ஏழைகளுக்கு உதவிய இளகிய உள்ளம்
பிப்ரவரி 18,2011,10:39  IST

பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்து விளங்கினார்கள். தங்கள் வீட்டுக்கு வரும் எந்தப் பொருளையும் பொன்னையும் இருட்டுவதற்கு முன் அள்ளிக் கொடுத்தால் தான் அவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பொருள் கேட்க யாரும் வராவிட்டாலும், அவர்களே தேடிச்சென்று அழைத்து வந்து கையில் இருப்பதைக் கொடுப்பார்கள். அல்லாஹ் அருளும் யாவையும், அவற்றில் மலிவான பார்லிமாவு, பேரீச்சம்பழம் ஆகியவற்றிலும் கூட, தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, மற்றதை வாரி வழங்கிவிடுவதே அவர்கள் வழக்கம். வருடம் முழுவதற்கும் தங்களுக்காக சேமித்து வைத்திருக்கும் உணவுக்குவியலைக் கூட ஏழைகளுக்கு அள்ளி வழங்க அவர்கள் தயங்கியதில்லை. ஒருசமயம், பெண்மணி ஒருவர் சால்வை ஒன்றை நாயகம் அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர், ""இந்த சால்வை அழகாக இருக்கிறது,'' என்றார். உடனே நபிகளார் அந்த சால்வையை அவ்வாறு சொன்னவரிடமே கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சால்வையைப் பெற்றவரிடம்,""அந்தச் சால்வை நாயகம் அவர்களுக்கு எத்துணை தேவையாய் இருந்தது என்பதை நீர் அறிவீரா? மேலும், யார் எது கேட்டாலும், அதைக் கொடுக்க அவர்கள் மறுப்பதில்லை என்பதும் உமக்கு தெரியுமல்லவா?'' என்று கடிந்து கேட்டார்கள். அந்த மனிதர் சொன்னார். ""அதை நானும் அறிவேன். அவர்கள் கையினால் பெற்ற இந்த சால்வையில் அருள் உள்ளது. நான் இறந்ததும், என் சடலம் பொதியப்படுவதற்காகவே இதை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்,'' என்று உருக்கமாகக் கூறினார். அரபு தேசத்தில் தோட்டங்கள் சிறந்த சொத்துக்களாக கருதப்பட்டன. மகைரிக் என்பவர், அண்ணலார் அவர்களுக்கு ஏழு தோட்டங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவற்றை நபிகளார் அவர்கள் தருமச்சொத்துக்களாக (வக்பு) செய்து, அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயை ஏழை எளியவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து விட்டார்கள். மற்றொரு சம்பவமும் அவரது வள்ளல் தன்மைக்கு உதாரணம். நாயகம்(ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். தம் நண்பர்களுக்கு விருந்தளிக்க அவரிடம் ஏதும் இல்லை. எனவே அவர் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார். அவர்கள் தங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு மாவுமூடையை அவர்களிடம் கொடுத்து விட்டார்கள். அன்று உணவுக்கு கூட அவர்கள் வீட்டில் ஏதும் இல்லாத நிலையில் இந்த தர்மத்தைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X