கவிஞர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் நுாலில் இருந்து ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.
'தெய்வ தண்டனை' என்று இந்து மதம் சொல்கிறதே, அதை நானே பலமுறை கண்ணெதிரில் கண்டிருக்கிறேன். சிறுவயதில் நான் வேலையில்லாமல் அலைந்த போது, ஒருவர் ஒரு மோசமான வேலையைச் சொல்லி, கேலியாக, ''அந்த வேலைக்குப் போகிறாயா?'' என்று கேட்டார். 'அதற்குத்தானா நாம் லாய்க்கு' என்றெண்ணிய நான் அழுதுவிட்டேன். என்ன ஆச்சர்யம்! சில ஆண்டுகளில், அதே வேலைக்கு அவருடைய மகன் போய்ச் சேர்ந்தான்! நான் இதோ உங்கள் மத்தியில் நிற்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஓர் அதிகாரியின் மனைவியோடு கள்ள நட்பு வைத்திருந்தார். தன் மனைவியைப் பற்றி மட்டும் அவர் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய நல்ல மனைவிகூடச் சில ஆண்டுகளில் வேறு ஒருவரோடு கள்ள நட்புக் கொண்டார். அந்த மனிதர் நிம்மதியின்றி அழுதார், அலைந்தார்.
அவரை நான் சந்தித்தபோது, என் நினைவுக்கு வந்தது இந்து மதம்! நான் படமெடுத்தபோது, என் பங்காளி ஒருவருக்குக் கையெழுத்துப் போடும் உரிமை கொடுத்திருந்தேன். அவர், தமக்கு வேண்டிய ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, என் கம்பெனி லெட்டர் பேப்பரில், வெறும் பேப்பரில், கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார். அவர், அதை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பூர்த்தி செய்து கொண்டு என்னை மிரட்டினார். இரண்டு வருட காலங்கள் நான் நிம்மதியில்லாமல் இருந்தேன். இரவில் திடீர் திடீரென்று விழிப்பு வரும். 'கண்ணா கண்ணா!' என்று அழுவேன். அந்தப் 'பினாமி' நபர், ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அந்தக் கம்பெனியின் உபயோகத்திற்காக, அவசரமாக ஒரு வெறும் பேப்பரில் கையெழுத்துப் போட்டு, கம்பெனி மானேஜரிடம் கொடுத்து விட்டுப் போனார்.
அந்த மானேஜருக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டை வந்தது. அந்த மானேஜருக்கு, நான் ஏமாற்றப்பட்ட விதம் தெரியும். ஆகவே, ஒரு நாள் அதிகாலையில் அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதிலே எழுபத்தையாயிரத்துக்குப் பூர்த்தி செய்து அவரைக் கூப்பிட்டுக் காட்டினேன். பினாமி நபர் என் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். பிறகு இரண்டு பேருமே இரண்டு பேப்பர்களையும் கிழித்துப் போட்டு விட்டோம். அப்போது என் நினைவுக்கு வந்தது இந்து மதம்! என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது 'நம் முன்னோர்கள் முட்டாள்களல்ல' என்பதே. ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்து மதம், உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு விநாடியையும் அளந்து கொடுக்கிறது.
இந்தியாவின் வடஎல்லையில் தோன்றி, இந்தியா முழுமையிலும் ஓடி, சீனா முழுவதையும் கவர்ந்து ஆசியாக் கண்டத்தையே அடிமை கொண்ட பெளத்த மதம், இந்து மதத் தத்துவங்களாலே சீரணிக்கப்பட்டு, இந்தியாவில் இல்லாமல் ஆகிவிட்டது. தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி நான்கும், சமண, பெளத்த மரபுகளைக் காட்டுவதை நாம் எண்ணிப் பார்த்தால், சமண, பெளத்தத்தின் செல்வாக்கு தென்குமரிவரை எப்படியிருந்தது என்பதை அறிய முடியும். ஜைன - பெளத்த மதங்கள் பெற்றிருந்த செல்வாக்கை நமது வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அவை எங்கே? இந்து மதத்தின் தத்துவங்களுக்குள் அவை அடங்கி விட்டன. அந்த நதிகள் இந்துமாக்கடலில் சங்கமமாகி விட்டன. வள்ளுவன் குறிப்பிடும் 'ஆதிபகவன், உலகியற்றியான்' அனைத்தும், புத்தனை அல்லது ஜைன சமயக் கடவுளையே!
இப்படி நான் சொல்வதற்குக் காரணம், வள்ளுவனுக்குப் பின்வந்த ஐம்பெரும் இலக்கியங்களில் சமண, பெளத்த மரபு கலந்திருப்பதுதான். ராமானுஜர் காலத்திலிருந்து இந்து மதம் உத்வேகத்தோடு எழுந்திருக்கிறது. அமைதியான முறையிலேயே அத்தனை மதங்களையும் ஆட்கொண்டிருக்கிறது. காரணம், அதன் ஆழ்ந்த தத்துவங்களே!
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்