ஒரே கடவுளின் மூன்று நிலைகள்
ஜனவரி 26,2022,15:45  IST

கடவுளைப் பற்றி வேதங்கள் விளக்குகிறது
1. ஆதியில் ஆத்மா ஒன்றாகவே இருந்தது. உலகங்களை சிருஷ்டிக்க அது விரும்பியது. அது உலகங்களைச் சிருஷ்டித்தது.
- ரிக்வேதம், ஐதரேய உபநிஷதம்
2. தேவன் ஒருவனே. (ஏகோ தேவ). எங்கும் நிறைந்த அவனே எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மா. எல்லாச் செயல்களையும் மேற்பார்வை செய்வதும், சாட்சியாய் இருப்பதும், அறிவாய் இருப்பதும் அவனே.
- யஜூர் வேதம், பிரம்ம உபநிஷதம்
3. அவன் பெண்ணுமல்லன்; ஆணுமல்லன்; இந்த இரண்டும் அல்லன்
- யஜூர் வேதம், சுவேதாசுவதர உபநிஷதம்
4. அப்பரம புருஷன் ஒளி நிறைந்தவன். உருவம் இல்லாதவன். உள்ளும் புறம்பும் ஒன்றாய் உள்ளவன். பிறவாதவன், பிராணன் இல்லாதவன். மனம் இல்லாதவன்
- அதர்வண வேதம், முண்டக உபநிஷதம்
இதில் இருந்து கடவுள் ஒருவரே என்றும், அவன் அரூபமானவன் என்றும், சகல ஜீவராசிகளின் உயிராக விளங்குகிறான் என்றும் அறியலாம். ஞானிகள் தவ அனுபவத்தால் கண்ட உயிரின் வடிவம் சிவலிங்க ஜோதியாகும்.
அரூபமான அந்த கடவுளுக்குரிய தோற்றம் பற்றி வேதம் கூறுவதாவது:
1. பிரம்மத்தின் நிலை இரண்டு. உருவம் + அருவம் = மறைவற்றது + மறைவானது;
ஓரிடத்தில் இருப்பது + எங்கும் பரந்து நிற்பது = பிரத்தியட்சம் + அபரோட்சம் (காண இயலாதது).
2. எங்கும் நிறைந்ததும், அறிவு, ஆனந்தம், அற்புத வடிவானதும் ஆன பரம்பொருளை, பரம சாந்த குணம் கொண்ட நீல கண்டனும், முக்கண்ணனும், உமையவளுடன் கூடியவனும், பிரபுவுமாகிய பரமேஸ்வரனை தியானிப்பவன் அறியாமை என்னும் இருளைக் கடந்த நிலையை அடைகிறான்.
- யஜூர் வேதம், கைவல்ய உபநிஷதம்
இதில் இருந்து பிரம்மத்தின் தோற்றம் என்பது, உமையவளுடன் உறைந்திருக்கும் நடராஜரே என்பது தெளிவாகும். ஆனால் அழித்தல் தொழில் புரியும் ருத்திரனை நடராஜராக கருதும் நடைமுறை இருந்து வருகிறது. படைப்பின் தொடக்கத்தில் நடராஜரும், உமையவளும் தோன்றினர் என்றும் அதன் பிறகே சதாசிவன் (அருளல்), மகேஸ்வரன் (மறைத்தல்), ருத்திரன் (அழித்தல்), திருமால் (காத்தல்), பிரமன் (படைத்தல்) ஆகிய ஐந்தொழில் தெய்வங்கள் தோன்றினர் என்பதற்குரிய ஆதாரங்கள் உண்டு. இப்போது வேதங்களின் அடிப்படையில் தேவாரம், திருவாசகத்தில் உள்ள சான்றுகளைக் காண்போம்.
திருஞானசம்பந்தர் தேவாரம்
கடவுள் (அரூபமான) ஒருவனே. (அவனே) உருவமுடைய நடராஜராக விளங்குவதால், அருவம், உருவம் ஆகிய இரண்டு நிலைகளை உடையவராகவும், ஜோதி சொரூபமான சிவலிங்க வடிவ உயிராக விளங்குவதால், மூன்று நிலைகள் உடையவராகவும் இருக்கிறார். அவரே நான்கு வேதங்களையும் அருளியவர்.
எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
அப்பர் தேவாரம்
பஞ்ச பூதங்களாக விளங்குபவர் கடவுள். உருவமற்ற பரப்பிரம்மமாகவும், உருவமுடைய நடராஜராகவும் அவன் விளங்குகிறான்.
நிலம் துக்கம் நீர்வளி தீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்.
மேலும், உடலை இயக்குபவன் அவனே; உயிராக விளங்குபவனும் அவனே; உலகில் தவம் செய்வோருக்கு முத்தியளிப்பவன் அவன் ஒருவனே என்பதை
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக்கெல்லாம்
என பாடியுள்ளார்.
சுந்தரர் தேவாரம்
மூவரென இருவரென முக்கண்ணுடைமூர்த்தி ஏகமான கடவுள், அரூபமாகவும், உருவம் கொண்ட நடராஜராகவும், உயிரின் வடிவமான சிவலிங்க ஜோதியாகவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.
மாணிக்கவாசகரின் திருவாசகம்
அரூபமான பரப்பிரம்மமாகவும், உருவமுடைய நடராஜராகவும் விளங்குபவனே போற்றி. நீ பொருந்தியிருக்கும் கருணை மலையாகிய பிரம்மரந்திரமே போற்றி. அதனுள்ளே யோக நிலையை கடந்து, துரியாதீதம் என்ற அடுத்த நிலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவலிங்க வடிவ உயிரே போற்றி.
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
இவற்றில் இருந்து கடவுள் ஒருவரே என்றும், அவருடைய நிலைகள் மூன்று என தேவாரம், திருவாசகம் விளக்குகின்றன.

சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
kamalakkannan1932@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X