணும் சுவையுணரா நாவும் நிகழ்
நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
கேளாச் செவியும் கொள் கீழ்முகமே நீற்றணிதான்
மூளாத பாழ்த்த முகம்
- திருஅருட்பா
ஞானத்தவத்தால் ஏற்படும் அனுபவங்கள்
அ. தெய்வங்களும், சமாதியிலுள்ள ஞானிகளும் தோன்றுவர்,
ஆ. ஆனந்தமய கோசத்திலிருந்து அமிர்தம் ஊறும்.
இ. தச நாதங்கள் கேட்கும்.
இந்த அனுபவங்கள் பற்றி திருமுறைகள் கூறும் சான்றுகள்.
அ. தெய்வீகக் காட்சிகள்
காணும் பலப்பல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலப்பல பொன்போலத் தோற்றிடும்
- திருமந்திரம்
ஆ. அமுதம் ஊறுவது
* வாசமலரெலாம் ஆனாய் நீயே
- அப்பர் தேவாரம்
* வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்
- திருவாசகம்
இ. தசநாதங்கள்
* ஓசை ஒலிஎலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
- அப்பர்
* தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்
- திருவாசகம்
தவம் செய்வோரின் காதுகளில் கேட்கும் பத்து நாதங்கள்: மணியின் ஓசை, கடலின் ஓசை, யானையின் பிளிறல், குழலின் ஓசை, இடியோசை, வண்டின் ஓசை, தும்பியின் ஓசை, சங்கின் ஒலி, பேரிகை ஒலி, யாழின் ஓசை.
சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா. கமலக்கண்ணன்