வி.நிர்மலா, மதுரை
* செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுகிறதே...
செவ்வாயன்று முருகப்பெருமானுக்கும், அங்காரக பகவானுக்கும் செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்யுங்கள். அத்துடன் துவரம்பருப்பு சாதம் நைவேத்யம் செய்யுங்கள். தொடர்ந்து எட்டு செவ்வாய் கிழமைகளில் இதைச் செய்யுங்கள்.
சி.சிந்துஜா, தேனி
* சொர்க்கம் நரகம் இருப்பது உண்மையா?
மண்ணில் நம் வாழ்க்கையைப் பொறுத்து சொர்க்கம், நரகம் கிடைக்கும். ஆனாலும் சொர்க்க, நரக அனுபவங்களை இப்போதும் அனுபவிக்கவே செய்கிறோம்.
டி.மனோன்மணி, கன்னியாகுமரி
* இறந்த மூதாதையரின் ஆடைகள் வீட்டில் இருக்கலாமா?
தாராளமாக. அதன் வழியாக அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
எல்.கவுரிசங்கர், விழுப்புரம்
* இந்த கலிகாலத்தில் தெய்வீக அருள் பெற்றவர் இல்லையா...
ஏன் இல்லை... தெய்வீக மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆடம்பரத்தை கண்டு ஏமாறாமல் எளிமையான குருமார்களை அடையாளம் காணுங்கள்.
எம்.கயல்விழி, திருத்தணி
* எத்தனை ஆண்டுகள் சோமவார விரதம் இருக்க வேண்டும்?
ஆயுள் முழுவதும் இருக்கலாம். வேண்டுதலுக்காக விரதமிருப்பவர்கள் விருப்பம் நிறைவேறியதும் முடிக்கலாம்.
எம்.வைஜெயந்தி திருநெல்வேலி
* நல்ல நேரம் இருந்தால்தான் கடவுளின் அருள் கிடைக்குமா?
நல்ல நேரம் எது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்லவராக இருந்தால் கடவுளின் பார்வை உங்களுக்கு கிடைக்கும்.
கே.கவுதம், பெங்களூரு
* ரோகிணியில் ஆண் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாதா...
கம்சன் எனும் அசுரன் இருந்தான். அவனது தங்கைக்கு மகனாக கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தன்று பிறந்தார். மாமனாக இருந்தாலும் அசுரனான அவனை வதம் செய்தார் கிருஷ்ணர். இதனால் 'ரோகிணி மாமனுக்கு ஆகாது' என வீணான நம்பிக்கை பரவியது. மாமன் நல்லவனாக இருந்தால் ரோகிணியில் பிறக்கும் மருமகனால் நன்மையே ஏற்படும்.
ஆர்.வனஜா, கோவை
* நடராஜரின் நடன தத்துவம் என்ன?
நடராஜர். வலது கையால் 'அஞ்சேல்' என பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். இடது கையால் துாக்கிய திருவடியைக் காட்டி அருள்புரிகிறார். அவரை சரணடைந்தால் பாவங்கள் அழியும்.