சூரியக்கோயில்கள் சுற்றுலா
ஜனவரி 26,2022,15:58  IST

புகழ் மிக்க சூரியக்கோயில்கள் சில இடம் பெற்றுள்ளன.

கயா தட்சிணார்கா கோயில்
பீகார் மாநிலம் கயாவில் உள்ள தட்சிணார்கா கோயிலில் கிரானைட் கல்லால் ஆன சூரியன் சிலை உள்ளது. இவர் சட்டையும், இடுப்பில் வளையமும், காலில் பூட்சும் அணிந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடக்கும். 13ம் நுாற்றாண்டில் ஆந்திரா வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாபருத்ரா என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார். கோயிலின் முன் 'சூர்ய குண்டா' என்னும் குளம் உள்ளது. இந்த புனிதநீரைக் கொண்டு பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர். முன்னோருக்கு வழங்கும் தர்ப்பணப் பொருளை சூரியனே சேர்ப்பதாக ஐதீகம். எனவே இங்கு வழங்கும் தர்ப்பணம் முன்னோரை உடனடியாக சென்றடையும் என்பர். கோயில் அருகில் விஷ்ணுபாதா கோயில் உள்ளது. சென்னையிலிருந்து கயாவுக்கு ரயில் உள்ளது. துாரம் 1782 கி.மீ.,

யூனோ பாலாஜி கோயில்
மத்தியப் பிரதேசம் டட்டியா மாவட்டத்தில் உள்ள யூனோவில் பாலாஜி சூரியக்கோயில் உள்ளது. இங்குள்ள சூரியனை பிரம்மண்யதேவ் என்கின்றனர். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சிகிச்சைக்கு முன் இங்கு வழிபடுகின்றனர். குஷ்டம், தோல் நோயில் இருந்து நிவாரணம் பெற சிறப்பு வழிபாடு நடக்கிறது. கருப்பு நிறத் தகடுகளால் மூடப்பட்ட செங்கல் மேடையில் சூரியன் சிலை உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜான்சி செல்லும் ரயில்களில் சென்றால் டட்டியா அல்லது ஜான்சியில் இறங்கலாம். இங்கிருந்து 252 கி.மீ., துாரம் பஸ் அல்லது காரில் செல்லலாம். மொத்த துாரம் 2050 கி.மீ.,

சூர்யபஹார் கோயில்
அசாம் மாநிலம் கோல்பரா அருகே சூர்பஹார் மலையில் சூரியக்கோயில் உள்ளது. இது வட்ட வடிவ மாளிகை போல் இருக்கும். புராணங்களில் கூறியுள்ளபடி சூரியனுக்குரிய 12 சித்திரங்களும், அவற்றின் நடுவில் அவரது தந்தை காஷ்யப முனிவரின் சித்திரமும் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூரியனின் கையிலும் இரு ஆயுதங்கள் உள்ளன. தொல்லியல் துறையின் கீழ் இக்கோயில் செயல்படுகிறது. மலையடிவாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. சூர்யபஹார் கோயில் சிதிலமாகி விட்டாலும், அதன் கலையம்சம் கலையாமல் உள்ளது. சென்னையில் இருந்து 2579 கி.மீ., சென்ட்ரலில் இருந்து நேரடியாக ரயில்கள் உள்ளன.

கோனார்க் சூரியக்கோயில்
சூரியக்கோயில்களில் புகழ் மிக்கது ஒடிசா கோனார்க் கோயில். கோனார்க் என்பதற்கு 'மூலையில் சூரியன்' என்பது பொருள். 13ம் நுாற்றாண்டு கட்டிடக்கலைக்கு உதாரணமாக திகழும் இதைக் கட்டியவர் நரசிம்ம தேவா. சூரியனைச் சுமந்து வரும் ஏழுகுதிரைகள், வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கிறது. இதிலுள்ள 24 பெரிய சக்கரங்கள், 24 மணி நேரத்தைக் குறிக்கிறது. ஏழு நாட்களும் 24மணி நேரமும் உழைப்பவர் சூரியன். இங்கிருந்த சூரியன் சிலையை போர்ச்சுக்கீசிய மாலுமிகள் கடத்தி விட்டனர். தலைநகரமான புவனேஸ்வரில் இருந்து 64 கி.மீ., பூரியில் இருந்து 35 கி.மீ., துாரம். சென்னையில் இருந்து 1261 கி.மீ.,

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X