மணக்கோலத்தில் சூரியன்
ஜனவரி 26,2022,15:54  IST

நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் மூலவராக அருள்புரிகிறார். உஷா, பிரத்யுஷா தேவியருடன் மேற்கு பார்த்தபடி மணக்கோலத்தில் காட்சி தரும் இவரை ஞாயிறன்று தரிசிப்பது சிறப்பு.
தொழுநோயால் அவதிப்பட்ட காலவ முனிவர் நவக்கிரகங்களை வழிபட்டார். அவர்களும் முனிவருக்கு அருள்புரிந்தனர். இதையறிந்த பிரம்மா, ''நவக்கிரகங்களே! சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன் தருமாறு கட்டளையிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் காலவ முனிவரின் நோயை போக்கும் அளவுக்கு உரிமை எடுத்து விட்டீர்கள். எனவே முனிவரின் தொழுநோய் உங்கள் ஒன்பது பேருக்கும் ஏற்படட்டும்'' என சபித்தார். விமோசனம் வேண்டி நவக்கிரக நாயகர்கள் பூமிக்கு வந்தனர். எருக்கு வனமான இத்தலத்தில் தங்கி சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். அதன் பயனாக விமோசனம் பெற்றனர். இதனடிப்படையில் நவக்கிரகங்களுக்கு இங்கு கோயில் உருவானது. இதில் சூரியன் மூலவராக இருப்பதால் 'சூரியனார் கோயில்' எனப் பெயர் பெற்றது.
சூரியனுக்கு இந்தியாவில் இரு தலங்களில் கோயில் உள்ளது. வடக்கே ஒடிசாவிலுள்ள கோனார்க். தமிழகத்தில் சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இங்கு மூலவராக தேவியருடன் சூரியன் இருப்பது சிறப்பு. கைகளில் செந்தாமரை மலரை ஏந்தியுள்ளார். கருவறைக்கு எதிரில் வாகனமான குதிரை உள்ளது. சூரியனின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக குதிரைக்கு முன்பு குருபகவான் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இங்கு வருபவர்கள் இத்தலத்திற்கு அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் தரிசித்த பின்னரே சூரியனார் கோயிலுக்கு வர வேண்டும். சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய தோஷம் உள்ளவர்கள் ஞாயிறன்று சூரிய ேஹாரையில் (காலை 6:00 - 7:00 மணி) விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி ஞாயிறு, பொங்கல், ரதசப்தமி உற்ஸவம், தை அஷ்டமி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 - பகல் 11:00 மணி மாலை 4:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 0435 - 2472 349
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் 12 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 0435 - 242 0276

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X