திருமண யோகம் தரும் மணக்கயிறு
ஜனவரி 07,2022,19:15  IST

கும்பகோணம் அருகிலுள்ள திருவேள்விக்குடியில் சிவன் மணவாளேஸ்வரர் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். தடை விலகி திருமண யோகம் உண்டாக இங்கு மணக்கயிறு கட்டி வழிபடுகின்றனர்.
பூமியில் மானிடப்பெண்ணாகப் பிறந்து சிவனை மணக்க வேண்டுமென ஆசைப்பட்டாள் பார்வதி. அதற்காக சிவனிடம் வேண்டினாள். இந்த நேரத்தில் புத்திர பாக்கியத்திற்காக பரத்வாஜ மகரிஷி யாகம் நடத்தவே, அதில் அம்பிகையை தோன்றச் செய்தார் சிவன். பரத்வாஜர் அவளைத் தன் மகளாக ஏற்று வளர்த்தார். கன்னி பருவம் அடைந்ததும் மகளின் திருமணம் நடக்க வேள்வி (யாகம்) ஒன்றைச் செய்தார். இதனால் இத்தலம் 'வேள்விக்குடி' எனப் பெயர் பெற்றது. யாகத்தின் பலனாக அம்பிகை சிவனைத் திருமணம் செய்து கொண்டாள். மணம் முடித்த சிவனுக்கு 'மணவாளேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
திருமணத்தின் போது மணமேடையில் முகூர்த்தக்கால் ஊன்றி மணமக்களின் கையில் காப்பு அணிவிப்பர். திருமணம் முடியும் வரை மணமக்களை தீய சக்திகள் நெருங்காதிருக்க இப்படி செய்வர். இதை போல சிவபார்வதி திருமணத்தில் மங்களக்காப்பு கட்டும் சடங்கு இங்கு நடந்தது. திருமண பாக்கியத்திற்காக வரும் பக்தர்களும் மங்களக்காப்பு கட்டிக் கொள்கிறார்கள். திருமண தோஷ நிவர்த்திக்காக பவுர்ணமியன்று யாகம் நடக்கிறது. யாகத்தில் வைத்த தீர்த்தத்தால் சுவாமி, அம்மன் பரிமள சுகந்த நாயகிக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில் பங்கேற்கும் ஆண்களுக்கு அம்மனுக்கு சூட்டப்பட்ட மங்களக்கயிறும், பெண்களுக்கு சுவாமிக்கு சூட்டப்பட்ட கயிறையும் தருகின்றனர்.
ராஜகுமாரன் ஒருவனுக்கு திருமண நிச்சயம் செய்தபின் பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு மறுத்தனர். வருந்திய ராஜகுமாரன் சிவனைச் சரணடைந்தான். அவனுக்காக பூதகணங்களை அனுப்பி பெண்ணை வரவழைத்த சிவன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதனடிப்படையில் நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்தில் தடங்கல் ஏற்படுவதை தவிர்க்க மணமக்களின் பெற்றோர் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகர், சுப்பிரமணியர், கோதண்டராமர், கஜலட்சுமி, காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கிரக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் ஈசான லிங்கத்தை வழிபடுகிறார்கள்.

எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ.,
விசேஷ நாள்: மகாசிவராத்திரி பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 99422 85411, 04364 - 235 462
அருகிலுள்ள தலம்: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் 14 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04364 - 222 345, 223 779

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X